காஞ்சிபுரம் மாவட்டம் வேண்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட மதுரபாக்கம் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (40). கூலித் தொழிலாளியான இவருக்கு சீதா (35) என்ற மனைவியும், 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்தநிலையில் கோவிந்தராஜ் வேலைக்கு செல்லாமல், குடிக்கு அடிமையாகி சுற்றி வந்துள்ளார். இதன் காரணமாக கணவன் மனைவி குழந்தைகளுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதற்கிடையில் கடந்த சில மாதங்களுக்கு முன் கோவிந்தராஜின் 2ஆவது மகள் மர்மமான முறையில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இந்தநிலையில் நேற்று சீதா கூலி வேலைக்கு சென்றிருந்த போது, மகள்கள் இருவரும் பள்ளிக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது நண்பகல் வேளையில் வீட்டுக்கு வந்த கோவிந்தராஜ் மகள்களிடம் மதுபோதையில் தகராறு செய்துள்ளார். மகள்களும் தந்தையின் குடிபழக்கம் குறித்து தட்டிக் கேட்டதைத் தொடர்ந்து கடும் கோபமடைந்த கோவிந்தராஜ், வீட்டின் கதவை மூடிவிட்டு இரு மகள்களையும் அடித்து கொலை செய்துள்ளார். பின்னர், வீட்டின் கதவை வெளியில் மூடிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். பிறகு, வெளியில் சென்றிருந்த இளைய மகன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது தனது சகோதரிகள் ரத்த வெள்ளத்தில் மிதப்பதைப் பார்த்து கூச்சலிட்டதை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து ஒரகடம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்த இரண்டு சிறுமிகளின் உடல்களை மீட்டு செங்கல்பட்டு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், ”தனது இரு மகள்களை அடித்து கொலை செய்துவிட்டதாக” ஒரகடம் காவல் நிலையத்தில் சரணடைந்த கோவிந்தராஜிடம் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடித்துவிட்டு தினமும் தாயிடம் தகராறு செய்யும் தந்தையை தட்டிக்கேட்ட மகள்கள் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் வேண்பாக்கம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.