தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி, இன்று காலை தொடங்கியது. இதில், சொத்துவரி உயர்த்தியது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அதை ஏற்காத அதிமுக மற்றும் பாஜகவைச் சேர்ந்த உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘கடந்த 2 ஆண்டுக்காலமாக மக்கள் கொரோனா தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலையிழந்து, வருமானம் இல்லாமல், வாழ்வாதாரத்தை இழந்து இருக்கிற சூழலில், இந்த சொத்து வரி உயர்வு கடுமையாக மக்களைப் பாதிக்கிறது. மக்கள் மீது, இந்த அரசு பெரும் சுமையை சுமத்துகிறது. மக்கள் பெரும் அதிர்ச்சியில், உறைந்து போயிருக்கின்றனர். எனவே இந்த அரசு உடனடியாக உயர்த்தப்பட்ட சொத்து வரியை திரும்பப்பெற வேண்டும் என்பதை அமைச்சரின் கவனதுக்குக் கொண்டு வந்தோம். திமுக அரசு சொத்துவரியை உயர்த்தியிருப்பது கண்டித்தக்கத்து. மேலும், சொத்துவரி உயர்வை முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் நியாயப்படுத்திப் பேசுகிறார். அவர் எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது ஒரு பேச்சு, முதல்வரான பின்னர் ஒரு பேச்சு என்கிற வகையில் அவரது பேச்சு அமைந்துள்ளது’ என்றார்.