day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

பெண்ணை மதிக்க ஆணுக்குக் கற்றுத்தருவோம்

பெண்ணை மதிக்க ஆணுக்குக் கற்றுத்தருவோம்

பெண்களுக்கு நீதி மறுக்கப்படும் போதும்,பெண்கள் எங்கெல்லாம் அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாகிறார்களோ அங்கெல்லாம் ‘மனிதி’ அமைப்பினரைப் பார்க்கலாம். பெண்ணுரிமைக்காகவும் பெண்கள்மீதான வன்முறைகளை எதிர்த்தும் தொடர்ந்து குரல்கொடுத்துவருகிறது ‘மனிதி’ அமைப்பு. வெறும் போராட்டத்துடன் மட்டும் தங்கள் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ளாமல் தீர்வு நோக்கிய செயல்பாடுகளிலும் இந்த அமைப்பினர் ஈடுபட்டுவருகின்றனர். மனிதி அமைப்பைச் சேர்ந்த செல்வியைப் ‘பெண்களின் குரல்’ வாசகிகளுக்காகச் சந்தித்தோம்.
அரசியல் சார்ந்த அறிவைப் பெண்களிடத்தில் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டு ‘மனிதி’ அமைப்பு செயல்படுகிறது. அரசியல் ஆளுமைகளாகப் பெண்களை வளர்த்தெடுப் பதையும் அரசியல் சார்ந்த விழிப்புணர்வைப் பெண்களுக்கு ஏற்படுத்துவதையும் முக்கிய நோக்கங்களாகக் கொண்டு இவர்கள் செயல்பட்டுவருகின்றனர்.
“இவற்றைச் செய்துவிட்டால் தங்கள் உரிமைகளைப் பெறுவதற்கான போராட்டக் களத்தைப் பெண்களே அமைத்துக்கொள்வார்கள். பெண்கள் போராட்டக் களத்திற்கு வந்துவிட்டால் அவர்களை அவ்வளவு எளிதாக அந்தப் போராட்டக் களத்தில் இருந்து வெளியேற்றிவிட முடியாது. பெண்களின் போராட்டம் என்பது உறுதியானது. தண்ணீர் பிரச்சினை என்பது எல்லோருக்குமான பிரச்சினை. ஆனால், அந்தப் போராட்டத்தைப் பெண்கள்தான் கையில் எடுக்கிறார்கள். ஏன் ஆண்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளக்கூடாதா? அவர்களுக்குத் தண்ணீர் தேவைப்படாதா? ஆண்களும்தான் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும். இதைப் பெண்கள் மத்தியில் எடுத்துச்சொல்ல வேண்டும்” என்று சொல்லும் செல்வி, அதிகப்படியான பெண் ஆளுமைகளை உருவாக்க வேண்டும் என்பதே தங்களது குறிக்கோள் என்கிறார்.
பெண்களுக்கு மட்டுமே குரல் கொடுப்பது என்றில்லாமல், விவசாயிகள் போராட்டம் முதற்கொண்டு எல்லாவிதமான போராட்டங்களுக்கும் இவர்கள் துணைநிற் கிறார்கள்.
“எல்லாத் தளங்களிலும் பெண்கள் முடக்கப் படுகிறார்கள். உதாரணத்துக்கு, பெண் கொத்தனார் என்று எங்காவது இருக்கிறார்களா? அவர்களுக்குத் திறமை இருந்தாலும் பெண் என்பதால் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அதேபோன்று எத்தனையோ பெண்கள் சிவில் இன்ஜினீயராக இருக்கிறார்கள். அவர்களை நம்பி யாரும் வேலை கொடுப்பதில்லை. ஊதியம் வழங்குவதிலும் பாரபட்சம் காண்பிக்கப்படுகிறது. ஒரே மாதிரியான வேலையைச் செய்தாலும் ஆண்களைவிடப் பெண்களுக்குக் குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வீட்டிலும் பெண்களின் வருமானம் கூடுதல் வருமானமாகத்தான் பார்க்கப்படுகிறது. சில வீடுகளில் வளர்ப்பு முறையிலும் ஆண், பெண் என்ற பாகுபாட்டைப் பார்க்க முடிகிறது. மேல்படிப்பு என்று வரும்போது ஆண்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்” என்கிறார் செல்வி.
எந்தவொரு செயலையும் ஆண் செய்தால் வேறு வகையிலும் பெண் செய்தால் ஒழுக்கக்கேடாகவும் பார்க்கிற கண்ணோட்டம் மாற வேண்டும் என்கிறார் செல்வி.
“ஆண்கள் குடித்தால், புகை பிடித்தால் அது உடல் நலத்துக்குக் கேடு என்று சொல்லும் சமூகம் அதையே பெண் செய்தால் ஒழுக்கக்கேடு என்று சொல்கிறது. உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய எந்தப் பழக்கமும் ஆணுக்கும் நல்லதல்ல, பெண்ணுக்கும் நல்லதல்ல. ஆனால், ஒரு செயலைப் பெண் செய்யும்போது அந்தக் குடும்பத்துக்கே அவமானமாகவும் ஒழுக்கக்கேடாகவும் பார்க்கிற பார்வையை மாற்ற வேண்டும். அதேபோலத்தான் ஆடை அணிவதும். ஒவ்வொரு பெண்ணும் அவரவர் வசதியைப் பொறுத்து ஆடை அணிகிறார். ஆனால், இங்கே உடையை வைத்து ஒருவரின் நடத்தையைக் குறைசொல்கிறார்கள். நம் மாநிலத்துக்கு அருகில் உள்ள கேரளாவை எடுத்துக்கொள்வோம். அங்கிருக்கும் பெண்கள் முண்டு அணிகிறார்கள். அதை யாரும் ஆபாசமாகப் பார்ப்பதில்லை. பெண்களும் வெட்கப்படுவதில்லை. அதனால் எல்லாமே நம் பார்வையில்தான் இருக்கிறது. இங்கு பெண்கள் துப்பட்டா போடாததால்தான் ஆண்கள் தவறுசெய்கிறார்கள் என்று பெண்கள் மீது பழியைப் போடுகிறார்கள். முன்பெல்லாம் சுடிதார் என்பது மேல்தட்டு மக்கள் அணியும் ஆடையாகத்தான் இருந்தது. ஆனால், இன்று அரசே பள்ளிகளில் சுடிதாரை யூனிஃபார்மாக வைத்திருக்கிறது. பண்பாடோ, பாரம்பரியமோ எதுவாக இருந்தாலும் அது சமுதாயத்துக்கோ தனி மனித முன்னேற்றத்திற்கோ வளர்ச்சிக்கோ பக்கபலமாக இருக்கிறது என்றால் அது கண்டிப்பாகத் தேவை. அதுவே தனிமனித வளர்ச்சிக்கும் சமுதாய முன்னேற்றத்துக்கும் இடையூறாக இருந்தால் அதைத் தூக்கிப்போடுவதில் தவறேதும் இல்லை” என்று சொல்கிறார் செல்வி.
ஒருவருடைய தனிப்பட்ட உரிமை, மூன்றாவது நபரைக் காயப்படுத்துகிறது, பாதிப்படையச் செய்கிறது என்றால் மட்டுமே கேள்வி கேட்க முடியுமே தவிர மற்றபடி அவரவர் உரிமையில் யாரும் தலையிட முடியாது என்று சொல்லும் செல்வி, பெண்ணுரிமையையும் மனித உரிமையாகத்தான் பார்க்க வேண்டும் என்கிறார்.
பெண்களை எப்படி நடத்த வேண்டும் என்று ஆண்களுக்குப் பாடம் எடுக்க வேண்டும் என்று சொல்கிறார் செல்வி.
“குடும்பத்திலும் பொதுவெளி யிலும் பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்று ஆண்களுக்குக் கற்றுத்தர வேண்டும். காலங்காலமாகப் பெண்களைப் பொருளா கத்தான் பார்க்கிறார்கள். தகவல் தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிற இந்தக் காலகட்டத்திலும் நிலைமை மாறவில்லை. பெண் என்றால் இயற்கையிலேயே பலவீனமானவள் என்று நிறையப் பேர் பேசுவதை நாம் பார்த்திருக்கிறோம். ஒரு பெண்ணே தன்னை உடலளவில் பலவீனமானவள்தான் என்று நினைத்துக்கொள்வது வேதனையானது. தங்கள் ஆற்றலை உணராத அளவுக்குத்தான் சில பெண்கள் இருக்கிறார்கள். திரைப்படத்தில் பெண்ணை அடிக்கிற ஆணை ஹீரோ என்று கொண்டாடும் மக்கள், அதே படத்தில் ஆணை அடிக்கிற பெண்ணை வில்லியாகச் சித்தரிக்கிறார்கள். இது மோசமான அணுகுமுறை.
பெண்ணுக்கு யார் துன்புறுத்தலை ஏற்படுத்துகிறார்களோ அவர்களை விட்டுவிட்டு, துன்புறுத்தலுக்கு ஆளானவர்களை மிரட்டுவது, குறை சொல்வதுதான் இங்கே அதிகமாகக் காணப்படுகிறது. ஆறு மணிக்கு மேல் அங்க உனக்கென்ன வேலை, ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் உனக்கென்ன வேலை என்று பாதிக்கப்பட்டவர்களைக் குற்றவாளியாக ஆக்குவதும் இங்கு நடக்கிறது” என்று சொல்லும் செல்வி, சமூக மாற்றம்தான் தனி மனிதனை மாற்றும் என்கிறார்.
“ஒட்டுமொத்த சமூகமும் சேர்ந்துதான் ஒரு தனி மனிதனுடைய உளவியலை உருவாக்குகிறது. ஆணோட உளவியலையோ பெண்ணோட உளவியலையோ சமூகம்தான் உருவாக்குகிறது. சமூகத்துக்கு இந்தக் கருத்தைச் சரி, தவறு என்று எடுத்துச்சொல்வது அரசாங்கத்தின் கடமை. பள்ளி, கல்லூரி மூலமாகச் சொல்லலாம். விளம்பரம் மூலமாகவும் சொல்லலாம். உதாரணமாக, பெண் கல்வியை ஊக்கப்படுத்துவதற்கு என்ன செய்தார்கள்? எட்டாம் வகுப்புவரை படித்தால் கல்வி உதவித்தொகை என்று அறிவித்தார்கள். அதனால் கல்வி கற்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகமானது. அரசு நினைத்தால்தான் இந்தச் சமூகத்தில் மாற்றங்களைக் கொண்டுவர முடியும். சட்டம் மட்டும் போட்டால் போதாது; அது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்வது மிகவும் அவசியம்” என்று சில தீர்வுகளை முன்வைத்து முடிக்கிறார் செல்வி.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!