ஜோசபின் ஆரோக்கிய மேரி. தேனி வளர்த்து கோடீஸ்வரி ஆனவர். தொழில் தெரியாதவர்களுக்கும் கற்றுக் கொடுத்து செல்வம் சேர்க்க வைப்பவர்.
ஜோசபின் ஆரோக்கிய மேரி ஒரு குடும்பப் பெண்ணாகத்தான் இருந்தார். குழந்தைகளுக்கு பள்ளிச் செலவுக்கு மாதம் ஒரு இரண்டாயிரம் ரூபாய் கிடைத்தால் போதும் என்று விரும்பினார். இதற்காக கிரிஷி விக்யான் கேந்திராவில் அவர் பயிற்சி பெற்றார். மார்த்தாண்டத்திலிருந்து பெட்டிகளில் இருக்கும் தேன்கூடுகளைக் கொண்டு வந்தார்.
ஒரு தேன்கூட்டில் சுமார் 10 ஆயிரம் தேனிக்கள் இருக்கும். அவை வெளியே சென்று தேன் சேகரித்துக் கொண்டு வரும். அது பெட்டியில் உள்ள ஒரு தடுப்பானில் சேகரம் ஆகும். ஒரு இயந்திரம் கொண்டு அந்தத் தேனை வடிக்க வேண்டும்.
2006இல் சிவகங்கையில் தன் தந்தையின் பண்ணையில் ஒரு பத்து தேன் கூட்டுப் பெட்டிகளில் தேனி வளர்த்தார் ஜோசபின். மாதம் 10 கிலோ தேன் வடிக்க முடிந்தது. அதன் மூலம் மாதம் ரூ.2000 கிடைத்தது. 2009இல் 100 பெட்டிகளை வைத்துக் கொண்டு வளரலாம் என்ற நினைத்த போது அவருக்கு அவருடைய தங்கை பண உதவி செய்தார்.
‘அந்த சமயத்தில் என் 12 வயது மகள் கீழே விழுந்தாள். அவளுக்கு எலும்புப் புற்றுநோய் என்று கண்டறியப்பட்டது. மருத்துவமனையிலும் தேனிப் பண்ணையிலும் என் நேரம் கழிந்தது. சிகிச்சைக்கு சகோதரிகள் உதவினார்கள். மூன்று ஆண்டுகளில் மகள் புற்றுநோய்க்கு பலியானாள்’ என்று தொண்டையை அழுகை அடைக்கக் கூறுகிறார் ஜோசபின்.
மகள் இழப்பை ஏற்க முடியாத ஜோசபினின் கணவரும் மனம் உடைந்தார். நரம்பியல் நோய்க்கு ஆட்பட்டு அவரும் அடுத்த ஆண்டே இறந்துபோனார்.
சில மாதங்கள் குலைந்துபோன ஜோசபின் மீண்டு எழுந்து வியாபரத்தைக் கவனித்தார். 2010இல் அவருக்கு கனரா வங்கியின் ரூ.10 லட்ச கடன், காதி மற்றும் ஊரகத் தொழில் ஆணையத்தின் ரூ.3 லட்ச மான்யம் கிடைத்தது. 1000 பெட்டிகளைக் கொண்ட தேனிப் பண்ணைகளை அவர் அமைத்தார்.
அதன் மூலம் அவருக்கு மாதம் சுமார் ஆயிரம் லிட்டர் தேன் அறுவடை செய்யும் சூழல் உருவானது. ‘அப்போதுதான் என்னுடைய விபிஸ் தேன் பிராண்ட் வடிவம் பெற்றது’ என்கிறார் ஜோசபின்.
‘எங்கு போய் விற்கச் சென்றாலும், ஏற்கனவே இருக்கும் தேன் பிராண்டுகளைத்தான் மக்கள் விரும்புகிறார்கள் என்று சொல்வார்கள்’ என்று தன் தொடக்கக் கால அனுபவங்களை சற்றுச் சோர்வோடு விவரிக்கிறார் ஜோசபின்.
உடல் நலத்திற்கு வித்திடும் துளசி தேன், பூண்டு தேன், மாம்பழத்தேன், நெல்லித்தேன் என்று பல வகை தேன் தயாரித்து அவர் விற்பனைக்கு வைத்தார். அது மிகப் பெரிய வெற்றி பெற்றது. அவை மீண்டும் வேண்டும் என்று ஆர்கனிக் கடைக்காரர்களும் ஜோசபினிடம் ஆர்டர் கொடுக்கத் தொடங்கினார்கள்.
‘தேனிக்கள் எங்கு எப்போது கூடும் என்பது தனி ஆராய்ச்சி. மலைகள் நிறைந்த இடம், பூக்கள் நிறைந்த இடம், ஏரிகள் நிறைந்த இடம் என்று தேனிக்கள் பல இடங்களில் கூட்டமாய் கூடும். அங்கெல்லாம் சென்று நாங்கள் தேனிக்களுக்கான பெட்டிகளை வைப்போம்’ என்கிறார் ஜோசபின்.
‘தேன் கூடுகளை விளைநிலங்களின் அருகில் வைத்தால் தேனிக்கள் உரங்களைத் தின்று மடிந்துவிடும்’ என்று எச்சரிக்கிறார் அவர்.
‘காடுகளில் வைக்கப்படும் தேன் கூடுகள் மூலம் கலப்படம் இல்லாத ஆர்கனிக் தேனை உற்பத்தி செய்ய முடிகிறது’ என்று பெருமிதம் கொள்கிறார் ஜோசபின். தமிழ்நாட்டில் மிகவும் விரும்பக் கூடிய தேன் பிராண்டாக அவருடைய விபிஸ் தேன் பிராண்ட் விளங்குகிறது.
அவருடைய நிறுவனத்தில் சுமார் 350 ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். மாதந்தோறும் இரண்டு நாட்கள் தேனி வளர்ப்பு குறித்து ஜோசபின் வகுப்புகள் எடுக்கிறார். இதன் மூலம் சுமார் 50,000 பேர் பயிற்சி பெற்று தேனி வளர்த்து பலன் பெற்றுவருகிறார்கள்.
தேன் கூடுகளுக் கான பெட்டிகள் தயாரிக்கும் தொழிற் சாலையையும் அவர் நடத்துகிறார். காலை ஆறு மணிக்குத் தொடங்கும் ஜோசபினுடைய பணி முடிய இரவு எட்டு மணி ஆகிவிடுகிறது.
இப்போது சுமார் 10,000 தேன் கூடுப் பெட்டிகளை ஜோசபின் வைத் திருக்கிறார். அடுத்த ஆண்டு இதை இரண்டு மடங்கு ஆக்க வேண்டும் என்று அவர் இலக்கு வைத்திருக்கிறார். மாதம் இப்போது 10,000 கிலோ தேன் வடிக்கிறார் அவர்.
‘மனித உடல்நலத்திற்குத் தேன் மிகவும் முக்கியமானது’ என்று கூறுகிறார் ஜோசபின்.
‘வீட்டிற்கு ஒரு தேனிப் பெட்டி, குடும்பத்திற்கு ஆயுள் கெட்டி’ என்ற சுலோகத்தை முதன்மையாக வைத்து தேனி வளர்ப்பு பற்றி மாதத்திற்கு இரண்டு நாட்கள் வகுப்புகள் எடுக்கிறார் ஜோசபின்.
தேனி வளர்ப்புக்காக 16 தேசிய விருதுகளைப் பெற்றிருக்கிறார் அவர். 2015இல் சிறந்த தேனி வளர்ப்பாளருக்கான தேசிய விருது அவருக்குக் கிடைத்தது. நம் நாட்டிற்கு உணவு உற்பத்தி செய்வதுதான் முக்கியமானது என்று தெரிவிக்கிறார் ஜோசபின்.
இப்போது அவருடைய தொழிலின் ஆண்டு மதிப்பு சுமார் ரூ.12 கோடி ஆகும்.
‘தேனி கொட்டினால்கூட அது உடல் நலத்திற்குத்தான்’ என்று சிரிக்கிறார் அவர். சீனா போன்ற நாடுகளில் தேனியைக் கொட்ட வைக்கும் சிகிச்சைக்காகப் பணம் வசூலிக்கிறார்கள் என்று தகவல் தருகிறார் அவர். இதுவரை ஜோஸ்பினை பல ஆயிரம் முறை தேனிக்கள் கொட்டியிருக்கிறதாம்.
2014இல் ஒரு விபத்தைச் சந்தித்தபோது தனக்கும் தன் தொழிலுக்கும் உதவிகரமாக இருந்த சுகமாறனை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டார் ஜோசபின்.
ஜோசபினின் மகன் சீனாவில் ஐந்தாம் ஆண்டு மருத்துவம் படிக்கிறார்.
‘எல்லோருக்கும் உடல் நலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதுதான் என் இலக்கு’ என்று உறுதி காட்டுகிறார் ஜோசபின்.
-ஜோசபின் ஆரோக்கிய மேரி