தலைப்பிலிருந்தே தொடங்கிவிடலாம். காரணம், 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றியைத் தீர்மானிக்கும் மந்திரச் சக்தியாகப் பெண்களின் ஓட்டுகளே அமையவிருக்கின்றன. தமிழகத்தில் ஆண் வாக்காளர்களைவிடப் பெண் வாக்காளர்கள் ஒன்பது லட்சத்துக்கும் அதிகமானோர் இருக்கின்றனர். அதனால், ஒவ்வோர் பெண்ணின் ஓட்டும் வெற்றிக்கான அச்சாணி.
ஆண்களைவிடப் பெண்களே அதிக ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுகிறார்கள் என்று வரலாறு சொல்கிறது. 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலையொட்டி இந்தியாவின் சிறந்த தேர்தலியலாளர்கள் பிரணாய் ராய், தோரப் ஆர்.சோபரிவாலா ஆகிய இருவரும் இணைந்து எழுதிய ‘தி வெர்டிக்ட்’ புத்தகம் தேர்தல் குறித்த பல்வேறு வரலாற்றுத் தகவல்களைப் புள்ளிவிவரத்துடன் எடுத்துரைக்கிறது. பெண்களின் வாக்கு சதவீதம் குறித்து எழுதப்பட்டிருப்பது அவற்றுள் முக்கியமானது. ஆண், பெண் இருவருக்குமே வாக்குரிமை இருந்தபோதும் 1962ஆம் ஆண்டு 46.7 சதவீதப் பெண்கள் மட்டுமே வாக்களித்திருந்தனர். ஆண்களோ அப்போதே 62.1 சதவீத அளவுக்கு வாக்களித்திருந்தனர்.
காலங்களும் காட்சிகளும் மாற, பெண்களிடம் அரசியல் விழிப்புணர்வு அதிகரித்தது. அதை 2014ஆம் ஆண்டு தேர்தலில் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. அந்தத் தேர்தலில் பெண்களின் வாக்கு சதவீதம் வியக்கவைக்கும் அளவுக்கு உயர்ந்திருந்தது. ஆண்கள் 67 சதவீதம் வாக்களித்திருக்க, பெண்களோ அவர்களைத் தொட்டுவிடும் அளவுக்கு 65.5 சதவீத அளவுக்கு வாக்களித்திருந்தனர். இந்த இரண்டு தேர்தல்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஆண்கள் வெறும் 4.9 சதவீத அளவுக்கு மட்டுமே உயர்ந்திருக்க, பெண்களின் வாக்கு சதவீதமோ 18.8 சதவீதத்துக்கு உயர்ந்திருக்கிறது.
பெண்கள் இப்படி ஆர்வத்துடன் வாக்களித்தாலும் அரசியலில் அவர்களுக்கான இடம் புறக்கணிக்கப்படுவது வேதனையானது. அரசியல் என்பது ஆண்களுக்கான துறை என்றே இன்றளவும் நம்பப்படுகிறது. அதனால்தான் நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் 33 சதவீத இட ஒதுக்கீடு கேட்டுப் பெண்கள் 24 ஆண்டுகளாகப் போராடிவருகின்றனர். அனைத்துக் கட்சிகளும் மகளிருக்கு என்று தனி அணி அமைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனவே தவிர, கட்சியின் செயற்குழுவில் பெண்களுக்கு இடமளிக்கத் தயங்குகின்றன. தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள் முதல் உதிரிக் கட்சிகள்வரை இதுதான் நிலை. விதிவிலக்காகச் சில கட்சிகள் பெண்களுக்குத் தங்கள் செயற்குழுவில் பொறுப்பளித்தபோதும் ஒன்றிரண்டு பெண்களுக்கு மேல் அங்கே பார்க்க முடியாது. நாட்டின் மக்கள் தொகையில் ஆணுக்கு நிகராகப் பெண்கள் இருக்கிறபோது அவர்களுக்கான திட்டங்களை ஆண்கள் மட்டுமே வகுப்பது எந்தவிதத்தில் நியாயம்? பெண்களுக்கான தேவைகள் குறித்து நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் பேச போதுமான அளவில் பெண்கள் இருப்பதுதானே நாம் ஜனநாயக நாட்டில் வாழ்வதற்கான சான்றாக இருக்கும்?
பெண்களுக்குக் கட்சிப் பொறுப்பிலும் தேர்தலிலும் வாய்ப்பு தராத கட்சிகள், பெண்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பார்க்கின்றன. 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி பல்வேறு கட்சிகள் வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கையே அதற்குச் சாட்சி. இல்லத்தரசிகளுக்கு மாத ஊதியம், இலவச வாஷிங் மெஷின், இலவச பேருந்துப் பயணம், மகப்பேறு உதவித்தொகை அதிகரிப்பு, பெண் தொழில்முனைவோருக்கு வங்கிக் கடன், அரசுப் பணிகளில் 40 சதவீத இட ஒதுக்கீடு என்று கண்ணைக் கவர்கிற திட்டங்களுக்குக் குறைவில்லை. ஆனால், நடந்துமுடிந்த தேர்தலிலும் தேன் தடவப்பட்ட இப்படியான வாக்குறுதிகள் இடம்பெறவே செய்தன. வெற்றிபெற்றவர்கள் அவற்றையெல்லாம் நிறைவேற்றினார்களா என்று பார்த்தாலே வாக்குறுதிகளின் நோக்கம் புரிந்துவிடும்.
சமூகமும், கட்சிகளும் பெண்களை அரசியல்மயப்படுத்த விரும்புவதில்லை. உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு இருப்பதால் வேறு வழியில்லாமல் பெண்களை வேட்பாளர்களாக நிறுத்துகிறார்கள். அவர்கள் வெற்றிபெற்றுவிட்டால் பெயரளவுக்கு மட்டுமே பதவி வகிக்கிறார்கள். கூட்டங்களில் பங்கேற்பது தொடங்கி மற்ற அனைத்திலும் அந்தப் பெண்ணுக்குப் பதிலாக அவரது வீட்டு ஆண்களே பங்கேற்பார்கள். எதற்காகவும் பெண்கள் தங்கள் ஜனநாயக உரிமையை விட்டுத்தரக் கூடாது. கட்சி அரசியலில் பங்கேற்பது மட்டும் அரசியல் செயல்பாடல்ல; சரியானவருக்கு ஓட்டுப் போடுவதன் மூலம் நம் கடமையை நிறைவேற்றுவதும் அரசியல் செயல்பாடுதான்.
பெண்கள் எதற்காகவும் யாருக்காகவும் தங்கள் வாக்குரிமையை அடகுவைக்கக் கூடாது. அப்படிச் செய்வது, நாமே நமக்கு அடிமை சாசனம் எழுதிக்கொள்வதைப் போன்றது. உங்கள் தொகுதியில் நிற்கிற வேட்பாளர்களில் யார் தேர்ந்தெடுக்கப்பட்டால் மக்களுக்கு நல்லது நடக்கும் என்பதைச் சிந்தித்து அதற்கேற்ப வாக்களிக்க வேண்டும். எந்தச் சார்பும் இருக்கக் கூடாது. வீட்டில் உள்ளவர்கள் சொல்கிறார்கள் என்று அவர்கள் கைகாட்டுகிற நபருக்கு வாக்களிப்பது தவறான செயல். உங்கள் குடும்பத்தினர் எந்தக் கட்சியைச் சார்ந்திருக்கிறார்களோ அந்தக் கட்சியின் சார்பில் போட்டியிடுகிறவருக்குக் கண்ணை மூடிக்கொண்டு வாக்களிப்பதும் நல்லதல்ல. சிலர் சாதி அடிப்படையிலும் வாக்களிப்பார்கள். இப்படி செய்வது கொள்ளிக்கட்டையால் தலையைச் சொறிந்துகொள்வது போல அமைந்துவிடும். அதனால், அனைத்துவிதமான விருப்பு வெறுப்புகளையும் கட்சிச் சார்பையும் தாண்டி நேர்மையுடன் வாக்களிக்க வேண்டும்.
சரி, யார் சரியான நபர் என்று எப்படித் தேர்ந்தெடுப்பது? வேட்பாளர்களின் செயல்பாடே அதைச் சொல்லிவிடும். வேட்பாளர் எந்தக் கட்சி சார்பாகப் போட்டியிடுகிறாரோ அந்தக் கட்சியின் தலைமை முதல் தொண்டர்வரை அனைவரின் நடவடிக்கையும் கண்ணியமாக இருக்கிறதா என்பதுதான் முதல் தகுதி. அவர்கள் பெண்களை எப்படி நடத்துகிறார்கள், பெண்களின் முன்னேற்றத்துக்காக இதுவரை என்ன செய்திருக்கிறார்கள், என்ன செய்யப்போவதாக வாக்களித்திருக்கிறார்கள் என்று பார்த்தாலே அவர்களின் சமூகப் பொறுப்பு விளங்கிவிடும். வெறும் இலவசங்களை மட்டும் அள்ளித் தெளிக்காமல் பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு, சுயதொழில் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்துத் திட்டங்களைச் செயல்படுத்துகிறவர்களுக்கு வாய்ப்பளிக்கலாம்.
தண்ணீர் பிரச்சினை தொடங்கி டாஸ்மாக், பால் விலையேற்றம், பஸ் கட்டண உயர்வு, காஸ் சிலிண்டர் விலையேற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் பெண்களை நேரடியாகப் பாதிக்கின்றன. இப்படியான பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வை முன்வைக்கும் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கலாம். பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தருகிறவர்களுக்கு முன்னுரிமை அளிக்கலாம். காரணம், சில ஆண்டுகளுக்கு முன்பு தாம்சன் ராய்ட்டர்ஸ் நடத்திய ஆய்வில் உலக அளவில் பெண்கள் வாழத் தகுதியற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்திருந்தது. பொதுவெளி என்று மட்டுமல்ல; குடும்பங்களில்கூடப் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை பல இடங்களில் இருக்கிறது. இதற்கெல்லாம் தீர்வு வழங்கும் தீர்க்கமான திட்டங்களோடு பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்கிறவர்களை நாம் தேர்ந்தெடுக்கலாம்.
நாம் தேர்ந்தெடுக்கிற நபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது மட்டும் வீடு வீடாக வந்து வாக்கு சேகரித்துவிட்டு, வெற்றி பெற்றதும் தொகுதியைத் திரும்பிக்கூடப் பார்க்காதவராக இருந்தால் நம் ஓட்டு, விழலுக்கு இறைத்த நீராகத்தான் இருக்கும். அவர் ஏற்கனவே அரசியலில் இருந்தால் அவர் தொடர்ந்து மக்கள் பணியில் ஈடுபட்டிருக்கிறாரா என்று பார்க்க வேண்டும். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே மக்களைச் சந்திக்கிறவர்களுக்கு நம் புறக்கணிப்பைத்தான் பரிசாக அளிக்க வேண்டும். திட்டங்களை அறிவித்துவிட்டு அவற்றில் பெரும்பங்கைத் தங்கள் வங்கிக் கணக்குக்கு மாற்றிக்கொள்ளும் ஊழல்வாதிகளுக்கு எக்காரணம் கொண்டும் வாக்களிக்கக் கூடாது.
சிலர், தேர்தலில் போட்டியிடுகிற யார் மீதும் நம்பிக்கையில்லை என்றோ தேர்தலைப் புறக்கணிப்பதாகச் சொல்லிக்கொண்டோ வாக்களிக்காமல் இருப்பது, தவறானவர்கள் வெற்றிபெற வழிவகுத்துவிடும். அதனால், உங்கள் தொகுதியில் போட்டியிடுகிறவர்களில் யார்மீது குறைந்தபட்ச நம்பிக்கையும், வெற்றிபெற்றால் மக்கள் வாழ்வில் மலர்ச்சி பிறக்கும் என்கிற உறுதியும் இருக்கிறதோ அவருக்கு வாக்களிக்கலாம். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நம் சார்பாக நம் குரலாகச் சட்டமன்றத்தில் ஒலிக்க இருக்கிறாவர்களைத் தேர்ந்தெடுப்பது நம் உரிமை மட்டுமல்ல; கடமையும்தான்!