மே 1 அன்று பொது விடுமுறை என்பது உண்டு, உறங்கிக் கழிக்கவல்ல. உலக உழைப்பாளர் களைக்கொண்டாடும் விதமாகத்தான் மே தினம் அனுசரிக்கப்படுகிறது. அன்று பெரும்பாலான இடங்களில், ‘உழைப்பாளி இல்லாத நாடுதான் எங்கும் இல்லேயே’ என்ற பாடல் ஒலித்துக்கொண்டிருக்க, ‘அடப் போங்கப்பா’ என்றபடி அடுப்பங்கரையில் ஓர் உழைப்பாளி மட்டும் அன்றும் விடுமுறையின்றி உழைத்துக்கொண்டேதான் இருக்கிறார்.
1880களில் 12 மணி முதல் 18 மணி நேரம் வரை தொழிலாளர்கள் உழைத்தார்கள். இந்த வேலை நேரத்தைக் குறைக்க சிகாகோவில் நடந்த போராட்டமே இன்று நாம் கொண்டாடிக்கொண்டிருக்கும் மே தினத்திற்கான விதை. பல்வேறு போராட்டங்கள் மற்றும் உயிரிழப்பிற்குப் பின்புதான் எட்டு மணி நேரமாக மாறியது. இருப்பினும், இன்றளவிலும் பெண்கள் தூங்கும் நேரம் தவிர்த்து மற்ற நேரமெல்லாம் உழைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஒரு காலத்தில் அனைத்து நிலைகளிலும் ஒடுக்கப்பட்டிருந்த பெண்களுக்கு இன்று கல்வி உரிமை, சொத்துரிமை, ஓட்டுரிமை, பணிகளில் வாய்ப்பு என ஆணுக்கு நிகராக ஓரளவுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டபோதும், இவை அனைத்தையும் ஒரு கையில் பெற்றுக்கொண்டு மறுகையில் அவர்கள் மைதா பிசைய வேண்டியதாகத்தான் இருக்கிறது. வீட்டுக்கு வெளியில் பெண் உழைத்தாலும் உழைக்கா விட்டாலும் வீட்டுக்குள் உழைக்க வேண்டியது கட்டாயம் . ஒரு பெண் ராணுவத்தில் பணியாற்றினாலும் வீட்டிற்கு வந்தவுடன் ஓய்வு என்பது இல்லை. பிள்ளைகளுக்கும் வீட்டுப் பெரியவர்களுக்கும் சமைத்து வைத்துத்தான் ஆக வேண்டும். ஒரு பெண் எவ்வளவு பெரிய காவல் அதிகாரியாக இருந்தாலும் வீட்டில் உள்ள சமையலறையை நிர்வகிக்க அவளைத் தவிர ஆள் இல்லை. எவ்வளவு பெரிய தொழில் அதிபராக உயர்ந்தாலும் குழந்தைப் பராமரிப்பு என்பது பெண்ணின்மீது மட்டுமே திணிக்கப்படுகிறது.இவை அனைத்திற்கும், ‘நம் வீட்டை நாம்தானே பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்பதுதான் பதிலாக இருக்கும். இதனைக் கூறுபவர்களும் அதே வீட்டில்தான் இருக்கிறார்கள் என்பதனை மறந்து விடுகின்றனர் போலும். வீட்டிற்காக உழைப்பதில் பெண்களுக்கு ஒன்றும் சலிப்பில்லை. ஆனால், அதற்கான குறைந்தபட்ச அங்கீகாரம்கூடக் கிடைக்காத போதுதான் அது புளித்துப்போய் விடுகிறது. ஒரு அலுவலகத்தில் பணியாற்றும்போது அவளுக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றால் வேறு அலுவலகத்துக்கு மாறிவிடுகிறாள். ஆனால், வீட்டில் அவள் உழைப்பிற்கு மரியாதை கிடைக்காதபோது அவ்வாறு செய்ய முடியாதே. அதிகாலையிலேயே எழுந்து அறுசுவை உணவு செய்து பரிமாறினால் பல ஆண்களுக்கு வறுத்து வைக்காத வடகத்திற்கு வருத்தம் தெரிவிக்கின்றனரே ஒழிய வாடிய அவள் முகம் கண்டு அவள் செய்ததற்கு வாழ்த்துக் கூற வாய் வருவதில்லை.
12 மணி நேரம் தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சியதற்காக சிகாகோவில் நடந்த போராட்டம்போல் ஒரே ஒரு நாள் அனைத்து வீடுகளிலும் பெண்கள் தங்கள் உழைப்பு உறிஞ்சப்படுகிறது என வேலைநிறுத்தப் போராட்டம் செய்தால் என்ன நடக்கும்? அடுப்படி இருளடைந்து கிடக்கும். அழுக்குத் துணிகள் எல்லாம் கோபுரம் போல் குவிந்து கிடக்கும். அலுவலகத்தில் மிகச் சிறந்த ஊழியராக விளங்கும் பல ஆண்களுக்குப் பால்கூடக் காய்ச்சத் தெரியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை. சரி, வீட்டில்தான் பெண்ணின் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை, நாட்டிலாவது அவள் உழைப்பு மதிக்கப்படுகிறதா என்றால் உழைப்பாளர் சிலையில்கூட அவளுக்கு இடம்தராமல் இடித்துக்கொண்டு நிற்கிறது ஆண்கள் கூட்டம்.
என்னதான் எல்லாத்துறைகளிலும் ஆண் களுக்கு நிகராகப் பெண்களும் அமர்ந்தாலும் இன்றளவில் பெண்களின் உழைப்பு பல இடங்களில் உதாசீனம் செய்யப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. சில வேலைகளை ஆண்கள்தான் செய்ய வேண்டும் என்றும் சில வேலைகளைப் பெண்கள்தான் செய்ய வேண்டும் என்றும் இந்தச் சமுதாயம் எழுதி வைத்துள்ளது. அவை கண்டிப்பாகப் பெரிய துறைகளாகத்தான் இருக்க வேண்டும் என்று இல்லை. மண்ணைக் கிளறும் வேளாண்மை முதல் விண்ணைத் தொடும் விண்வெளித் துறைவரை பெண்கள் இருந்தாலும் இடையில் சில இடங்களில் பெண்கள் பணிபுரிய தகுதி இல்லை என எழுதிவைக்கப்பட்டிருக்கிறது. லைன் மேன் என்று சொல்லப்படும் மின்கம்பம் ஏறும் வேலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாகத்தான் பெண்கள் அனுமதிக்கப்படுகின்றனர். பெண்கள் எவ்வளவு மதிப்பெண் பெற்று கட்டிடப் பொறியாளர் படிப்பு படித்தாலும் அவள் பெண் என்கிற ஒரே காரணத்தினால் அவளிடம் வீடு கட்டும் பொறுப்பை வழங்கப் பலரும் தயங்குகின்றனர்.
அதேபோல் சில வேலைகளை ஆண்கள் செய்யத் தயங்குகின்றனர். கேட்டால் அவை எல்லாம் பெண்களில் வேலையாம். என்னதான் பெரிய ஹோட்டல்களில் சமைப்பது ஆணாக இருந்தாலும் சமைத்த பாத்திரங்களைக் கழுவுவது பெரும்பாலும் பெண்களாகத்தான் இருப்பார்கள். ஆனால், அதே சமையலை வீட்டில் செய்யச் சொன்னால் அதெல்லாம் பெண்கள் வேலை என்பார்கள். சுகாதாரப் பணியாளர் பணியிலும் இந்தப் பாகுபாடு தொடர்கிறது. குப்பை வாருவது ஆண்களாகவும் பொது இடங்களில் பெருக்குவது பெரும்பாலும் பெண்களாகவும்தான் உள்ளனர். இவ்வளவு ஏன், மெக்கானிக் வேலையில் இருந்து வெட்டியான் வேலை வரை பெண்கள் செய்யத் தயாராக இருந்தாலும் இந்தச் சமூகம் அவர்களை வர விடுவதில்லை.
கட்டிட வேலைகளில் செங்கல், மணல் அள்ளிப்போடும் பெண்கள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவர்கள் கொத்தனார் ஆவதில்லை. கொத்தனாராக இருக்கும் ஆண்களும் அதற்கெனத் தனியாகப் படித்துவிட்டு வருவதில்லை. எல்லாம் அனுபவம்தான் என்றபோதும் , அனுபவமும் ஆண் பெண் வேற்றுமை பார்க்கிறதா என்ன? இதுதான் இன்றைய பெண் உழைப்பாளிகளின் நிலை. அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட சில துறைகளில் மட்டுமே பெண்கள் பணியாற்ற வேண்டும். அதிலும், அவர்களுக்குச் சரியான ஊதியமோ உரிய அங்கீகாரமோ கிடைப்பதில்லை. மகளிர் தினத்தன்றும் அன்னையர் தினத்தன்றும் மட்டும் அவளைச் சிங்கப் பெண்ணாக மலைமீது தூக்கி வைத்துவிட்டு மீதம் உள்ள 363 நாட்களிலும் அவளைக் குயில் என்று கூட்டிலும், பூ வென்று பூஜை அறையிலும் அடைத்து வைத்துவிடுகின்றனர்.
இதுவல்ல உண்மையான பாலினச் சமத்துவம். ஓர் ஆண் வெளிவேலைக்குச் சென்றால் மட்டுமே அவன் உழைப்பாளி. ஆனால், பெண்ணோ வீட்டில் ஒரு சமையலராக, சலவைத்தொழிலாளியாக என்றைக்கும் உழைத்துக்கொண்டுதான் இருக்கிறாள். கூலித் தொழிலாளியாக, கொத்தடிமைகளாக, செங்கல் சுடுபவளாக, பள்ளி வாசலில் மாங்காய் விற்பவளாக… இப்படிப் பல்வேறு நிலைகளிலும் வீட்டை உயர்த்திட, நாட்டை வளர்த்திட நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்.