இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக, நிலுவையில் உள்ள சாலை மற்றும் பாலப் பணிகளை முடித்து, மக்களின் இன்னல்களைப் போக்கிட வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழகத்தில் சாலை மற்றும் பாலப் பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியது: “தமிழக அரசு தொழிற்சாலைகளுக்கான உள்கட்டமைப்பில் அதிக கவனம் செலுத்தி வருவதால், பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
தொழிற்சாலைகளுக்கு உகந்த சூழ்நிலைகளான இடம் கையகப்படுத்தல், போக்குவரத்து வசதி, ஏற்றுமதிக்கான வசதிகள், உள் கட்டமைப்புகள் உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சவால்களை நாம் எதிர்கொண்டாலும், அத்தகைய சவால்களில் தீவிர கவனம் செலுத்தி, பிரச்சினைகளுக்கு இடம் தராமல், உலகளாவிய நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில்கள் தொடங்கவும், அதற்காக தொழில் முதலீடுகளைப் பெறவும் நாம் முழு அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டு வருகிறோம்.
அந்த அடிப்படையில்தான், தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டு காலமாக தொழில் முதலீடுகள் குவிந்த வண்ணம் உள்ளன. ஏற்கனவே, 5 பில்லியன் டாலர் அளவுக்கு தொழில் முதலீடுகளுக்கு உத்தரவாதம் தரப்பட்டுள்ள நிலையில், தமிழகம் தொழில் துறையில் எதிர்பார்த்த முதலீட்டை வெகு விரைவில் அடைந்துவிடும் என்று நாளேடுகள் தலையங்கம் வெளியிட்டுள்ளன. இவை அனைத்தும் உங்களது ஒத்துழைப்போடுதான் சாத்தியமாகிக் கொண்டிருக்கிறது. அதற்காக முதலில் நான் உங்களுக்கெல்லாம் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாநில நலனுக்கு, ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு சாலைகளும், பாலங்களும் தவிர்க்க இயலாத முக்கியத்துவத்தை பெற்றுள்ளன என்றால் அது மிகையல்ல. சீரான சாலைகளும், பாலங்களும் பயணங்களுக்கு மட்டுமல்ல. ஓட்டுமொத்த வளர்ச்சிக்கும் அது அடிப்படையான தேவை. இதனைக் கருத்தில் கொண்டுதான், கடந்த 10.5.2023 அன்று நடைபெற்ற கூட்டத்தில், தமிழகத்தில் நடைபெற்று வரும் அனைத்து சாலை மற்றும் பாலப் பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக உங்களுடன் கலந்தாய்வுக் கூட்டத்தை நடத்தினோம். அதன் விளைவாக பல பணிகளில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. அது ஓரளவுக்கு மனநிறைவை அளிக்கிறது. இருப்பினும் குறிப்பிட்ட சில இடங்களில் தொடர்ந்து தொய்வினையும் காண முடிகிறது.
பொதுவாக, சாலைப் பணிகளும், பாலப் பணிகளும் நடைபெறும் காலங்களில் அப்பகுதிகளில் போக்குவரத்து உள்ளிட்ட பல சிரமங்களை பொது மக்கள் சந்திக்க நேரிடும் என்பதை நான் சொல்லிதான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. அத்தகைய தற்காலிக சிரமங்கள், நிரந்தர வசதிக்காகத்தான் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். இருப்பினும், சாலை மற்றும் பாலப் பணிகளை மேற்கொள்ளும்போது, தேவையற்ற தாமதங்கள் ஏற்பட்டால், மக்கள் மேலும் சிரமத்திற்கு ஆளாகக்கூடும்; அதனால், நமது அரசுக்கு அவப்பெயர் ஏற்படக்கூடும் என்பதை கருத்திலே கொண்டு, உரிய காலத்திற்குள் பணிகளை முடித்திட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.