காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 44ஆவது வார்டு வேதாச்சலம் நகர் பகுதியிலுள்ள செல்வ விநாயகர் கோவில் தெருவைச்சேர்ந்த ஹரிஹரன் (48) கடந்த ஆண்டு மே மாதம் 10ஆம் தேதியன்று திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இந்தநிலையில் ஹரிஹரன் இறந்த துக்கம் தாங்க முடியாமல் அவரது பெற்றோர் தனது மகன் ஹரிஹரனின் முழு உருவ சிலையை செய்து வழிபாடு நடத்த முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து, மாமல்லபுரத்தில் உள்ள சிற்பக் கலைக்கூட்டத்தில் ரூ.2.5 லட்சம் மதிப்பில் 5.3 அடி உயரத்தில் உயிரிழந்த ஹரிஹரனைப்போலவே இருக்கும் தத்ரூபமான முழு திருஉருவ சிலையை தயார் செய்தனர். அதன்பிறகு, மகனின் சிலைக்கு ஆடை அணிவித்து, தாங்கள் வசித்து வரும் வீட்டின் முன்பு ஒருபகுதியில் அந்த சிலையினை ஹரிஹரனின் பெற்றோர் நிறுவியுள்ளனர். இந்நிலையில், உயிரிழந்த ஹரிஹரன் முதலாம் ஆண்டு நினைவு நாளான நேற்று அவரின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் பெற்றோர் இணைந்து சிலைக்கு பூஜை செய்தனர். இனி மகன் ஹரிஹரனின் சிலைக்கு தினந்தோறும் பூஜை செய்து கற்பூர தீபாராதனை காண்பித்து தங்களது குல தெய்வமாக பாவித்து வழிபாடு செய்து வர உள்ளதாக ஹரிஹரனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இறந்த மகனுக்கு சிலை அமைத்து தினந்தோறும் பூஜை செய்து வழிபாடும் செய்யும் நிகழ்வு அந்தபகுதியில் உள்ள மக்களிடையே பெரும் நெகிழிச்சியை ஏற்படுத்தியுள்ளது.