டெல்லி நாடாளுமன்ற மாநிலங்களவையில் மொத்தம் உள்ள 250 உறுப்பினர்களில், தமிழகத்தைச் சேர்ந்த 18 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இவர்களில் திமுகவை சேர்ந்த டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், அதிமுகவை சேர்ந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், ஏ.நவநீதகிருஷ்ணன், ஏ.விஜயகுமார் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் அடுத்த ஜூன் மாதம் 29ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. அதேபோல, இந்தியா முழுவதும் உள்ள 14 மாநிலங்களைச் சேர்ந்த 51 உறுப்பினர்களின் பதவிக்காலம் விரைவில் முடியவுள்ளது. எனவே காலியாக உள்ள மொத்தம் 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிகளுக்கு வரும் ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடக்க இருப்பதாக சமீபத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அதன்படி, தமிழகத்தில் மொத்தம் ஆறு இடங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. ஏற்கனவே, திமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட சு.கல்யாணசுந்தரம், கிரிராஜன், ராஜேஷ்குமார் ஆகியோர் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்தநிலையில், அதிமுக கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்கள் சி.வி.சண்முகம், ஆர்.தர்மர் நேற்று மனுதாக்கல் செய்தனர். அதேபோல, காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரமும் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். நாடாளுமன்ற தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்யும் பணி இன்று மாலையுடன் முடியவுள்ளது. மேலும், 16 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை பாரதிய ஜனதா கட்சியும் வெளியிட்டிருந்தது. முன்னதாக, இந்தத் தேர்தல் நடத்தும் அதிகாரியாக, தமிழ்நாடு சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனையும், உதவித் தேர்தல் அதிகாரியாக, சட்டப்பேரவை துணை செயலாளர் ரமேசையும் இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. மேலும், தேர்தல் பார்வையாளராக தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரத சாஹூ செயல்படுகிறார். வேட்புமனு மீதான பரிசீலனை ஜூன் 1ஆம் தேதி நடக்க இருக்கிறது. வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் ஜூன் 3ஆம் தேதி ஆகும்.