பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்துவரும் நிலையில், ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கு இடையில் நிலவும் போர் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இதனால், பெட்ரோல், டீசலின் விலையும் உயர்ந்தது. தமிழகத்திலும் சதத்தைத் தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகிவருகின்றனர். இதற்காக, நம் நாட்டில் ஒருபுறம் எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்துக் கொண்டிருந்தாலும், மறுபுறம் சில மாநிலங்களில் ஆட்டோ, பஸ் போன்ற கட்டணங்கள் உயர்த்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நம் அண்டைநாடான இலங்கையில் பெட்ரோல், டீசல் வாங்குவதற்வதற்காக மக்கள் நீண்டவரிசையில் காத்திருக்கின்றனர். தவிர, இலங்கை பெட்ரோலிய கூட்டு ஸ்தாபனம் பல்வேறு வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகத்தில் சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. இது ஒருபுறமிருக்க…. மறுபுறம் நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இன்னும் 15 நாட்களில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. இமரான் கான் ஆட்சி கவிழ்ப்புக்குப் பிறகு ஷபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றிருக்கும் நிலையில் இந்த மாற்றம் இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தினால், மக்கள் கொந்தளிப்பார்கள் என கருதி, முந்தைய அரசு, எண்ணெய் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கி வந்தது. ஆனால், ஷபாஸ் ஷெரீப்பின் புதிய அரசு, இந்த மானியம் வழங்குவதை நிறுத்தி, பெட்ரோல், டீசல் விலை உயர்த்தும் என அங்குள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு ஒழுங்குமுறை ஆணையம் கணக்கு போட்டுள்ளது. இந்த நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், ‘மக்களின் நலன் கருதி எரிபொருள் விலையை உயர்த்தப்போவதில்லை. மானியம் வழங்குவது நிறுத்தப்பட்டால் எரிபொருள் விலை அதிவிரைவாக உயரும் என்பதால் எரிபொருள் மற்றும் மின்சார மானியங்களை திரும்பப் பெறப்போவதில்லை’ என்று அவர் தெரிவித்துள்ளார். இதனால், மக்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர்.