இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மின்சாரம், எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடிக்கு அதிபர் கோத்தபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரின் ஊழல் ஆட்சிதான் காரணம். எனவே, அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், அதிபர் பதவி விலமாட்டார் என இலங்கை நாடாளுமன்றத்தில் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், போராட்டக்காரர்களின் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்த மகிந்த ராஜபக்ச தயாராக இருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து ‘‘நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள், பிரதமர் மகிந்த ராஜபக்சவை நிராகரித்துள்ள நிலையில், அவர் பேச்சுவார்த்தை நடத்த முன்வரக் கூடாது. அவரது ஒட்டுமொத்த குடும்பமும் ஆட்சியை விட்டு செல்ல வேண்டும்’’ என்று போராட்டக்காரர்கள் சிலர் கூறுகின்றனர். இதனிடையே, அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உபகரணங்கள் வாங்க, 10 மில்லியன் அமெரிக்க டாலரை உலக வங்கி வழங்கியுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. கூடுதல் நிதி கேட்டு உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியிடம் சுகாதாரத்துறை அமைச்சகம் பேச்சு நடத்தி வருகிறது.