போலி பாஸ்போர்ட் முறைகேடு விவகாரத்தில் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது வாராகி என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த தமிழ்நாடு அரசுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் உளவுத்துறை ஏடிஜிபியாக இருந்த அவர் காவல் தலைமையகத்திற்கு நேற்று மாற்றப்பட்டுள்ளார்.
மதுரை காவல்துறை ஆணையராக இருந்த போது காவல் துறை அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதம் போலி பாஸ்போர்ட் வழங்கியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார். அதேபோல், இந்தியன் மக்கள் மன்ற தலைவர் வராகி என்பவரும் கடந்த மே மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் சிபிஐ, தேசிய புலனாய்வு முகமை ஆகியவற்றிற்கு புகார் ஒன்றை அளித்தார்.
அந்த புகாரில் மதுரை மாநகர காவல்துறை ஆணையராக டேவிட்சன் தேவாசீர்வாதம் பதவி வகித்த போது வெளிநாட்டினருக்கு பாஸ்போர்ட் வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளது. டேவிட்சன் தேவாசீர்வாதம் பதவி வகித்த காலத்தில் போலி ஆவணங்கள் மூலம் நூற்றுக்கணக்கான போலி பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டன என்றும் அவரது மனைவி நடத்தி வந்த டிராவல் ஏஜென்சி மூலமாக இந்த முறைகேடு நடந்துள்ளது» என்று கூறியிருந்தார்.
இதனிடையே, போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு செல்ல முயன்றதாக கடந்த 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் இலங்கை நாட்டை சேர்ந்த முத்துராமன் மற்றும் பரமசிவம் ஆகியோரை குடியுரிமை அதிகாரிகள் கைது செய்தனர். போலி பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மத்திய புலனாய்வு அமைப்பு இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து இருந்தது.
இந்த நிலையில், தான், போலி பாஸ்போர்ட் புகாரில் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது அளிக்கப்பட்ட புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.ஆனால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? என்பது கேள்விக்குறி தான்.