பெண் சிசுக்கொலைகளும், பாலியல் வன்முறைகளும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பிரதான குற்றங்களாக அன்றாடம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
பெண் குழந்தைக்கு எதிரான கலாசார நம்பிக்கை கொண்ட மக்களின் மனநிலையில் மாற்றம் வந்தால்தான் நூறு சதவீதம் பெண் சிசுக் கொலையைத் தடுக்கலாம். மேலும், பாலினம் கண்டறிதல் தடுப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வை மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். கருவிலே பெண் குழந்தையைக் கலைக்காத,பெண் குழந்தைப் பிறப்பை பெருமையாகக் கருதும் சமூகத்தை உருவாக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும்.
எனக்குத் தெரிந்த ஒரு பிரபலமானவர் தனது ஐம்பதாவது வயதில் தன்னுடைய சொத்தின் வாரிசாக ஒரு ஆண்மகன் வேண்டுமென்று வாடகைத்தாய் முறைப்படி ஒரு ஆண் குழந்தையைப் பெற்றுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது.
பெண் சிசுக்களில் இறப்பு விகிதம் ஆண் சிசுவின் இறப்பு விதத்தை விட 75 விழுக்காடு அதிகமுள்ளது. இது போன்ற பெண் சிசுக்கொலையினால் உலகெங்கும் ஆண், பெண் விகிதத்தில் ஏற்றத்தாழ்வான நிலை நிலவுகிறது. வளரும் நாடுகளில் இது மிக அதிகமாகவே காணப்படுகிறது. ஏறத்தாழ சமமாக இருக்கவேண்டிய பிறப்பு இறப்பு விகிதத்தில், அதிகரித்துவரும் பெண்கருக்கொலை, பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும். மேலும் குழந்தைகளும் பெண்களும் வன் புணர்ச்சிக்கு உள்ளாவர், ஒரு பெண்ணைப் பலர் மனைவியாகப் பங்கிட்டுக்கொள்ளும் நிலையும் ஏற்படலாம் என்றும் ஐக்கிய நாடுகள் எச்சரித்துள்ளன.
பெண் குழந்தைகள் எண்ணிக்கை குறைய கர்ப்ப காலத்தில் பெண்ணின் கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சியைக் கண்டறியும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் பாலினத்தை கருவிலே கண்டறிந்து கருவிலே பெண் சிசுவைச் சிதைப்பதும் ஒரு காரணம்.
பெண் சிசுக்கொலை சட்டப்படி குற்றம். 2ஆவது நூற்றாண்டில் பெண் சிசுவைக் கருவிலேயே அழிப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. இதற்கு இந்திய தண்டனை சட்டத்தின்படி அதிகப்படியான தண்டனை 10 வருட சிறைத் தண்டனை.
மகப்பேறுக்கு முற்பட்ட பாலியல் பரிசோதனை மற்றும் பெண் சிசுக்கொலை ஆகியவற்றைத் தடைசெய்து தண்டிப்பதற்காக இந்திய அரசு 1994 ஆம் ஆண்டில் கருத்தரித்தல் மற்றும் முன்-நோயறிதல் நுட்பங்கள் சட்டத்தை (பிசிபிஎன்டிடி)
{The Indian government has passed Pre-Conception and Pre-Natal Diagnostic Techniques Act (PCPNDT) in 1994 } நிறைவேற்றியது. கருவின் பாலினத்தை யாருக்கும் தீர்மானிக்க அல்லது வெளிப்படுத்துவது தற்போது இந்தியாவில் சட்டவிரோதமானது.
இந்திய தண்டனை சட்டம் (IPC)செக்ஷன் 312, 314, 316 ஆகிய பிரிவுகளில் தண்டனை மற்றும் அபராதம் உண்டு.
அன்றாடச் செய்தியாக குழந்தைகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தும் அவலநிலை நம்நாட்டில் தொடர்கதையாகத் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.
பெரும்பாலும் குழந்தைகளுக்குப் பாலியல் துன்புறுத்தல் அவர்களது சொந்த வீட்டில் நடக்கும் போது வெளியில் சொல்லப்படுவதில்லை. அவர்களுடைய குரல்வளை நசுக்கப்படுகிறது. அவர்கள் மிரட்டப்படுகிறார்கள். சமுதாய அச்சுறுத்தல்களுக்கும், தன்குடும்பம் அவப்பெயருக்கு உள்ளாகும் என்பதாலும் பெரும்பாலும் வெளியில் வருவதில்லை. ஒருவேளை அந்தக் குழந்தைகள் தாங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது புரிந்து யாராவது நம்பத்தகுந்த நபர்களின் உதவியுடன் புகார் தெரிவித்தால் புகார்களுக்கேற்ப போக்சோ சட்டப்படி அல்லது தகுந்த இந்திய தண்டனை சட்டத்தின்படி தண்டிக்கப்படுவார்கள்.
போக்சோ சட்டம் பிரிவு 3 மற்றும் 4ன்படி குழந்தைகளைப் பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்துவது குற்றம்: இதற்குக் குறைந்தபட்ச தண்டனை 7 ஆண்டுகளாகவும், அதிகபட்ச தண்டனை ஆயுள் தண்டனையாகவும் உள்ளது. கூடவே அபராதமும் விதிக்கப்படும்.
போக்சோ சட்டம் பிரிவு 5 மற்றும் 6-ன்படி குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியவர்கள், குழந்தைகளின் பெற்றோர், கார்டியன், ஆசிரியர் அல்லது காவல் துறை அதிகாரியாக இருந்தால் அவர்களுக்குக் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறையும் அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் வழங்கப்படும். அபராதமும் உண்டு.
போக்சோ சட்டம் பிரிவு 7 மற்றும் 8ன் படி குழந்தைகளின் அந்தரங்க உறுப்பைகளைத் தொடுவது அல்லது மற்றவரின் அந்தரங்க உறுப்புகளைக் கட்டாயப்படுத்தி தொடவைப்பது குற்றம். அதாவது பாலியல் சீண்டல்கள் செய்வது. குற்றவாளிக்குக் குறைந்தபட்ச தண்டனையாக 3 ஆண்டுகள் சிறைத் தண்டணையும், அதிகபட்சமாக 8 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கப்படும். அபராதமும் உண்டு.
போக்சோ சட்டம் பிரிவு 11 மற்றும் 12ன் படி குழந்தைகளைப் பாலியல் ரீதியாக செய்கைகள் காட்டுவது, தொலைபேசி, அலைபேசியில் ஆபாசமாகப் பேசுவது, மின்னஞ்சல் அனுப்புவது, திட்டுவது, பாலியல் இச்சைக்கு அழைப்பது குற்றம். குற்றவாளிக்கு அபராதம் அல்லது அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும்.
போக்சோ சட்டம் பிரிவு 13 மற்றும் 14ன்படி குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்களை எடுப்பது, விற்பது, தயாரிப்பது, மற்றவருக்கு கொடுப்பது குற்றம். இது இணைய தளம், கணினி என எந்த தொழில்நுட்ப ரீதியில் இருந்தாலும் குற்றமே. இதற்குக் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் , அபராதமும் விதிக்கப்படும்.
போக்சோ சட்டம் பிரிவு 18ன்படி குழந்தைகள் பாலியல் குற்றங்களுக்கு ஈடுபட முயன்றால் 1 வருட சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு உடந்தையாக இருப்பதும் குற்றமே. குற்றமிழைத்தவருக்கு வழங்கப்படும் பிரிவுகளிலேயே தண்டனை வழங்கப்படும்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தை மறைத்தாலும் பிரிவு 21ன்படி குற்றம். இதற்கு 6 மாத சிறைத் தண்டனை. இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும். அதிகபட்சம் ஆயுள் தண்டனை என்ற ஷரத்தில் மாற்றம் கொண்டு வந்து மரண தண்டனை என்ற சட்டத்திருத்தத்தை அவசரச்சட்டமாக மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. வயது வரம்பும் 18 இல் இருந்து 16 மற்றும் 12 என வகைப்படுத்தப்பட்டு பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது.
– செல்வ குமாரி நடராஜன்