day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

பேச்சுரிமை அற்றவளா பெண்?

பேச்சுரிமை அற்றவளா பெண்?

நான் பேசுவதைக் கேட்பீர்களா?
நான் பேசுவதைக் கேட்கிறீங்களா?
‘நான் பேசட்டுமா’ என்ற பெண்களின் குரல் இப்போது இவ்வளவு வளர்ச்சி அடைந்திருக்கிறது.
ம்ம்மா… ப்ப்பா என்று நான் குழந்தையாய் இருக்கும்போது கதைத்ததை என் தாய், தந்தையர், சுற்றத்தார், மாமா, தாத்தா, கொள்ளுப் பாட்டி என அனைவரும் மகிழ்ந்து கேட்டதாய் சொல்கிறார்கள்.
தற்போது நான் என்ன கேட்டாலும், ‘அதுலாம் உனக்கு எதற்கு, நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’ என்றும் சில நேரங்களில் ‘வாயை மூடு’ என்றும் சொல்லிவிடுகிறார்கள்.
ஒருவேளை இப்போதும் என்னை மழலையாகக் கருதுகிறார்கள் போலும். அப்படியானால் இருபத்தொன்று வயதானவுடன் என்னை முகமறியா பரீட்சயமற்ற நபருடன் உடல் பேச்சு வைத்துக்கொள்ள சொல்லமாட்டார்களே.
ம்ம்… உணர்ச்சிகள் உடைய இயந்திரம் போலும் நாங்கள். எங்களுக்கு எப்போது சூடு, சொரணை, மானம், வெட்கம் போன்ற உணர்ச்சிகள் வருமோ? எந்த விநாடியில் யாரைப் பார்த்தால் எழ வேண்டும், வெளிப்பட வேண்டும் என்றும் நிர்ணயித்துவிடுகிறார்கள். அப்படி நிர்ணயிக்கப்படுகிறது.
நான் எப்படியெல்லாம் பேசுவேன் என்று தெரியுமா? அதாவது நான் எப்படியெல்லாம் பேசுவேன் என்று இந்த சமூகம் புரிந்துகொண்டிருக்கிறது தெரியுமா?
நான் சிரித்தால்,‘வழியறேன்.’
நான் அழுதால், ‘dam -ஐத் திறந்துட்டா.’
நான் எழுதினால், ‘கவிதை எழுதுறா.’
நான் மௌனமாய் இருந்தால், ‘சம்மதம், ஊமைக்கொட்டான்.’
நான் பேசினால், ‘அதிகப்பிரசங்கி.’
நான் ஓடினால், ‘என்ன நிதானமில்லாம ஓடுறா பாரு.’
நான் சண்டையிட்டால், ‘பஜாரி.’
என் ஆடைமொழி ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு அர்த்தமுள்ளது.
புடவை – இடுப்பழகைப் பேசுகிறதாம்.
முக்கா பேண்ட் – கால் தெரிகிறதாம்.
தாவணி – குத்துவிளக்கு ஏற்ற அழைக்கிறதாம், என்னை அவர்கள் வீட்டுக்கு.
இன்னும் என்ன என்னவோ சொல்கிறார்கள்…
ஆம்,முக்கியமாக எனக்கு உடல்பேச்சு, எப்படி, எங்கே, இல்லை இல்லை எனக்கென்று உடல்பேச்சே இல்லை. என் இணையர் உடல் பேசும் பேச்சுக்கு நான் இசைந்தால் போதும். அது தான் என் பேச்சு, என் சுய உணர்ச்சிகள் என்று அடக்கிவிடுகிறது இந்தச் சமூகம்.
நானும் இப்படித் தானே பிறந்திருப்பேன். நீங்களும் இப்படித் தான் பிறந்திருப்பீர்கள்.
நம் அன்னையர் என்ன உடல் பேச்சு பேசியிருப்பார், அப்பாவின் உடல் பேச்சுக்கு இசைவது மட்டுமின்றி.
தெரியவில்லை.
வீட்டில் மட்டும் என்ன பேசுகிறார்? எத்தனை நியாயமாக, அறிவார்த்தமாகப் பேசினாலும், தந்தையின் விருப்பதிற்குள்ளும், குடும்பம், குடும்பத்தின்மீதான கவுரவம் பேச்சுகளுக்குள்ளேயே என் அன்னையின் வாதங்கள் முடிந்துவிடுகிறது.
அன்னைக்கென்று திட்டங்களோ, குடும்பத்தை தான் எவ்வாறு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற எதிர்கால கனவுகளோ இருக்க விடுவதில்லை.
ஆம், இருக்கவிடுவதில்லை. எல்லாம் இந்த ஆணின் கனவிற்குள் அடங்கிவிடுகிறது.
என் தோழர்களுக்கும் நான் பேச வேண்டுமாம். அரசியல் பேச வேண்டுமாம். நாங்கள் பேசினால் அதற்கு மதிப்பு கூடுதலாம். அதனால் என்னை முன்னிறுத்திப் பேச சொல்கிறார்கள். சரி பேசலாம் என்று ‘ஆ’ என்று வாயைத் திறந்தால் அரசியல் பேச வேண்டும் என்கிறார்கள்.
அந்த ‘ஆ’வைச் சொல்லவிட்டிருந்தாலும் அரசியலைத்தான் நான் பேசி இருப்பேன். அவர்கள் என்னைப் பேச விடவில்லை. நான் என்ன பேச வேண்டும் என்றுகூட எழுதிக் கொடுத்துவிடுகிறார்கள்.
சில நேரங்களில் நாங்கள் பேசும் அரசியல் ஆண் தோழர்களை விட அறிவு கம்மியாக இருந்தால் ஏளனம் செய்கிறது இந்த சமூகம். என்ன செய்வது, அறிவு புரிதலாகி உணர்வதற்கு காலமும்,திறந்தவெளியும், அனுபவமும் வேண்டும். இவையனைத்தும் அவர்களுக்கு இத்தனை காலம் கிடைத்தது, எங்களுக்குக் கிடைக்கவில்லையே.
எப்போதாவது நாங்கள் ஆண் தோழர்களை விட எங்ேகயாவது அறிவார்த்தமாக கருத்தை முன்வைத்துவிட்டால் அவர்கள் பதிலேதும் சொல்லாமல் போய்விடுகிறார்கள். திகைப்பு போலும் எங்கள் அறிவைக் கண்டு.
சரி. என் இந்த எழுத்து பேச்சு கம கம என்று எங்கள் சமையலைப் போல் இருக்கிறதா?
இருக்காது.
என் இந்தப் பேச்சு எனக்கு இனிக்கவில்லை. உங்களுக்கும் இனிக்காது. ஏனென்றால் நான் பேசிக்கொண்டேதான் இருந்தேன் இத்தனை காலமும். என் வாய் இரும்புக் கம்பிகளால் அடைக்கப்பட்டிருந்தது. என் சத்தம் வெளியே கேட்காமல் வாய் வலித்து, ரத்தம் கசிய கசிய பேசிக்கொண்டிருந்தேன், யாரும் கேட்கவில்லை என்று உணர்ந்தும்.
மனம் கனத்து என் பேச்சுரிமைக்காகப் பேசுகிறேன். என் இந்தப் பேச்சு இனிக்காது.
மனித நேயமுள்ள உங்களுக்கும் வலி நிறைந்த பேச்சு இனிக்காது என்று நம்புகிறேன்.
சரி, நான் பேசறேன். அப்படி என்னதான் பேசப் போகிறேன் என்று காத்திருக்கிறீர்களா?
இதான்.
இதுதான் எனக்கு, எங்களுக்குப் பிரச்சனையே..
எதிர்பார்க்காதீர்கள், வரையறைக்காதீர்கள், கட்டமைக்காதீர்கள் நான் என்ன பேச வேண்டும் என்று.
எனக்குப் பேசணும் அவ்வளவே. பேசணும்.
நெஞ்சு அடைக்கிறது. காற்று வேண்டும். நான் மூச்சு விட வேண்டும். என் இதயம் என் மூச்சு, நான் சுவாசித்துக்கொள்கிறேன் எனக்கு ஏற்றாற்போல்.
நான், நாங்கள்-பெண்கள் பேசத்தான் போகிறோம் எங்களுக்குப் பிடித்தவாறு சமத்துவத்தை நோக்கி. நீங்கள் கேட்கத்தான் போகிறீர்கள். கேட்டுத்தான் ஆக வேண்டும்.
சொல்ல மறந்துட்டன், எனது ஆ என்று தொடங்கிய பேச்சு “ஆணாதிக்கம் ஒழிக, ஆணாதிக்கத்தை தூக்கிப் பிடிக்கும் அனைத்து சாதியப் படிநிலைகளும் ஒழிக, முதலாளித்துவம் ஒழிக.”
மனிதகுலத்திற்கு எதிரான முதல் மூன்று சொல்லிவிட்டேனா? அதான் என்னைப் பேச விடுங்கள். நான் அறிவாந்தவர். என் அரசியல், சமத்துவத்தை நிலைநிறுத்தும்.
எங்களைப் பேசவிடுங்கள். நாங்கள் பேசுகிறோம்.
பெண் வாழ்க. பெண் வாழ எத்தனிக்கும் அனைத்துப் பாலினமும், நுண்ணுயிரும் வாழ்க.

– சாரா

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!