ஆறு வயதில் குப்பை பொறுக்கியவர் ராஜேஸ்வரி. இன்று அவர் ஒரு அரசு ஊழியர்; இந்திய அளவிலான ஊழியர் சங்கம் ஒன்றிற்குத் தலைவர்; பெண்ணுக்கு விடுதலை முக்கியம் என்று முழங்குபவர்; வடசென்னையின் நெரிசல் மிக்க புளியந்தோப்பில் வாழ்ந்துகொண்டு பெண் உரிமைக்கு குரல் கொடுப்பவர். பட்டியல் இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அனைவருக்குமான போராளி என்கிறார் அவர்.
ராஜேஸ்வரியின் தந்தை இளம் வயதில் இறந்துபோனார். அவருடன் பிறந்தவர்கள் இரண்டு அண்ணன் கள், இரண்டு அக்காக்கள். அனைவரை யும் ராஜேஸ் வரியின் தாய்தான் உழைத்துக் கரை சேர்த் தார். கணவர் இறந்தவுடன் ராஜேஸ் வரியின் தாய் சாணி அள்ளச் சென்றார். அவருடன் கடைக்குட்டியான ராஜேஸ்வரியும் போனார். பிறகு அவர்கள் குப்பை பொறுக்கினார்கள். ஒரு கோப்பை கருப்பு காபியும், இரண்டு பொறையும்தான் அவர்களுக்குக் காலை உணவாக இருந்தது. பள்ளியில் வழங்கும் மதிய உணவு ஒரு நாளின் பசி ஆற்றியது.
பள்ளி இறுதித் தேர்வு முடியும் வரை குப்பை பொறுக்கிக்கொண்டு இருந்தார் ராஜேஸ்வரி. இதனால் பள்ளியின் சக மாணவர்கள் அவரைக் கேலி பேசினார்கள். ‘அவர்கள் உழைப்பின் மதிப்பு அறியாதவர்கள்’ என்று ஆறுதல் கூறினார் தாய். தன் உழைப்பால் குழந்தைகளுக்குக் கல்வி கொடுத்து உயர வைத்தார் அவர். மகன் வயிற்றுப் பேத்தி படித்து மருத்துவர் ஆகும் வரை குப்பை பொறுக்கும் தொழிலைத்தான் செய்து வந்தார் ராஜேஸ்வரியின் தாயார்.
படிப்புடன் விளையாட்டுப் போட்டிகளிலும் ஆர்வம் செலுத்தினார் ராஜேஸ்வரி. கால்பந்து விளையாட்டு என்றால் அவருக்குக் கொள்ளைப் பிரியமாம்.
ராஜேஸ்வரிக்கு கல்லூரிக் காலத்திலேயே திருமணம் முடிந்தது. பிறகு அவர் பல அரசு அலுவலகங்களில் தற்காலிகப் பணிகளில் இருந்தார். ஒரு ஐஏஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்பதே ராஜேஸ்வரியின் கனவாக இருந்தது. தொடர்ந்து போட்டித் தேர்வுகள் எழுதினார். அறிவுசார் சொத்துரிமை நிறுவனத்தில் அவருக்கு ஒரு அலுவலர் பணி கிடைத்தது.
அரசு வேலை கிடைத்து விட்டது. இனி சொந்த வீடு வாங்க வேண்டும், கார் வாங்க வேண்டும் என்றெல்லாம் ராஜேஸ்வரி முடங்கிவிடவில்லை. ஊழியர்களுக்காக தன் நிறுவனத்தில் சங்கம் இல்லை என்பது அவருக்கு மிகுந்த குறையாக இருந்தது. உடனே இந்திய அளவில் ஒரு ஊழியர் சங்கத்தை அவர் தொடங்கினார். அதில் இப்போது பட்டியல் இனப் பிரிவினருக்கான சங்கத்தின் தலைவராக இருக்கிறார் ராஜேஸ்வரி.
’பட்டியல் இன மக்களுக்காக மட்டும் நான் போராடவில்லை. பொதுவாக இட ஒதுக்கீடு என்பது அரசுப் பணிகளில் சரியாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று நான் தொடர்ந்து போராடுகிறேன்’ என்ற கூறுகிறார் ராஜேஸ்வரி.
இட ஒதுக்கீடு வேண்டுமா, வேண்டாமா என்ற விவாதம் இப்போது சூடு பிடித்திருக்கும் நிலையில், ‘இட ஒதுக்கீடு வேண்டும் என்று ஏன் அம்பேத்கர் போராடினார் என்று தெரியுமா? இப்போது இந்தச் சமூகம் சம நிலை அடைந்துவிட்டதா சொல்லுங்கள்’ என்று நம்மை மடக்குகிறார் ராஜேஸ்வரி.
ஜாதிகள் இருக்கும் வரை இட ஒதுக்கீடு அவசியம் என்று கூறுகிறார் ராஜேஸ்வரி. ஜாதி அற்ற சமூகம் உருவாக வேண்டும் என்று கனவு காண்கிறார் அவர்.
’பெண்தான் அடிப்படை. அங்கிருந்துதான் உயிர் உருவாகிறது. பெண்ணிடமிருந்துதான் ஜாதி ஒழிப்பு தொடங்க முடியும். பெண் நினைத்தால் ஒரு மனிதனின் ஜாதியை மறைக்க முடியும். மாற்ற முடியும். அழிக்கவும் முடியும்’ என்று புதிய பரிமாணத்தைக் காட்டுகிறார் ராஜேஸ்வரி.
சமூகத்தின் எந்தப் பகுதியில் அநீதி நடந்தாலும் அங்கு தான் முதல் ஆளாக நிற்பேன் என்று அடித்துக் கூறுகிறார் ராஜேஸ்வரி. பெண்களின் உயர்வு இப்போது தலையாயக் கடமை என்று கண்களில் ஒளியுடன் விவரிக்கிறார் அவர்.
‘பெண் உரிமை முக்கியமா, பெண் விடுதலை முக்கியமா என்று கேட்டால் முதலில் பெண் விடுதலைதான் முக்கியம் என்று நான் கூறுவேன். மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினத்தன்று மட்டும் ஹோட்டலுக்குப் பெண்களைப் போகச்சொல்வது, பணம் செலவழிக்க உரிமை கொடுப்பது என்று ஆகிவிட்டது. கோலப் போட்டியுடன் பெண் உரிமை என்பதை முடித்துக்கொள்கிறார்கள்’ என்று சாடுகிறார் ராஜேஸ்வரி.
‘இதுதான் பெண்ணின் எல்லை என்று யாரும் முடிவு எடுக்க வேண்டாம். ஒரு பெண்ணுக்கு தன் வாழ்வை முடிவு செய்துகொள்ளும் அத்தனை அறிவும் இருக்கிறது’ என்று வாதாடுகிறார் அவர்.
பி.காம். படித்திருக்கும் ராஜேஸ்வரி, சட்டமும் படித்து வருகிறார். சட்டம் பயின்றால் பல அம்சங்களைத் தெரிந்துகொள்ள முடியும் என்பது அவருடைய நிலைப்பாடு. மேலும் பல அம்சங்களை மாற்ற முடியும் என்பதும் அவருடைய இலக்கு.
இப்போது ராஜேஸ்வரிக்கு 47 வயது. அவருடைய கணவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
‘என் கணவர்தான் என் அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருக்கிறார்’ என்று பெருமை கொள்கிறார் அவர்.
ராஜேஸ்வரியின் ஒரு மகன் சிஏ படித்திருக்கிறார். இன்னொரு மகன் காட்சி ஊடகத் துறையில் பட்டம் பெற்று வெளிநாடு சென்று படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருக்கிறார்.
ராஜேஸ்வரிக்குப் புகைப்படம் எடுப்பது என்பது மிகவும் விருப்பமான ஒரு பொழுதுபோக்கு. சிறு வயதில் ஒரு கேமரா கிடைக்காதா என்றுகூட ஏங்கியிருக்கிறாராம். இப்போது அவருடைய கனவை நனவாக்கும் விதத்தில் அவருடைய மகன் காட்சி ஊடகத் துறையில் பயின்று மேலே வருவது அவருக்குப் பெருமையாக இருக்கிறதாம். எந்தச் சமூகத்தில் இருக்கிறோம், எந்தப் பிரிவில் இருந்து போராடுகிறோம் என்பது இல்லை. முயற்சி இருந்தால் யார் வேண்டுமானாலும் உழைத்து மேலே வர முடியும் என்பதற்கு ராஜேஸ்வரி ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார்.
புத்தரின் வழியிலும், அம்பேத்கரின் அறிவாற்றலிலும் ஒளியைக் காணும் ராஜேஸ்வரி இன்னும் பலருக்கு தீபம் ஏற்றுவதே தன் வாழ்வின் இலட்சியம் என்று கூறி முடிக்கிறார்.
– ராஜேஸ்வரி