ராமேஸ்வரம் அருகே வடகாடு மீனவ கிராமத்தை சேர்ந்த சந்திரா(45) கடற்பாசி சேகரிக்கும் தொழில் செய்துவருகிறார். இவர், கடந்த 24ஆம் தேதி வழக்கம்போல் கடற்பாசி சேகரிக்க சென்று நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் பதட்டமடைந்த அவரது உறவினர்கள் ராமேஸ்வரம் நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து, சந்திராவை தேடிய காவல்துறையினருக்கு காட்டுப்பகுதியில் பாதி எரிந்த நிலையில் இருக்கும் சந்திராவின் உடல் கிடைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து, காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அடையாளம் தெரியாத வடமாநிலத்தவர்கள் சந்திராவை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்ததும், உடலை மறைக்கும் நோக்கத்தோடு தீ வைத்து எரித்ததும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த சந்திராவின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் குற்றவாளிகளை கண்டுபிடித்து உரிய தண்டனை வழங்கக்கோரி ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.