கொரோனா இரண்டாவது அலை வந்துவிட்டது. எல்லோரும் வீட்டிலேயே முடங்கிவிட்டோம். குறிப்பாகப் பெண்களுக்குத்தான் எவ்வளவு சிரமங்கள், எவ்வளவு வேலைகள். வீடு, குழந்தைகள், கணவர், சமையல் என்று அப்பப்பா… நாள் முழுவதும் ஓய்வில்லாத வேலை. இதில் எப்படி நம்மை அழகாகப் பராமரித்துக்கொள்வது என்ற கவலை வேறு. நமக்காகவும் சிறிது நேரம் ஒதுக்கினால் அந்தக் கவலையின்றி நிம்மதியாக இருக்கலாம்.
சில பெண்களுக்கு முகத்தில் அதிக முடிகள் வளர்ந்திருக்கும். உதட்டின் மேல் மீசை போன்று அடர்ந்திருக்கும். கன்னங்களில்கூட ரோமங்கள் இருக்கும். சரி, இவற்றை யெல்லாம் எப்படி நீக்குவது?
பெண் குழந்தைகள் சிலருக்குப் பிறக்கும்போதே உடல் முழுவதும் ரோமங்கள் இருக்கும். குழந்தைக்கு ஐந்து மாதங்கள் ஆனவுடன்தான் நன்றாகத் தேய்த்துக் குளிக்கவைக்க முடியும். அந்தச் சமயத்தில் நாம் குழந்தைகள் உடலில் கடுகு எண்ணெயைத் தேய்த்து சிறிது நேரம் இள வெயிலில் வைத்து அரை மணி நேரம் கழித்து மஞ்சள் தேய்த்துக் குளிக்கவைக்கும்போது உடம்பில் உள்ள பூனை முடிகள் எனப்படும் ரோமங்கள் உதிர ஆரம்பிக்கும். இப்படியாக வாரத்தில் இரண்டு நாட்கள் செய்துவர வேண்டும். மேலும், உடம்பில் முடி வளராமல் தடுக்க வெள்ளை கொண்டைக்கடலை 1 பங்கு, கடலை மாவு அரை பங்கு, பச்சைப் பயறு 1 பங்கு, நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் ரோஜா இதழ் அரை பங்கு, வெந்தயம் அரை பங்கு, கஸ்தூரி மஞ்சள் அரை பங்கு இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து வெயிலில் காய வைத்து மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதில் சிறிதளவு எடுத்து பன்னீரில் கலந்து உடம்பு முழுவதும் தேய்த்து அரை மணி நேரம் ஊறவைத்துப் பின்னர் காய்ந்தவுடன் சிறிது, சிறிதாக நீர்விட்டு நன்றாகத் தேய்த்துக் குளிப்பாட்ட அனைத்து முடிகளும் கொஞ்சம் கொஞ்சமாக உதிர்ந்து மென்மையான சருமமாக மாறிவிடும். இப்படியாகக் குழந்தைப் பருவத்தில் இருந்து செய்து வரும்போது, பெரிய பெண்ணாக வளரும்போது முடிகள் இல்லாத, மென்மையான, அழகான சருமம் கிடைத்துவிடும்.
சரி, குழந்தைப் பருவத்தில் செய்யவில்லை. இப்போது முடிகள் முகத்திலும், உடம்பிலும் அதிகமாக இருக்கின்றன. என்ன செய்யலாம்? நிறைய பேருக்கு உதட்டின் மேல் மற்றும் கன்னங்களில் நிறைய ரோமங்கள் இருக்கும். அவர்கள் வீட்டிலேயே இருக்கும் பொருட்களைக் கொண்டு அவற்றைப் போக்கலாம்.
1) நட்ஸ் சிறிதளவு எடுத்து சிறிது நீர்விட்டு வேக வைத்துக் குழைத்துக்கொள்ளுங்கள். அது சிறிது கெட்டியாக இருக்க வேண்டும். அதை எடுத்து உதட்டின் மேல் பகுதி மற்றும் கன்னங்களில் பூசி, அரை மணி நேரம் அப்படியே விட்டுவிட வேண்டும். பிறகு காய்ந்த உடன் லேசாகத் தண்ணீர் தெளித்து அழுத்தித் தேய்க்க வேண்டும். பின்னர் நன்றாகக் கழுவிவிட்டால் முடிகள் அனைத்தும் உதிர்ந்துவிடும். இவ்வாறாக வாரத்தில் இரண்டு முறை செய்ய ரோமங்கள் அனைத்தும் படிப்படியாக உதிர்ந்துவிடும்.
2) அரிசி மாவுடன் தேன் கலந்து கெட்டியான பதத்தில் பிசைந்து அதை உதட்டின் மேலும் கன்னங்களிலும் தடவி நன்றாகக் காய்ந்ததும் கழுவிவிடலாம்.
3) முல்தானி மெட்டி, கஸ்தூரி மஞ்சள், எலுமிச்சைச் சாறு ஆகியவற்றைச் சேர்த்து வாரத்தின் ஏழு நாட்களும் முகத்தில் உள்ள முடிகள் மூடும்படி தடவ வேண்டும். அரை மணி நேரம் கழித்து, வெதுவெதுப்பான தண்ணீர் தெளித்துக் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்த்து எடுக்க வேண்டும்.
இவை எல்லாவற்றையும் தொடர்ச்சியாகச் செய்து முகத்தில் முடி வளர்ச்சியைக் கட்டுப்படுத்தலாம். இப்படி நிறைய வழிகள் இருந்தாலும் நமக்கு உடனே பலன் கிடைக்க வேண்டுமா? அழகு நிலையங்களில் செய்யப்படும் வாக்ஸிங் எனப்படும் ரோம நீக்க சிகிச்சை செய்துகொண்டால் உடனடிப் பலன் கிடைக்கும். தொடர்ச்சியாக வாக்ஸிங் செய்யும்போது முடியின் வேர்க் கால்கள் வலுவிழந்து காலப்போக்கில் முடிகள் இல்லாமல் சுத்தமான, அழகான, வழுவழுப்பான சருமத்தைப் பெறுவது உறுதி.