சமத்துவ ஆட்சியைக் கொடுத்துக்கொண்டிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி, இன்று அதற்கு உதாரணமாக இரண்டு செயல்களைச் செய்திருக்கிறது. சென்னை திருமுல்லைவாயிலில் உள்ள நரிக்குறவர் காலனிக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்குள்ள அவ்வின மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அங்குள்ளவர்களுடன் உரையாடினார். பிறகு, அங்குள்ள மாணவி ஒருவரின் அழைப்பை ஏற்று அவரது வீட்டுக்குச் சென்ற முதல்வருக்கு பாசி மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. அத்துடன் அம்மாணவி வீட்டில் கொடுத்த உணவை அருந்திய முதல்வர், அதை மாணவிக்கும் ஊட்டிவிட்டு மகிழ்ந்தார். காரம் அதிகமாய் இருப்பதாகக் கூறிய முதல்வர் அதை விரும்பிச் சாப்பிட்டார். நிகழ்வுக்குப் பிறகு பேசிய முதல்வர், ‘இதுபோன்ற விழாவில் பங்கேற்பதுதான் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும், விளிம்பு நிலை மக்களுக்கு என்றைக்கும் திமுக அரசு துணை நிற்கும்’ என்றும் பேசினார். அதுபோல், இன்றைய தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருநங்கைகளையும் சந்தித்துப் பேசினார். அவரது வீட்டுக்குச் சென்ற திருநங்கைகளை, முதல்வர் ஸ்டாலின் வரவேற்று விருந்தினர்கள் அறையில் அமரவைத்தார். ‘எப்படி இருக்கீங்க..’ என அவர்களிடம் நலம் விசாரித்த முதல்வர், அவர்களுக்கு தேநீர் வழங்கி உற்சாகப்படுத்தினார். அவர்களும் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். இந்த இருவேறு நிகழ்வுகளால், முதல்வர் ஸ்டாலின் ஒரேநாளில் புகழப்பட்டு வருகிறார். மேலும், சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட இருவேறு பிரிவினருடன் முதல்வர் சமமாக அமர்ந்து சாப்பிட்ட சம்பவமும், தேநீர் குடித்த நிகழ்வும் பெரியளவில் கவனம் பெற்றுள்ளது. இந்த இரு படங்களும் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றன.