சென்னை, மாதவரம் பால் பண்ணையில் இருந்து செரிவூட்டப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டுகள் விற்பனைக்காக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள முகவர்களுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பப்படுகிறது. இந்த ஆவின் பால் பாக்கெட்டுகள் முறையாக பேக்கிங் செய்யப்படாததால், பால் பாக்கெட்டுகள் முகவர்களின் கைகளுக்கு செல்வதற்கு முன்பாகவே அதில் உள்ள ஓட்டை வழியாக கசிந்துவிடுகிறது. இந்த பால் அடுக்கி வைக்கப்படும் டிரேக்களில் நிரம்பி வழிந்து வீணாகிறது. ஏற்கனவே, ஆவின் பாலின் தரமும், அளவும் குறைவாக கைக்கு கிடைப்பதாக வாடிக்கையாளர்கள் தொடர்ந்து குறைக்கூறி வரும் நிலையில், பால் பாக்கெட்டுகள் முறையாக பேக்கிங் செய்யப்படாததால் எங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுவதாக முகவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். மேலும், தனியார் பால் நிறுவனங்கள் தங்கள் பால் பாக்கெட்டுகளின் விற்பனையை அதிகரிப்பதற்காக பல்வேறு யுக்திகளை கையாண்டு வரும் நிலையில், பொதுத்துறை நிறுவனமான ஆவின் நிறுவனத்தின் அலட்சியத்தால், அதன் விற்பனை வெகுவாக சரிந்து வருவதாகவும் கூறுகின்றனர். எனவே, பால் பண்ணைகளில் உள்ள குளறுபடிகளை கலைந்து ஆவின் பால் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பால் முகவர்கள், தமிழக அரசை வலியுறுத்தி உள்ளனர்.