சென்னை மணலி பகுதியைச் சேர்ந்த வினோத் குமார் என்பவர் தன்னுடைய பகுதியில் உள்ள பூங்கா குறித்த அடிப்படை தகவல்களை கேட்டு மாநில தகவல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளார். அதன்படி, மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மாநில தகவல் ஆணையர் முத்துராஜ் முன்னதாக ”பகல் நேரத்தில் பூங்காக்களை மூடி வைப்பது சரியானது இல்லை” என்று தெரிவித்தார். மேலும் ”சென்னை மாநகராட்சியில் 535 பூங்காக்கள் உள்ள நிலையில் பெரும்பாலான பூங்காக்கள் காலை 11 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை பூட்டி இருப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை கொரோனா காலத்தில் பின்பற்றப்பட்டு இருக்கலாம். தமிழ்நாடு அரசு கொரோனா விதிமுறைகளில் தளர்வு அளித்த பிறகு இது தொடர்வதற்கு வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற முடிவுகளை பூங்காவில் பணியாற்றும் பணியாளர்கள் எடுக்க முடியாது. மன்றத்தின் அனுமதியோடு அதிகாரிகளின் உத்தரவின்படிதான் எடுக்க முடியும். மக்கள் பணி நிமித்தமாக இருசக்கர வாகனங்கள் மற்றும் நடந்து செல்லும்போது கோடை வெயிலின் தாக்கத்தால் ஓய்வு எடுத்துக்கொள்ள இடம் இல்லாமல் சிரமப்படுகின்ற நிலையில் பொது மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட பூங்காக்கள் மூடி இருப்பது சரியானது அல்ல. எனவே பூங்காக்கள் எப்போது திறக்கப்பட வேண்டும், எப்போது மூட வேண்டும் என்ற மாநகராட்சியின் உத்தரவை சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையாக பூங்கா துறை கண்காணிப்பு பொறியாளர் அனுப்பிவைக்க வேண்டும். இதன் நகலை ஆணையத்திற்கும், மனுதாரருக்கு அனுப்பி வைக்க வேண்டும்” என்றும் தனது உத்தரவில் கூறப்பட்டுள்ளார்.