அணுப் பிளவு உலகைத் தகவமைத்தது. நுண்ணுயிரிகளிலிருந்து செடி கொடிகளும், புல் பூண்டும், பூச்சிகள் ஊர்வனவும், பறப்பனவும், ஓடுவனவும் என விலங்குகள், பறவைகள் தோன்றின. இவை யாவையும் அடக்கி ஆளும் ஆற்றல் பெற்றவனாக மனிதன் தோன்றினான். குகைகளிலும், சவன்னாக் காடுகளிலும் ஒளிந்து வாழ்ந்தவன் உலகெங்கும் பரவி வேரூன்றி கிளை பரப்பி பூத்துக் காய்த்துக் கனிந்தான். அவனது மனித சக்திக்கு மேற்பட்ட, பயன்தரக்கூடிய, அச்சம்தரக்கூடிய நிகழ்வுகள்தான் அவனை இயற்கை மேல் நம்பிக்கை கொள்ள வைத்தன.
பெருமழை, ஊழிக்காற்று, கடல் கொந்தளிப்பு, கொள்ளை நோய் என்று இடர்ப்பாடுகள் வர வர, தன்னை, தன் குழுவை, மக்களைக் காக்க வேண்டியே இயற்கையை வணங்க ஆரம்பித்தான். இயற்கையின் கோபத்தை அமைதிப்படுத்த வேண்டுதல்கள், உயிர்ப்பலி என்று ஆழம் கண்டான். உலகில் சமயம் இப்படித்தான் தொடங்கியது. “என் உயிரை எடுத்துவிடாதே, அதற்குப் பதிலாக இந்த விலங்கை எடுத்துக்கொள், பறவையை எடுத்துக் கொள்” என்றே இயற்கையிடம் பேரம் பேசி வாழ்ந்தான். இன்று கோழி, ஆடு, குட்டி குடி விழா என்று பலி தந்து வணங்கும் பல சமய நம்பிக்கைகளின் தொடக்கப்புள்ளி இதுதான்.
மனிதனின் பேராவல். மக்கட்பேறு, விலங்குகள் பெருக்கம், வேளாண்மை விளைச்சல் என்று எல்லாவற்றிலும் வளம் தேடினான். அவனுக்கு உயிர்கள் பெற்றுத்தரும் பெண் அவனை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினாள். அவனால் செய்ய இயலாத ஒன்றை- உயிர்ப் பெருக்கை பெண் அவனுக்கு வழங்கினாள் என்பதால் அவளைக் கொண்டாடினான். வளப்பத்துக்கு பெண்ணே காரணம் என்று கண்டுகொண்டவன், அவளது சிறப்புத் திறனான வளமையைப் போற்றத் தொடங்கினான். பிறப்பு எவ்வாறு நிகழ்கிறது என்ற அறிவியல் அறியாத காரணத்தால் பெண் தன்னை விட உயர்ந்தவள், தெய்வம் என்று வணங்கத் தொடங்கினான். அதிலும் குழந்தை பெற்றுத்தரும் “தாய்” என்ற தெய்வமே மனித குலம் வணங்கிய முதல் தெய்வம் எனலாம்.
தலை சிறிதாகவும், உடல் பெரிதாகவும் உள்ள ஒற்றைக் கல் பெண் வடிவ சிற்பங்களை பறவைக்கல் அல்லது விசிறிக்கல் என்று அழைக்கிறார்கள் அறிஞர்கள். பெருங்கற்காலத்தைச் சேர்ந்த இந்த விசிறி வடிவக்கற்கள் வளமையைக் குறிக்கும் தாய் தெய்வ வழிபாட்டின் நீட்சியே என்றும் அறிஞர்கள் கருதுகிறார்கள். தமிழகத்தில் கி.மு.1000 முதல் கி.மு.300 வரை பெருங்கற்காலம் என்று கருதப்படுகிறது. ஆக, நம்மிடம் உள்ள காலத்தால் முந்தைய தாய் வழிபாட்டு எச்சங்கள் இந்த விசிறிக்கற்கள்தாம். தருமபுரி மாவட்டம் மோதூர் (மோட்டூர்- மோடு என்ற தமிழ் சொல்லில் இருந்தே வந்தது), சித்தன்னவாசல், தென்னார்க்காடு மாவட்டம் உடையாநத்தம் போன்ற பகுதிகளில் இவ்வகைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. அதிக வேலைப்பாடு இல்லாத வெகு எளிமையான இவ்வகைச் சிற்பங்கள் இன்றும் வழிபாட்டில் இருக்கின்றன என்பதே பெரும் ஆச்சர்யம்.
“வீனஸ்” சிற்பங்கள் என்று சொல்லப்படும் பெண் தெய்வ சிற்பங்கள் உலகெங்கும் உள்ள பல நாகரிகங்களில் முதன்மைக் கடவுளாக வணங்கப்பட்டுள்ளன. 10000 முதல் 50000 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கற்கால எச்சங்களாக உலகின் பல பகுதிகளில் பெண் வடிவங்கள் எலும்பு, கல், தந்தம், சுடுமண் எனப் பல வடிவங்களில் கிடைத்திருக்கின்றன. இந்தப் பெண் வடிவங்கள் பெரும்பாலும் சில அங்குல உயரம் மட்டுமே இருக்கும். ஆனால் அவற்றின் சிறப்பம்சங்கள் கிட்டத்தட்ட எல்லா வீனஸ் சிற்பங்களுக்கும் பொதுவானவை. மேடிட்ட வயிறு, பருத்த தொடைகள், மார்புகள் மற்றும் பின்புறம், அடையாளமற்ற முகம்- இவைதான் பெரும்பாலான வீனஸ் சிற்பங்களின் சிறப்பு. இந்த அடையாளங்கள் பெண்ணை வளமானவளாக, குழந்தைப்பேறு தரக்கூடிய சிறப்பம்சம் பொருந்தியவளாகக் காட்டின. மோடு, மோட்டாள், மோடி என்பவை தாய் தெய்வத்தை, அவள் பெருவயிற்றின் காரணமாகக் குறிப்பிடும் சொற்களாகும்.
தமிழகத்தில் ஆறு சென்டிமீட்டர் உயரம் கொண்ட இத்தகைய “தாய் தெய்வம்” ஆதிச்சநல்லூரில் கடந்த நூற்றாண்டு அகழப்பட்டது. தென் தமிழகத்தின் தாமிரவருணி ஆற்றங்கரைக் கழிமுகத்தை ஒட்டிய பகுதியில் இருக்கிறது ஆதிச்சநல்லூர். பொருநை ஆற்றின் நாகரிகம் என்று அறிஞர்கள் கருதும் இந்த ஊரில் 1901ஆம் ஆண்டு அலெக்சாண்டர் ரீ என்ற அகழாராய்ச்சி வல்லுனர் அகழ்ந்த இந்தச் சிற்பம் ஒரு அழகிய செப்புப் படிமம். சிறிய உருவானதாக இருந்தாலும், பெருத்த மார்புகள், பெருத்த இடை, பருத்த தொடைகள் என்று தாய் தெய்வத்தின் அனைத்து இலக்கணங்களுடன் இருக்கிறது இந்தப் படிமம். இதன் சிறப்பம்சம் அணிந்திருக்கும் நகைகள். நீள் செவியிரண்டிலும் நீண்ட காதணிகள் தொங்குகின்றன; முகத்தில் எந்தப் பகுதியும் தெளிவாக வார்க்கப்படவில்லை. கழுத்தைச் சுற்றி பெரிய வட்டவடிவ கழுத்தணி ஒன்றும், இடையைச் சுற்றி நடுவே குமிழ் பதித்த ஒட்டியாணம் போன்ற அணியும் உள்ளன. இரு கைகளிலும் வளை இருப்பது போலவும் வடிக்கப்பட்டுள்ளது இந்த செப்புப் படிமம்.
இதுவரை கால நிர்ணயம் செய்யப்படாத இந்த தாய் தெய்வ செப்புப் படிமம், அங்கு 2004-2005ஆம் ஆண்டு செய்யப்பட்ட அகழாய்வு பொருள்களின் காலக்கணக்கீட்டின்படி எடுத்துக் கொண்டால், ஏறக்குறைய 2600 முதல் 2900 ஆண்டுகளுக்கு முந்தைய படிமமாக இருக்கலாம். இத்தனை தொன்மையான செப்பு தாய் தெய்வ வடிவம் இதற்கு முன்போ, பின்போ வேறு எங்கும் தமிழகத்தில் கிடைக்கவில்லை. தமிழகத்தின் சில பகுதிகளில் இன்றும் வெண்கலப்பிள்ளை என்ற பெயரில் இது போன்ற பெண் தெய்வ சிற்பங்கள் வைத்து சீர் சடங்குகள் செய்யும் வழக்கம் இருக்கிறது.
இதே போல ஆதிச்சநல்லூரில் அகழப்பட்ட பானை ஓடு ஒன்றில் வளமையைக் குறிக்கும் “வளமைப் பெண்” சிற்பம் ஒன்றும் உள்ளது. இந்தப் பானை ஓட்டின் ஒருபுறம் செழித்து வளர்ந்திருக்கும் நெற்பயிர் காட்டப்பட்டுள்ளது. அதில் கொக்கு ஒன்று வாயில் மீனுடன் காணப்படுகிறது. கதிர்களின் இடதுபுறம் இடுங்கிய இடையும், பருத்த மார்பும் கொண்ட முட்டு வரை கீழாடை அணிந்த பெண் உருவம் ஒன்று; அதன் இடதுபுறம் நீள் கொம்புகளுடன் இரளைமான் ஒன்றும், அதன் காலைப் பற்றியபடி முதலை ஒன்றும் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பெண் உருவத்தை, அதன் வடிவமைப்பைக் கொண்டு தாய் தெய்வம் என்றே கருதுகின்றனர் அறிஞர்கள். பெரும்பான்மையான தாய் தெய்வங்கள் பருத்த வயிறும், சிறுத்த இடையும், கொழுத்த மார்புகளும் கொண்டவையாக சித்தரிக்கப்படுவதால், இந்தப் பெண்ணை தாய் தெய்வம் எனவும் கொள்ளலாம். ஆனால், மெல்லிய உருவம் கொண்ட பெண் என்பதால், சிந்துச் சமவெளியின் ‘ஆடல் பெண்’ எனவும் கொள்ளலாம் அல்லது வேளார் குடிப்பெண் எனவும் கொள்ளலாம். இதன் காலம் சுமார் 2900 முதல் 2000 ஆண்டுகள் முன்பு வரை ஆகலாம்.
நெற்கதிர்களுடன், நீர்நிலை ஒன்றின் அருகே பெண்ணைக் காட்சிப்படுத்தி இருப்பதால் இதை “வளமைப் பெண்” என்று கொள்வதே சரியாகும். வேளாண்மை பெருக்கத்தையும், பெண்ணின் வளமையையும் ஒருங்கே காட்டும் இந்தக் காட்சியமைப்பு மனிதன் தாய்மைக்கும் வளமைக்கும் தந்த முக்கியத்துவத்தை விளக்குகிறது.
பெண்ணை வளத்திற்குரியவளாகப் பார்த்த மனிதன், அவளை அச்சமூட்டுபவளாகவும் பார்த்தான். “சூர்”, “அணங்கு”, “பேய்” என்று சங்க காலத்தில் அச்சம் தரும் வணக்கத்துக்குரியவள் என்றே பெண் தெய்வங்கள் குறிப்பிடப்படுகின்றன. சூர் என்பவள் அழகிய, மயக்கம் தரும் இளம் பெண்; அவள் மலையில், சுனையில், அருவியில் இருக்கிறாள் என்று கருதினார்கள். “சூர்ச்சுனை”- சூர் வாழும் சுனை, “சுடர்விடும் பசும்பொன் சூர்ப்பமை முன்கை”- அழகிய பொன் வளையணிந்த சூர், என்று சூர் குறித்து சங்க இலக்கியங்களில் பல குறிப்புகள் உள்ளன. இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் சூர் இருப்பதாக எண்ணி அவளை வணங்குகிறான் தமிழன். அணங்கும் இதே போல கடல் துறை, குகைகள்,மலைகள் என்று வாழ்பவளாகச் சித்தரிக்கிறான். “அணங்கு அரும் கடவுள்”- கடவுளைப் போன்ற அழகிய அணங்கு என்று அவளையும் வழிபடுகிறான்.
அதே போல “பேய்” என்று தனக்கு அச்சமூட்டும் பெண் வடிவையும் வணங்கியுள்ளனர் சங்கத்தமிழர். தொடக்க நிலை சங்க கால சமுதாயத்தில் இவ்வகைப் பெண்களையே வணங்கியுள்ளனர். இதன் பின் “பாவை” வழிபாடு தோன்றியிருக்க வேண்டும். அயிரை மலை (ஐவர் மலை)- பகுதியில் வணங்கப்பட்ட ‘கொல்லிப் பாவை’ உண்டு என்று சங்க இலக்கியம் காட்டுகிறது. பாவை என்பது மண்ணால் செய்யப்பட்ட சிறு சிற்பமே. பாவை பிற திணை நிலப்பகுதிகளில் மணற்சிற்பமாகச் செய்யப்பட்டாலும், கொல்லிப் பாவை மட்டும் “எழுதணிப் பாவையாக, வினைமாண் பாவை, கடவுள் எழுதிய பாவை” உள்ளது என்று சங்க இலக்கியக் குறிப்புகள் சொல்கின்றன. இந்தக் கொல்லிப் பாவையின் வளர்ச்சியே எட்டாம் நூற்றாண்டில் 16 கைகளையுடைய கொற்றவை வழிபாடாக, பெரும் கொற்றவைச் சிற்பமாக அந்தப் பகுதியில் இன்றும் உள்ளது. சூலி- சூல் கொண்ட பெண் என்றும் வழிபடப்பட்டாள் பெண்.
மூத்தோள், பழையோள் என்ற தவ்வைத் தாயின் வழிபாடும் பழந் தமிழரிடம் உண்டு. தமிழரின் மூத்த தெய்வமான தவ்வை திருவள்ளுவர், ஔவையார் என்று புலவர்களால் பாடப்பட்டவள். பேரங்கியூர், தென் சிறுவலூர் போன்ற இடங்களில் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தவ்வைச் சிற்பங்கள் கிடைத்துள்ளன. செழித்த மார்பு, பருத்த வயிறு, பெரும் தொடைகள் என்று வளமையின் குறியீடாகவே தவ்வை சிற்பம் கிடைக்கிறது. அருகே அவளது குழந்தைகளாக மாந்தன் மாந்தி இருவரும் உள்ளனர். காக்கைக் கொடியோள் இவள். பெரும்பாலும் தனியாகவோ, எழுவர் அன்னையரில் ஒருவராகவோ இருக்கிறாள்.
நந்திவர்ம பல்லவனின் குலதெய்வமாக வழிபடப்பட்டிருக்கிறாள் தவ்வைத்தாய். அதன் பின்னும் பிற்காலச் சோழர் காலம் வரை தவ்வை வழிபாடு இருந்திருக்கிறது. தமிழகம் முழுக்கவே தவ்வை வழிபாடு இருந்திருக்கிறது. கி.பி. 6-11ஆம் நூற்றாண்டு வரையிலான தவ்வை சிற்பங்கள் விழுப்புரம், திருச்சி, தஞ்சைப் பகுதிகளில் உண்டு. ஆனால் அதன் பின் வழிபாடு குறையத் தொடங்கி இன்று பெரும்பாலும் கோயில்களுக்கு வெளியே, வயல்வெளிகளில் வீற்றிருக்கிறாள் தாய். காஞ்சி கைலாசநாதர் கோயிலில் தனி சந்நிதி பெற்றவளுக்கு இன்று இந்த நிலை.
சோழரின் சிறப்பு பெண் தெய்வங்கள் என்ற இடத்தைப் பெற்றவர்கள் இருவர்- அவர்களது போர்த்தெய்வமான நிசும்பசூதனி மற்றும் காரைக்கால் அம்மை. திருவாலங்காடு செப்புப் பட்டயம் “சும்பன் நிசும்பன் என்ற இரு அசுரர்களை அழித்தொழித்த நிசும்பசூதனியின் சிற்பம் தஞ்சையில் நிறுவப்பட்டது. அவளது திருவடி வணங்கியதால், கடல்சூழ் உலகை ஆள்வதை மாலை சூடுவது போல எளிதாக்கிக் கொண்டான்” என்று தன் முப்பாட்டன் விஜயாலய சோழன் (846-880) எடுப்பித்த நிசும்பசூதனி கோயில் குறித்து திருவாலங்காட்டு செப்பேட்டில் சமஸ்கிருத மொழியில் பொறித்து வைத்தான் முதலாம் இராசேந்திரன்.
சோழரின் குல அன்னையாக, அவர்கள் போர் முரசு கொட்டிய போதெல்லாம் வணங்கப்பட்டு வந்தவள் இந்த அன்னை. தங்கள் வெற்றிக்குக் காரணம் தேவியே என்று நம்பினார்கள். ஆயுதங்களை ஏந்திய எட்டுக் கைகள், நெருப்பிப் பிழம்பான கூந்தல், பிரேத குண்டலம், காலடியில் அசுரன் அன்று போர்க் கோலத்தில் காட்சி தரும் நிசும்பசூதனிதான் சோழருக்குப் பெரும் சாம்ராச்சியத்தைக் கட்டமைக்க உதவியவள். இன்று உருமாறி பத்ர காளியம்மனாகக் காட்சி யளிக்கிறாள்.
கம்போடியாவின் பாந்தே கோயில் முதல் பல சோழர் காலக் கோயில்கள் வரை நீக்கமற பேயுருவில் நிறைந்திருப்பவர் காரைக்கால் அம்மை. மெலிந்த தேகம், வற்றிய உடல், வெளித்துருத்தும் கண்கள், சடைக் கூந்தலுடன் சிவபெருமான் ஆட, கையில் தாளத்துடன் நிற்கும், அமர்ந்திருக்கும் காரைக்கால் அம்மை வழிபாடு தமிழரின் தனிச் சிறப்பு. மழை வேண்டி மாரியம்மன், கோபம் கொண்ட காளியம்மன், திரௌபதி அம்மன், கடும்பாடி அம்மன், அங்காள பரமேசுவரி அம்மன் என்று இன்றும் பெண் வழிபாடு பல்வேறு வடிவங்களில் நம்மிடம் உண்டு. ஏன், ஆங்கிலேயர் போருக்கு “டென்ட்” அமைத்து வணங்கிய இடங்களில் இருந்த டென்ட் மாரியம்மன் இப்போது தண்டு மாரியம்மனாகவே உருமாறியிருக்கிறாள்.
பெண்ணை அன்று முதல் இன்றுவரை வணக்கத்துக்குரியவளாகவே வைத்திருக்கிறது உலகம். ஆனால், சமூகத்தில் அவளுக்கான இடம் இன்றளவும் சரிவர அமையவில்லை. பெண்ணை வணங்கும் அதே சமூகம் அவளை அடக்கி ஒடுக்கி அவளது உடல், உள்ளம் மேல் ஆதிக்கம் செலுத்துகிறது. பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு நாளும் போராடும் பெண்கள் தம் உருவான பெண் கடவுளரை சமூகம் இன்றும் வணங்கி வருவதை நினைத்துப் பெருமிதம் மட்டுமே கொள்ளலாம். சம உரிமையும், பெண் விடுதலையும் கிடைக்க இந்தப் பெண் தெய்வங்களை வேண்டுவது தவிர நாம் செய்ய வேண்டியது வேறொன்றும் இல்லை!