வீட்டில் ஆரம்பித்து அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு குறித்த அச்ச உணர்வில் தான் பெண்கள் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இரவு வேலைக்குச் செல்லும் பெண் பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர் மரண பீதியில் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு வாழ்கிறார்கள்.
கடந்த மாதம் ஹைதராபாத் நகரத்தில் இரவு பணி முடித்து வீடு திரும்பும் வழியில் காமுகர்களால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் படுகொலை செய்து, எரிக்கப்பட்ட கால்நடை மருத்துவரின் மரணம் நெஞ்சை பதற வைத்தது.
டெல்லி, ஹைதராபாத் என்றில்லாமல் நாட்டில் ஆங்காங்கே இது போன்ற தொடர் சம்பவங்கள் நடந்து கொண்டு இருப்பது நமது நாட்டின் கலாச்சாரம்ää வளர்ச்சிக்கு ஆரோக்கியமானதாக இல்லை என்பதை இச்சமூகம் புரிந்து கொண்டு பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய முயற்சி எடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்களுக்கு குற்றவாளிகள் மட்டும் காரணமில்லை. இச்சமுதாயமும், பிரபலங்கள் எனக் கூறிக்கொண்டு பெண்களுக்கு மட்டும் நல்லொழுக்கம் போதித்து வரும் சிலரையும் குறிப்பிடுவது அவசியமாகிறது.
கடந்த மாதம் நடைபெற்ற திரைப்பட விழாவில் பேசிய திரைப்பட இயக்குனர் திரு. பாக்கியராஜ் பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று போதனை செய்தார். அது மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியது.
ஆண் தவறான நடத்தையுடன் இருந்தாலும் முதல் மனைவிக்கு குறை வைப்பதில்லை. ஆனால் பெண்கள் கள்ளக் காதலுடன் இருந்தால் அவளது கணவன் கொலை செய்யப்படுகிறான். பெண்கள் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும். பாதுகாப்புக்கு வாங்கித்தரப்பட்ட செல்போனை பெண்கள் தவறாக உபயோகப்படுத்துகிறார்கள் என்றார். அதற்கும் ஒரு படி மேலே போய் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பெண்களும் மிகப் பெரிய தவறு செய்திருக்கிறார்கள் என்றெல்லாம் பேசினார். இதுபோன்ற கருத்துக்களை திரு.பாக்யராஜ் பேசியதை ஒருபோதும் ஆதரிக்க முடியாது.
பின்னர் தமிழ்நாடு மகளிர் ஆணையத்தால் வழங்கப்பட்ட புகார் நோட்டீசுக்கு திரு. பாக்கியராஜ் நேரில் பதிலளித்து விட்டு, பின்னர் பத்திரிக்கைக்குப் பேட்டி அளிக்கும் போது பெண்களை காயப்படுத்தி விட்டதாக இருந்தாலோ, என்னை யாராவது தவறாக நினைத்திருந்தாலோ அதற்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றார். பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் தான் நான் பேசினேன் என விளக்கமும் அளித்தார்.
பெண்களை எச்சரிக்கை செய்வதும், பாதுகாப்போடு இருங்கள், இரவில் வெளியில் செல்லாதீர்கள், ஆண்களோடு பேசாதீர்கள், இந்த உடை அணியாதீர்கள் என அடுக்கடுக்காக பெண்களுக்கு மட்டும் அறிவுரை வழங்கிடும் திரு. பாக்கியராஜ் போன்றவர்கள் எப்போது ஆண்களுக்கு அறிவுரை சொல்லப் போகிறார்கள்? பெண்களும் ஆண்களும் இவ்வுலகில் சுதந்திரமாய் வாழத் தகுதியானவர்கள் என்று நம் ஆண் பிள்ளைகளுக்கு முதலில் கற்றுக்கொடுப்போம். ஆண்களிடமிருந்து மாற்றம் வரவேண்டும்.அதுவே பெண்கள் மீதான பாலியல் குற்றங்களைத்தடுக்கும்.
– ஜெமிலா