ஸ்மிருதி. 20 வயதில் மண்ணைப் பொன்னாக்கி தொழிலதிபர் ஆனவர். டெரகோட்டா என்கிற சுடுமண்ணில் அலங்கார நகைகள் செய்வதன் மூலம் லட்சக்கணக்கில் பணம் ஈட்டி வருகிறார் அவர்.
ஸ்மிருதி செய்த டெரகோட்டா நகைகள் சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளைச் சுற்றி வருகின்றன.
கோவையில் உள்ள துடியலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்மிருதி. அவர் பி.டெக். பேஷன் டெக்னாலஜி, மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். அவருடைய தந்தை ஓய்வுபெற்ற பேராசிரியர். அவருடைய தாய் இல்லத்தரசி.
‘எனது ஒன்பதாம் வகுப்பின் போது டெரகோட்டா நகைகளின் தொன்மையை பற்றித் தெரிந்து கொண்டேன். அந்த கோடை விடுமுறையிலேயே அதற்கான வகுப்பிற்குச் சென்று டெரகோட்டா நகைகள் செய்வதைக் கற்றுக் கொண்டேன்’ என்கிறார் அவர்.
முதன் முதலில் தான் செய்த டெரகோட்டா நகைகளை தன் உற்றார் உறவினர்களுக்குக் கொடுத்தாராம். அதைக் கண்ட அவர்கள் ஸ்மிருதியின் படைப்புகளைப் பாராட்டிப் புகழ்ந்தனராம்
‘அவர்களின் பாராட்டு, என்னுள் நம்பிக்கையைத் தந்தது. அந்தக் கலையை தொழிலாக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது’ என்று கூறுகிறார் அவர்.
பெற்றோரின் ஆதரவைப் பெற்று, இரண்டாயிரம் ரூபாயைத் தன் தொழிலுக்கான முதலீடாக வைத்து, தனது பத்தாம் வகுப்பிலேயே தனக்கான தொழிலை உருவாக்கினார் ஸ்மிருதி.
‘எனது பெற்றோரின் ஆதரவும் ஊக்கமும்தான், நான் என் தொழிலைத் தொடங்குவதற்கு உறுதுணையாக நின்றது’ என்கிறார் அவர்.
தன் தொழிலின் முதல் கட்ட முயற்சியாக தனது வீட்டிற்கு அருகில் இருந்த கடை ஒன்றில் தன் பொருளை விற்பனைக்கு வைத்தார் ஸ்மிருதி.
‘மூன்று வாரத்திற்குப் பிறகுதான் என் டெரகோட்டா நகை ஒன்று விற்பனை ஆனது. அதில் கிடைத்த நூறு ரூபாய் என் உழைப்பிற்குக் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம்’ என்று உணர்ச்சி பொங்கக் கூறுகிறார் அவர்.
பிறகு தன் தொழிலின் முன்னேற்றத்திற்காக சமூகவலைதளங்களில் ஷிகா கிரியேஷன்ஸ் (Shika Creations) என்ற பெயரில் புதிய பக்கங்களைத் தொடங்கினார். அதில் தான் செய்த நகைகளை அவர் புகைப்படங்களாகப் பதிவேற்றம் செய்தார். அது அவரின் தொழிலைப் பற்றிப் பலருக்கு தெரியப்படுத்தியது. மேலும் அதன் மூலம் இந்தியாவில் மட்டுமல்லாது பல நாடுகளிலிருந்தும் அவருக்கு ஆர்டர்கள் வரத் துவங்கின.
தன் டெரகோட்டா நகைகளை தொண்ணூறு ரூபாய் முதல் பதினைந்தாயிரம் ரூபாய் வரை விற்று வருகிறார் ஸ்மிருதி.
‘கைவினைப் பொருளான டெரகோட்டா நகை செய்வதில் உழைப்பு அதிகமாக இருக்கும். அதனால் விலையும் அதிகளவில்தான் இருக்கும்’ என்று கூறுகிறார் அவர்.
மேலும் அவர் உச்சி முதல் பாதம் வரை மணமகளுக்குத் தேவையான அனைத்து ஆபரணங்களையும் டெரகோட்டாவில் செய்து தருகிறார்.
‘எனது டெரகோட்டா நகைகளுக்கென தனி சிறப்பு வேண்டும் என்று எண்ணினேன். அதனால் டெரகோட்டா நகைகளோடு கெம்புக் கற்களை இணைத்தேன். அது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது’ என்று தனது தனித்துவத்தைக் கூறுகிறார் ஸ்மிருதி.
அவர் டெரகோட்டாவில் நகைகள் மட்டுமின்றி குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் பீரோக்களில் ஒட்டிக் கொள்வது போன்ற காந்தம் பொருந்திய பொம்மைகள், வால் ஹேங்கிங்ஸ், வால் ஃபிரேம்ஸ் போன்றவற்றையும் டெரகோட்டாவில் செய்து பலரின் கவனத்தைப் பெற்றார்.
‘இதன் மூலம் பெண் வாடிக்கையாளர்களை மட்டுமல்லாது அனைத்து வகையான வாடிக்கையாளர்களையும் கவர முடிந்தது’ என்று கூறுகிறார் அவர்.
தனது பன்னிரண்டாம் வகுப்பில், தான் கற்றுக் கொண்ட கலையைப் பிறருக்கும் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார் ஸ்மிருதி. இதுவரை எழுபதிற்கும் மேற்பட்ட பெண்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார் ஸ்மிருதி.
‘பள்ளி சென்று வந்த பிறகு வீட்டுப்பாடங்களை முடித்துவிட்டு இரவு நேரங்களில் இரண்டு மணிநேரம் டெரகோட்டா நகைகள் செயவதற்கென எடுத்துக் கொள்வேன். மேலும் வார இறுதி விடுமுறை நாட்களை நகைகள் செய்வதற்கும் பிறருக்குக் கற்றுக் கொடுப்பதற்கும் ஒதுக்கிவிடுவேன். அதனால் என் படிப்பும் தொழிலும் சீராக இருக்கின்றன’ என்கிறார் அவர்.
அவரின் தொழில் நேர்த்தி அவருக்கு 2019 ஆம் ஆண்டு மாணவர் தொழில் முனைவோர் என்ற பிரிவில் சுயசக்தி விருதினைப் பெற்றுத் தந்தது.
‘வாடிக்கையாளர்கள், இல்லை என்று திரும்பி செல்லாத வகையில் அனைத்துப் பொருட்களையும் கொண்ட ஒரு பொட்டிக்கை (boutique) நிறுவ வேண்டும் என்பது எனது கனவு’ என்கிறார் அவர்.
கொரானா ஊரடங்கில் விற்பனை சரிவடையவில்லையா? என்று கேட்டோம்.
‘கொரோனாவிற்கு முன்பு மாதத்திற்கு பத்தாயிரம் ரூபாய் ஈட்டினேன். ஆனால் கொரோனா ஊரடங்கில் மட்டும் 2.5 லட்சம் ரூபாய் ஈட்டியிருக்கிறேன்’ என்று வாயடைக்கச் செய்துவிட்டார் அவர்.
ஊரே ஊரடங்கில் இருந்த போதும் தான் கொண்ட கனவு ஒருபோதும் அடங்கிவிட போவதில்லை என்ற உறுதியோடு செயல்பட்டு, இன்று பலருக்கு முன்னுதாரணமாக ஆகியிருக்கிறார் இந்த இளம் தொழிலதிபர் ஸ்மிருதி.