இந்திய ஹாக்கி அணியில் இடம் பெற்றவர் கிறிஸ்டி எலினா.விளையாட்டில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற இவர் தற்போது இந்திய ரயில்வேயில் பணியாற்றி வருகிறார்.அதோடு ஐ.சி.எப் பள்ளியில் ஹாக்கி பயிற்றுநராகவும் இருக்கிறார். அவரிடம் சில கேள்விகள்…
“சிறுவயதில் எல்லோருக்கும் விளையாட்டின்மீது ஆர்வம் இருக்கும். ஆனால், அதையே ஒரு பேஷனாக எடுத்துக் கொண்டு செயல்படுவது என்பது இயலாத காரியம். அதேபோல் வீட்டிலும் இதற்கான அனுமதி என்பது மிகவும் குறைவு. இப்படியான பல சிக்கல்களைத் தாண்டி விளையாட்டை எவ்வாறு தேர்வு செய்தீர்கள்? அதில் ஆர்வம் எப்படி ஆர்வம் வந்தது.?”
“சிறு வயதில் இருந்தே எனக்கு விளையாட்டின்மீது ஆர்வம். அதுமட்டுமல்லாமல் என்னுடைய தந்தை ஒரு (ஹாக்கி) விளையாட்டு வீரர். ஐ.சி.எப். (ICF ) அணியில் கோல்கீப்பராக இருந்துள்ளார். அதனால் அதே விளையாட்டுத்துறையில் என்னையும் தயார்படுத்தினார். குறிப்பாக, ஒவ்வொரு முறையும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்போது என்னையும் உடன் அழைத்துச் செல்வார். அதுமட்டுமல்லாமல் வீட்டிலேயும் பயிற்சி அளிப்பார். அப்படி மேற்கொண்ட அந்த பயிற்சியால் தான் வீராங்கனையாக உருவெடுத் தேன்.”
“ஒவ்வொரு வீட்டிலேயும் ஆண் பிள்ளை களை விளையாட்டுப் போட்டிகளுக்கு அனுமதிப்பார்கள். ஆனால், பெண் பிள்ளைகளை அனுமதிக்கமாட்டார்கள் .அப்படியே அனுமதித்தாலும் ஒரு குறிப்பிட்ட வயதுவரைதான் அனுமதி தருவார்கள்..உங்கள் வீட்டில் எவ்வாறு அனுமதித்தார்கள்?”
“நூறு சதவீதம் எனது குடும்பத்தினர் உறுதுணையாக இருந்தார்கள். எங்களுடைய வீட்டிற்கு அருகே உள்ளவர்கள் எனது குடும்பத்தினரிடம் பெண் பிள்ளையைப்போய் ஹாக்கி விளையாட வைக்கிறீர்களே காயம் ஏற்பட்டால் என்ன ஆவது என்றெல்லாம் சொல்வார்கள்.அதற்கு எனது பெற்றோர் விளையாட்டு என்றால், அடிபடத்தான் செய்யும். அப்பொழுதுதான், இன்னும் வலிமையோடு இருப்பாள் என்று கூறுவார்கள். எனக்கு சிறு, சிறு காயங்கள் ஏற்பட்டாலும் அதெல்லாம் ஒன்றும் ஆகாது. சரியாகிவிடும் என்று என்னை சமாதானப்படுத்துவார்கள் என்னுடைய பெற்றோர். குறிப்பாக, நான் சிறிய வயதிலேயே மிகவும் பலவீனமாக இருந்தேன். என் பெற்றோருடைய அறிவுரையாலும், ஊக்கத்தாலும்தான் நான் தைரியமுள்ளவளாக வளர்ந்தேன்.”
” எந்த வயதில் நீங்கள் போட்டிகளில் கலந்து கொண்டீர்கள்?”
“5 வயது இருக்கும்போது, மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டேன். நான் தனியாகத்தான் பயிற்சி செய்துகொண்டிருந்தேன். என்னுடைய தந்தை, அசோக் என்பவரை அறிமுகப்படுத்தினார். அவர் தெற்கு ரயில்வேயில் பணிபுரிந்து வந்தார். எக்மோர் கிளப் பெண்கள் டீமில் என்னை சேர்த்துவிட்டார். குழு உடனான பயிற்சி என்று எடுத்துக்கொண்டால் அங்கிருந்துதான் என்னுடைய ஹாக்கி பயணம் தொடங்கியது. அப்பொழுது நான் நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். சீனியர்களுடன் தான் விளையாடுவேன். அசோக் சார் சீனியர் டீம் வைத்திருந்ததால் அவர்களுடன் தான் விளையாடுவேன். பிறகு 5-ம் வகுப்பு படிக்கும்போது, புனேவில் நடந்த சப்-சீனியர் இன்டியன் கேம்ப் போட்டியில் கலந்து கொண்டேன். இது தான் என்னை ஹாக்கி விளையாட்டுக்குள் முழுமை யாகக் கொண்டுவந்தது என்று சொல்லலாம்.”
“இதுவரைக்கும் எத்தனை போட்டிகளில் கலந்து கொண்டுள் ளீர்கள்? எவ்வளவு மெடல்கள் வாங்கியுள்ளீர்கள்?”
“எத்தனை போட்டிகளில் கலந்து கொண்டுள்ளேன் என்று குறிப்பிட்டு என்னால் சொல்ல இயலவில்லை. தெற்கு ரெயில்வேயில் வேலை கிடைப்பதற்கு முன்பு வரை சுமார் 25 தேசியப் போட்டிகளில் விளையாடி உள்ளேன். 2001 முதல் 2016 வரை சுமார் 15 வருடங்கள் விளையாடி உள்ளேன். சீனியர் போட்டி என்று வரும்போது பெடரேஷன் கோப்பை, சீனியர் நேஷனல் கோப்பை, ஆல் இந்தியா டோர்னமெண்ட் உள்ளிட்ட போட்டிகளில் விளையாடி உள்ளேன். தற்போதும் விளையாடிக்கொண்டுதான் இருக்கிறேன். நான் இன்னும் விளையாடுவதை நிறுத்தவில்லை. இப்போதும் மாஸ்டர்களுக்கான போட்டிகள் நடைபெறுகிறது. அதில் விளையாடி வருகிறேன். மாஸ்டர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் 3 தேசியப் போட்டிகளில் விளையாடி உள்ளேன். இரண்டு சர்வதேச அளவிலான போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். இந்த இரண்டு போட்டிகளில் மெடல் வாங்கி இருக்கிறோம். யுரோப்பியன் மாஸ்டர்ஸ் போட்டியில் வெண்கலமும், ஆஸ்திரேலியன் மாஸ்டர்ஸ் போட்டியில் வெள்ளிப் பரிசையும் பெற்றுள்ளோம். தேசியப் போட்டியிலும், சர்வதேச அளவிலான போட்டியிலும் பல பதக்கங்களைப் பெற்றுள் ளோம்.”
“இத்தனை போட்டிகளில் கலந்து கொண்டு, பதக்கங்கள் அதிகமாக பெற்றுள்ள நீங்கள் ஹாக்கியில் மறக்க முடியாத ஒரு அனுபவத்தை சொல்ல முடியுமா?”
“எல்லா போட்டிகளும் எனக்கு மறக்க முடியாத போட்டிகள்தான். இருந்தாலும் முதன் முதலாக யுரோப்பியன் மாஸ்டர்ஸ் போட்டியில் கலந்து கொண்டது மிகவும் மறக்க முடியாத போட்டியாக அமைந்தது. ஏனென்றால் அங்கு வந்திருந்த எல்லோரும் மாஸ்டர்கள்தான். அதிலும் இன்டர்நேஷனல் கேம். அதில் வெண்கலப் பதக்கம் பெற்றது மறக்க முடியாத அனுபவம்.”
“உங்களுக்கு வேலை பிடித்திருக்கிறதா அல்லது ஹாக்கி பயிற்சியாளராக இருப்பது பிடித்திருக்கிறதா ?”
“இரண்டையும் பிரித்துப்பார்க்க முடியாது.என்னைப் பொருத்தவரையில் ஹாக்கி விளையாடுவது ரொம்ப பிடிக்கும்.பல சிறுவர்களை ஹாக்கி வீரர்களாக மாற்ற வேண்டும் என்பது என்னுடைய ஆசை. தமிழ்நாடு ஹாக்கி வீராங்கனைகள் பலர் ஒரு காலகட்டத்திற்கு பிறகு வீட்டிலேயே இருந்துவிடுகிறார்கள். ஒரு சிலர் போட்டிகளில் கலந்து கொண்டாலும் ரிசல்ட் குறைவாகத்தான் இருக்கிறது. அதை மாற்ற வேண்டும் என்று நான் விரும்பினேன். அதனால்தான் நான் பயிற்சிக் காகப் படிக்கிறேன். நான் அப்டேட்டாக இருந்தால்தான், என் மாணவர்களுக்குப் புதிய விஷயங்களை சொல்லிக்கொடுக்க முடியும். அப்போதுதான் என்னால் ஒரு மாற்றத்தை உருவாக்க முடியும்.”
“வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளை அரசு கொண்டாடு கிறது. ஆனால், அதற்கு முன் அவர்களுக்குத் தேவையான பயிற்சி மற்றும் இதர வசதிகளை செய்து கொடுக்கிறதா?”
“பயிற்சியின் போதே வீரர், வீராங்கனைகளுக்குத் தேவையான பண வசதியை அரசு செய்து கொடுக்க வேண்டும். விளையாட்டு என்று வரும்போது, ஏழை, எளியவர்கள் என்று பாகுபாடு காட்டக்கூடாது. பல ஏழை வீட்டுப் பிள்ளைகளிடம் திறமை இருக்கிறது. அவர்களைக் கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். இதுபோன்று செய்வதால், அவர்கள் போட்டியில் தங்கள் முழுத்திறமையையும் கொண்டு போட்டியில் வெற்றி பெறுவார்கள்.”
விளையாட்டுத்துறையில் பெண்களுக்கு இடமிருக்கிறதா? அப்படியே இருந்தாலும் அவர்களின் குடும்பத்தைத்தாண்டி வர அனுமதி கிடைக்கிறதா?
“ஆண்களுக்கு மத்தியில் விளையாட்டுத் துறைக்குப் பெண்கள் வருவதற்கு தனி தைரியம் வேண்டும். வீட்டில் பெற்றோர் சம்மதித்தால் கூட, மற்ற உறவினர்கள் அதற்குத் தடையாக இருப்பார்கள். இப்படியான தேவையற்ற தடைகளைப் பெற்றோர்கள் தூக்கி எறிந்துவிட்டு தங்களுடைய குழந்தைகளின் எதிர்காலம் கருதி அவர்களுக்கு வழிவிட வேண்டும். குறிப்பாகப் பெண் பிள்ளைகள் விளையாட பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும்.
விளையாட்டு, பெண்களை உடல்ரீதியாகவும், மன உறுதியையும் உறுதிபடுத்தும். அதனால் பெண்கள் தோல்வி அடைந்தாலும் மனம் தளராமல் அடுத்தடுத்த போட்டிகளில் தங்களது கவனத்தை செலுத்த வேண்டும். இன்றைய காலகட்டத்தில் தேர்வில் தோல்வி அடைந்தாலே பெண்கள் தற்கொலை முடிவுக்குச் சென்று விடுகிறார்கள். அவ்வாறு இல்லாமல் ஒருமுறை தோல்வி அடைந்தாலும் மறுபடியும், மறுபடியும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றியை நோக்கிய தனது பயணத்தை தொடர வேண்டும்.
அதனால் குழந்தைகள் விளையாட்டுத் துறையைத் தேர்ந்தெடுக்கும்போது பெற்றோர்கள் அந்தக் குழந்தைகளுக்கு ஆதரவு கொடுத்தால் அவர்களின் வாழ்க்கைத் தரம் உயரும் என்பதே உண்மை.”