மணிப்பூர் பற்றி எரியும் விவகாரத்தில் பிரதமரை நடிகர் ஒருவர் மணிப்பூருக்கு வாருங்கள் பேசுவோம் என ட்வீட் செய்துள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் இடஒதுக்கீடு விவகாரத்தில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி சமூகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த மே 3-ம் தேதி முதல் ஒரு மாதத்துக்கும் மேலாக வன்முறை, கலவரம் நீடிக்கிறது. இதில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
முதன்முதலாக மாநிலத்தின் மக்கள் தொகையில் 53 சதவீதம் பேர் இருக்கும் மைதேயி சமூக மக்களை பட்டியல் பழங்குடியினர் பிரிவில் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியினர் கடந்த மே மாதம் 3-ம் தேதி அமைதிப் பேரணி ஒன்றை நடத்தினர். இதில் இரு பிரிவினருக்கும் இடைய மோதல் ஏற்பட்டது. பின்னர் இது வன்முறையாக மாறி மாநிலம் முழுவதும் பரவி, மணிப்பூர் பற்றி எரிந்தது.
மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்த ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அங்கு 11 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலம் முழுவதும் இணைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இருந்த போதிலும் மாநிலத்தில் கலவரக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையில் மோதல் நடந்து வருகிறது.
இந்த நிலையில் அமரிக்க சுற்றுப்பயணம் சென்று வந்துள்ள மோடியை மணிப்பூருக்கு வருமாறு நடிகர் பிரகாஷ்ராஜ் அழைத்துள்ளார்.