day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

பெண்களை அவமானப்படுத்தும் விளம்பரங்கள்!

பெண்களை அவமானப்படுத்தும் விளம்பரங்கள்!

துணி துவைக்கும்போது பயன்படுத்தும் கண்டிஷனர் தொடர்பான அந்த விளம்பரத்தில் சிநேகாவும் பிரசன்னாவும் நடித்திருக்கிறார்கள்.

பிரசன்னா ஷூட்டிங் கிளம்புகிறார். அப்போது சட்டையை முகர்ந்து பார்க்கிறார். ‘மாலை வரும்வரை இப்படியே ப்ரெஷ்ஷா மணமா இருக்காது, வியர்வையில காணாமல் போய்விடும்,’ என்று சொல்கிறார். சிநேகா உடனே பந்தயம் கட்டுகிறார். ’ப்ரெஷ்ஷா அப்படியே இருக்கும்,’ என்று.

அதேபோல சாயங்காலம்  வரும்போது நறுமணம் அப்படியே இருக்கிறதே என்று சொல்லி ஆச்சர்யப்பட்டு மனைவியிடம் தோற்றுப்போகிறார் பிரசன்னா.

இப்படி முடிகிறது அந்த விளம்பரம்.

வாஷிங்மெஷின் காலத்திலும், மனைவி தான் கணவனது உடைகளின் வாசனைக்குக் கூடப் பொறுப்பு  என்பது போல இந்த விளம்பரம் காட்டுகிறது. சிறந்ததைப் பார்த்து வாங்கி வைத்து அவனை சமூகத்தில் “தலைநிமிர்ந்து” நடக்கவைக்க வேண்டியது அவளது தலையாய கடமை என்பதில் நேற்றைய குஷ்பூக்களும், இன்றைய சிநேகாக்களும், ஜோதிகாக்களும் நாளை வரப்போகும் ஹன்சிகாக்களும் விதிவிலக்கல்ல.

வீட்டுவேலை செய்யவும், பொன், பொருளுக்கு அடிமையானவளாகவும், கணவனை கவனித்துக் கொள்பவளாகவும், சிறந்த தாயாகவும் எப்போதும் பெண் ஒருத்தி இருக்குமாறு உரத்த குரலில் பெண்களுக்கு உபதேசித்துக்கொண்டே இருக்கிறார்கள் விளம்பர நிறுவன எழுத்தாளர்கள்.

உண்மையில் பல வீடுகளில் ஆண்களே நிறைய வீட்டுவேலைகளில் பொறுப்பெடுத்துக்கொள்ளும்போது இதுபோன்ற “கலை”கள்தான் இன்னும் “பண்பாட்டை(?)” இப்படிப்  போற்றிப் புதுப்பித்துக் கொண்டிருக்கின்றன.

இன்னொரு விளம்பரம் டாய்லெட்டை பரிசோதிப்பது தொடர்பானது. நடிகர் அப்பாஸ் திடீரென வீட்டுக்குள்  புகுந்து டாய்லெட்டைப் பரிசோதிக்கும் அந்த விளம்பரத்தில்  எது சிறந்தது எனக்கேட்கும் பெண், இன்னும் பத்துவருடம் கழித்து ஜீன்ஸ்க்கு மாறியிருப்பார், வேறொரு சாயலில்!

ஆனால் காட்சி அதுவாகவே இருக்கும்! காலம் மாறினாலும் கழிவறைகளை பராமரிக்க வேண்டியது பெண்கள்தான்,இல்லையா?

நகைக்கடை விளம்பரங்களில் வழக்கமாக  அப்பா தன்னுடைய பெண்ணை கல்யாணம் பண்ணி அனுப்பும்போது கழுத்து நிறைய நகை போட்டு  புகுந்த வீட்டுக்கு வழியனுப்பும் போது ரொம்பவும் உணர்ச்சிவசப்பட்டு அழுதபடி அனுப்பி வைப்பார்.

திருமணத்திற்குப் பிறகு பெண் அணிந்துகொள்ளும் நகை மட்டும் திருமணமான உடனேயே ஆணுக்குச் சொந்தமாகிவிடுகிறது. ஆனால் நகை என்பது எப்போதும்  பெண் சார்ந்த விஷயம் மட்டுமே எனக் காண்பிப்பது சரியா? இது ஒரு வகையான பொருளாதார அடிமைத்தனம்தானே!

அழகுசாதன பொருட்கள் பயன்படுத்துவதால் நீங்கள் மிகவும் சிவப்பாக அழகாக மாறிவிடுவீர்கள் என்ற மூளைச்சலவை, காலம் காலமாக நம்மை நோக்கி வந்து கொண்டேதான் இருக்கிறது.

ஒரு பெண் தனது சொந்த நிறத்தில் இருந்தால் அது மாபெரும் தவறு என்றும், வெள்ளையாக இருப்பது மட்டுமே ஒரு பெண்ணுக்கான முதல் தகுதி என்றும் பார்க்கப்படுகிறது. இதற்கு  வெண்மை நிறம் கொண்ட பெண்தான் சிறந்த போகப் பொருள் என்ற மனநிலை இருப்பதுதான் காரணம்.

சாதி, மத  ரீதியான  மேட்ரிமோனி விளம்பரங்கள் பெருகிவிட்ட இன்றைய உலகில், கருப்பாக இருப்பதால் நிராகரிக்கப்படும் பெண் பற்றிய விளம்பரங்களும் நமது வரவேற்பறைக்குள் வந்து முரசு கொட்டி அறிவிக்கின்றன.

வேறு ஒரு விளம்பரத்தில், வகுப்பறைக்குள் நுழையும் ஒரு பெண்ணின் முகத்தில் இருக்கும் பருக்களைப் பார்த்து மற்ற மாணவ மாணவியர் கேலி செய்கின்றனர்.

உடனே பக்கத்தில் இருக்கும் ’மிக அழகான’ ஒரு பெண், ’இந்த கிரீம் பூசிக்கொண்டால் நீ இத்தகைய கேலிக்கு ஆளாக மாட்டாய்,’ என்று அறிவுறுத்தி ஒரு க்ரீமை கையில் கொடுக்கிறாள். அவளும் ஒரு வாரம், பத்து நாள் அதைப் பயன்படுத்திய பின் வகுப்பறைக்குள் நுழையும் போது, அத்தனைபேரும் வாவ் என வாயைப் பிளந்து ஆச்சரியத்தில் மூழ்கிப் போகின்றனர்.

எப்படி இது சாத்தியம் என்று கேள்விகளால் துளைக்கின்றனர். இதற்குக் காரணம் இந்த க்ரீம் தான் என்று அந்தப் பெண் சிரித்தபடி சொல்கிறாள். தனக்கு அந்த க்ரீமை அறிமுகப்படுத்திய பெண்ணுக்கு நன்றியும் சொல்லவிடுகிறாள்.

இதில் வருத்தம் என்னவென்றால் எதைப் போட்டாலும் சிவப்பாகித் தொலைக்க முடியாது என்ற உண்மை யாருக்கும் புரிவதில்லை என்பதுதான்.

நாப்கின் விளம்பரங்களில் நீல நிறச் சாயம்  ஊற்றி கறை பட்டிருப்பதாகக் காட்டுகிறார்கள். அதன் பிறகு 8 மணி நேரம் கழிந்தும் அது உள்ளாடையின் அடிவரை செல்லாமல்  உறிஞ்சிக் கொள்கிறதாம்.

உண்மையில் சிவப்பு நிறம் என அப்படியே சொன்னால்தான் என்ன? அப்போது ரத்தக்கறை என்பது அருவருப்பு, அதை காட்டக் கூடாது என்ற எண்ணம்தானே இப்படிச் செய்ய வைக்கிறது?

இன்று பள்ளி செல்லும் சின்னஞ்சிறு மழலைகள் கூட பருவமெய்தி விடும் இந்தக் காலத்தில், வகுப்புக்குள் நுழையும் பெண்ணின் பாவாடையில் இரத்தக்கறை பட்டிருப்பதைப் பார்த்து மற்ற தோழிகள் உன்னுடைய பாவாடையில் கறை  என்று காதில் கிசுகிசுக்கின்றனர்.

அவளும் பயந்து ஓடிப்போய், ’ஐயோ!’ என்று அதை மறைக்கப் பெரும்பாடுபடுகிறாள். பிறகு தோழியின் உதவியால்  இந்தக் குறிப்பிட்ட நாப்கினைப் பயன்படுத்துவதன் மூலம் கறையே படாமல் மகிழ்வதாக முடிகிறது விளம்பரம்.

ஒவ்வொருவரும் வீட்டில்  பெண்களுடன் தான் வாழ்கிறோம். ரத்தக்கறை படிந்த ஆடையுடன் ஒரு பெண் சென்றால்  ஒரு ஆண் ஏன் சங்கடப்படவேண்டும்? ஒரு பெண் ஏன் ஒளியவேண்டும்? இதற்கான அடிப்படையை முதலில் அறிய வேண்டும்!

ஒரு கடைக்குச் சென்று தனக்கு வேண்டிய நாப்கினை ஒரு பெண் வாங்க முற்படும்போதுகூட அதனைக் கருப்பு நிற உறையால் மூடி வாங்குகிறாள்.

இந்தக் குற்ற உணர்ச்சியைத் தந்தது யார்? விளம்பரங்கள்தான்!

கருத்தடைச் சாதனத்தைக்கூடச் சத்தமாகக் கேட்டு வாங்கும் இந்தச் சமூகம், நாப்கினை  மிரட்சியுடன்  சன்னமான குரலுடன் மறைத்து  வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை உற்பத்தி செய்வது சரியா?

விளம்பரங்களில் பொதுவாக பிரஷர் குக்கர், வீட்டு உபயோக பொருட்கள் என இவை எல்லாவற்றையுமே யாராவது ஒரு பெண் கூவிக் கூவி விற்றுக் கொண்டிருக்கிறாள்.

உதாரணமாக ஒரு விளம்பரத்தில் பெண் சமைத்துக்கொண்டு இருக்கிறாள். அப்போது அவளது கணவன் வெளியிலிருந்தபடியே ’ஆஹா!என்ன சமையல்,’ என மூக்கை சமையலறை வரை நீட்டியவாறு வாசனை பிடித்தபடி வருகிறான். வழக்கம்போல  கொண்டை போட்டுக்கொண்டு, மடிப்புக் கலையாத கஞ்சி போட்ட சேலை கட்டிக்கொண்டு  குடும்பத் தலைவியாக சிரித்துக்கொண்டே ’இந்த பிரஷர் குக்கரால் தான் இத்தனை அருமையாக சமையல் செய்தேன்,’ என்று மனைவி சொல்ல ’மனைவியை அதிகமா நேசிக்கிறவங்க இந்தக் கம்பெனிப் பொருளை வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க,’ என்று இருவரும் வசனம் பேசுகிறார்கள்.

நடைமுறையில் எத்தனையோ ஆண்கள் தங்களுடைய அம்மா அப்பாவையும், மனைவியையும், குழந்தைகளையும், சமையலும் செய்து அனுசரணையாகப் பார்த்துக்கொள்கிறார்கள். ஆனால் விளம்பரங்களில் வருகிற ஆண்களுக்குத்தான், பாவம், சாப்பிட மட்டுமே தெரிகிறது.

திரும்பத் திரும்ப வருகின்ற இதுபோன்ற  காட்சிகளின்  தாக்கம் ஆண், பெண் இருவரும் வேலை செய்யும் வீடுகளில் இனி எப்படி ஓங்கி ஒலிக்கப்போகிறது என்பதுதான் காலம் தனது கைகளில் வைத்திருக்கும் சூட்சுமம்!

டைல்ஸ் விளம்பரத்தில்  பள பள என இருக்கும் தரையைக்  காட்டுவதற்குப் பதிலாக பள பளவென்று ஜொலிக்கும் ஒரு பெண்ணை அத்தனை அழகாக அந்த டைல்ஸில் ஆட விடுகின்றார்கள்.

டைல்ஸூக்கும் பெண் ஆடுவதற்கும் என்ன சம்பந்தம்?

பெண் என்றாலே ஒன்று போகத்திற்காகக் காட்டப்படும் பதுமை. அல்லது வேலைக்காகக் காட்டப்படும் வேலையாள். மாறாக அறிவானவளாக, சிந்திப்பவளாக புதுமை செய்பவளாக பெண்ணைக் காண்பிக்க முடியாதா?

கிருமியில்லா வீடே நோயற்ற வாழ்வு தரும் என இங்கேயும் பெண்ணை நிறுத்தியே  மூளைச்சலவை செய்யும் அத்தனை விளம்பரங்களையும் நம்பி அவற்றைப் பயன்படுத்தி வருகிறோம்!

ஆனால்  “சுத்தமாக, சுத்தமாக” என்று வாங்கிய பொருட்களால் சுத்தமாகப் துடைக்கப்பட்டது நமது பணமும் ஆரோக்கியமும்தான்!

விளம்பரங்களை உருவாக்குபவர்களின் எண்ண ஓட்டம் மாற வேண்டும். அதற்கு தகுந்த கல்வி முறை வகுக்கப்பட வேண்டும். பிற்போக்குத்தனங்களைப் பெட்டியிலேற்றி அனுப்பிவிட்டுப் புதிய சிந்தனைகளுடன் நல்ல விளம்பரங்களை நேர்மறையாக உருவாக்கும் நாளைய இளைஞர்களுக்காகக் காத்திருப்போம்!

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!