திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த கே.பந்தரப்பள்ளியை சேர்ந்தவர் அலமேலு(70). கணவர் இறந்த நிலையில் தனியாக ஆடு மேய்த்து வந்த இவருக்கு சொந்தமாக ஒன்பது ஆடுகள் இருந்தன. இந்த 9 ஆடுகளையும் நேற்று காலை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று, மீண்டும் மாலை 6 மணியளவில் வழக்கம்போல் வீட்டின் அருகே உள்ள கொட்டகையில் அடைத்துவிட்டு சென்றுள்ளார். பின்னர், காலை எழுந்து வந்து பார்க்கும்போது கொட்டகையில் அடைப்பட்டிருந்த ஆடுகள் அனைத்தும் மர்மமான முறையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அருகில் சென்று பார்க்கும் போது மர்ம விலங்கு ஏதோ கடித்து ஆடுகள் பரிதாபமாக பலியாகியிருப்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அந்த மர்ம விலங்கு, சிறுத்தையாக இருக்கலாம் எனவும், அதனை உடனடியாக வனத்துறையினர் பிடிக்க வேண்டும் என்று அந்தபகுதி கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். இந்தநிலையில், கணவனை இழந்து 9 ஆடுகளை மட்டுமே வாழ்வாதாரமாக நம்பி வாழ்ந்து வந்த அலமேலு, தனக்கு மாவட்ட நிர்வாகம் ஏதாவது நிதி உதவி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.