காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சுமார் 900க்கும் மேற்பட்ட தெருக்களில் உள்ள மின்விளக்குகளை பராமரிப்பதற்கான ஒப்பந்தம் அண்மையில் விடப்பட்டுள்ளது. இந்தநிலையில், காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெரும்பாலான இடங்களில் மின்விளக்குகளின் வயர்கள் பெட்டிக்குள் வைத்து மூடப்படாமல் ஆபத்தான நிலையில் வெளியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனால், திறந்திருக்கும் வயர்கள் மூலம் மின்சாரம் பாய்ந்து கால்நடைகள் உயிரிழப்பது சமீபகாலமாக நடந்து வருகிறது. இந்தநிலையில், கிழக்கு ராஜவீதி பகுதியில் அமைந்துள்ள தெருவிளக்கு மின்கம்பத்தின் வெளியில் இருந்த வயரை உணவு பொருள் என்று நினைத்து கருவுற்று இருந்த பசு ஒன்று வாய் வைத்தது. இதனையடுத்து வயரின் வழியே மின்சாரம் பாய்ந்து துடிதுடிக்க அந்த பசு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. பசுவின் நிலை கண்டு அதிர்ச்சியடைந்த மாட்டின் உரிமையாளர் மற்றும் பொதுமக்கள் வாயில்லா ஜீவனுக்கு நேர்ந்த இந்தகதிக்கு காரணம் மாநகராட்சி ஊழியகள் தான் என்று சம்பவ இடத்திற்கு வந்த தெருவிளக்கு பராமரிப்பு ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து தகவல் அறிந்து வந்த சிவகாஞ்சி போலீசார், ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென உறுதியளித்தன் பெயரில் பொதுமக்கள் அந்த இடத்தில் இருந்து கலைந்து சென்றனர்.