உலகையே படைத்த, படைக்கும் பெண்ணினம் இன்றும் அவள்தம் உரிமைக்காக போராடிக்கிடப்பது தான் மாபெரும் வேடிக்கை. காவியத்திலும், கவிதையிலும் பெண் சிறப்பாக பேசப்படுவதை கண்டு பெண் இந்த மண்ணில் போற்றப்படுவதாக எண்ணி நாம் ஏமாறுகின்றோம்! இந்த நிலை மாறவே அம்பேத்கரும் பெரியாரும் அன்று போராடினர். இன்றும் பல்வேறு தலைவர்களும் போராடிக்கொண்டிருக்கின்றனர்!
ஆனால் பெண்களை பொம்மைகளாக மாற்றி மூலையில் அமரவைக்க பல்வேறு திரைப்படங்கள் சாதிய சாயலோடு வந்த வண்ணம் உள்ளது. இதற்கு சான்று தேவராட்டம் மற்றும் திரௌபதி போன்ற திரைப்படங்கள்.
சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி”
என்ற ஔவையின் வார்த்தைப்படி – சாதி இரண்டொழிய வேறில்லை!
ஆம் இட்டோர் பெரியோர், இடாதோர் சிறியோர்!
இப்படி பொருள்பதிந்த அறிவுரைகளை புறம்தள்ளி விட்டு – தாங்கள் சார்ந்துள்ள சாதியை காக்க பெண்ணை பகடைக்காயாக்க நினைக்கிறார்கள் சிலர்.
இதில் தேவராட்டம் படத்தில் தம் சாதியை காக்க ஒருவரின் தலையை தனியாக வெட்டி குளிர்சாதானப்பெட்டியில் வைக்கும் காட்சி படமாக்கப்பட்டது. தன் வீட்டு பெண்ணின் மீது கை வைத்தால் (காதலித்தால்) வெட்டிச்சாய்க்கவேண்டும் என்ற வன்மத்தை விதைத்தது.
இதைத்தொடர்ந்து – தற்போது திரௌபதி என்ற படத்தின் முன்னோட்டம் (Trailer) வெளிவந்துள்ளது.அதில் பாரதியார் அவர்கள் எழுதிய பாடல் வரியை மாற்றி அதை விளம்பரமாக்கியுள்ளனர்.
சாதிகள் இல்லையடி பாப்பா என்ற வரியை மாற்றி சாதிகள் உள்ளதடி பாப்பா என வெளியிடப்பட்டது.
மேலும் எங்க வீட்டு மண்ணைத்தொட்டாலும் விடமாட்டோம் , பெண்ணை தொட்டாலும் விடமாட்டோம் என ஒரு பெண் பேசுவது போல வசனம் வைக்கப்பட்டுள்ளது.
ஒரு வழக்கறிஞர் – நம்ம சாதிப்பெண்ணை காதலிப்பவனை வெட்டிவிட்டு வா.. நான் பார்த்துக்கொள்கிறேன் என்று பேசும் காட்சியும் பதிவாகியுள்ளது.
இரு சாதிகளுக்கு இடையே காதலே வரக்கூடாது என்பதை வன்ம மொழிக்கொண்டு கதையமைந்துள்ளதாகாவே காட்சிகள் அமைந்துள்ளன. எங்க வீட்டு பெண்களை ஏமாற்றி காதலிக்கிறார்கள். இது நாடகக்காதல் என்கின்றனர்.
இப்படியான சமூக பதட்டத்தை உண்டாக்கும் காட்சிகளை படமாக்கவேண்டிய காரணமென்ன? இவர்கள் சாதியை காக்கிறோம் என்ற பெயரில் பெண்ணை அவமானப்படுத்துகிறார்களா? எதிரில் தம்மை நாடி காதலிக்க வரும் ஆண் உண்மையில் காதலிக்கிறானா அல்லது ஏமாற்றுகிறானா என பகுக்கக்கூடத் தெரியாத முட்டாளா பெண்?
ஜூன்ஸ் பேண்ட், கூலிங்கிளாஸை பார்த்து பெண் மயங்கிவிடுகிறாள் என்றால் அத்தனை தரமற்றவளா பெண்? சாதிப்பார்த்து மதம் கேட்டு வருவதற்கு பெயர் காதலா? உலகம் தோன்றும்போதே தோன்றின காதலை எதிர்க்கிறதா இந்த கூட்டம்? எந்தவோரு முடிவையும் அப்பா, அண்ணன், தம்பி, கணவன் தான் எடுப்பான் என்றால் இவர்கள் பார்வையில் பெண் ஓர் உயிரற்ற நாற்காலி அல்லது பொருளா? வேதனையாகவும் வெட்கமாகவும் இருக்கிறது இப்படியான சிந்தனைகள்.
உலகத்தோற்றத்தில் உயிரினத்தில் அத்தனை விலங்கினத்திலுமே பெண் இனம் தானே ஆண் இனத்தை பாதுக்காக்கிறது, அப்படியிருக்க மனித இனத்தில் மட்டும் இது மாறுபட்டதா ? வரலாற்றை திரும்பிப்பார்ப்பவர்களுக்கு சரியாய் படிப்பவர்களுக்கு இது புரியும். ஆதியில் பெண் தான் வேட்டையாடினாள், ஆண்களை பாதுகாத்தாள்.அவள்தான் முடிவெடுத்தாள். நாளடைவில் பெண்ணை ஒடுக்க நினைத்த ஆண் சமூகம் அன்பு அக்கறை என்ற பெயரில் அவளை வீட்டீல் அடைத்தது. அவளை ஓரங்கட்ட அவள் சார்ந்த பெண் இனத்திலேயே மாமியார்களையும் , நாத்தனார்களையும் பெண்களையும் கூட்டணிக்கு அழைத்தது.
வருங்காலத்தில் பெண்ணினம் அடிமையாக மாறிவிடும் எனத்தெரியாத பெண்கள் தம்மை ஒடுக்கின, நசுக்கின, ஓரங்கட்டின குடும்பத்தை மற்றும் சமூகத்தை ஏற்றுக்கொள்ள பழகினார்கள்.
அவர்கள் அன்றுத்தொலைத்த சுதந்திரத்தை தான் இன்று வரை நாமெல்லாம் கேட்டுப் போராடிவருகின்றோம்.
ஏட்டளவில் கிடைத்த 33 சதவீதத்தை மகிழ்வோடு பெற்றுக்கொண்டு பொழுதைக்கழிக்கின்றோம். இந்த நிலை மாற வேண்டும். பெண்ணும் சமூகமும் இதை மாற்றவேண்டும். பெண்ணை பகடைக்காயாக பயன்படுத்தும் எண்ணங்களை விதைக்கும் சாதியப்படங்களை அரசு ஒருபோதும் அங்கீகரிக்கக்கூடாது. மேலும் பெண் சமூகமும் விழிப்படைந்து இதுப்போன்ற ஒடுக்குமுறைகளை எதிர்க்க பழக வேண்டும்.
நாட்டின் வளர்ச்சி என்பது பெண்ணின் வளர்ச்சியை பொறுத்தே அமைகின்றது! இதனை வெளிநாடுகளில் நாம் கண்கூடாக கண்டுவருகிறோம். இதனை உணர்ந்தேனும் 50 % இட ஒதுக்கீட்டை அரசியல் உள்ளிட்ட அத்தனை துறைகளிலும் செயல் அளவில் வழங்க அரசு முனையவேண்டும்.
இதுவே தேசத்தின் உண்மையான விடுதலை!