திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பல கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் அரசு பேருந்து மூலம் கல்வி நிலையங்களுக்கு சென்று வருகின்றனர். இந்தநிலையில், ஏலியம்பேடு, புதுவாயில், பெரியகவனம் ஆகிய கிராமங்கள் வழியாக இயக்கப்பட்டு வந்த அரசுப் பேருந்துகள் கடந்த ஒரு வார காலமாக திடீரென நிறுத்தப்பட்டடு உள்ளதாக கூறப்படுகிறது. இதானால் அந்தபகுதிகளை மாணவர்கள் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் நடந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்றதால் உரிய நேரத்தில் செல்லமுடியாமல் காலதாமதமாகி உள்ளது. இதனையடுத்து பேருந்து சேவை நிறுத்தம் குறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தியடைந்த மாணவர்கள் பொன்னேரி அருகே செல்லும் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் போக்குவரத்து அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேருந்தை வரவழைத்தனர். இதனையடுத்து கோரிக்கை நிறைவேற்றப்பட்டதால் போராட்டத்தை கைவிட்டு மாணவர்கள் கலைந்து சென்றனர். மாணவர்களின் இந்த திடீர் போராட்டத்தால் அந்தபகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.