திருப்பத்தூர் மாவட்டத்தில் இந்த மாதம் 13,14,15 ஆகிய 3 தேதிகளில் “ஆம்பூர் பிரியாணி திருவிழா” நடத்தப்படவிருப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில், இந்த விழாவுக்கான தயாரிப்புக்கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர், பிரியாணி திருவிழாவில் ஆடு மற்றும் கோழிக்கறி பிரியாணி மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து மாட்டுக்கறி பிரியாணி இந்த திருவிழாவில் இடம்பெறாது என்று கூறி இருந்தார். இதனைத்தொடர்ந்து பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணிக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் கண்டனங்களை பதிவு செய்துவருகின்றன. அத்துடன் ஆதிமனிதன் முதல் தற்கால மனித சமூகம் வரை விரும்பி உண்ணும் ஓர் உணவுக்கு அரசு நடத்தும் திருவிழாவிலே தடை விதிக்கப்பட்டு இருப்பது வருத்தத்துக்கு உரியதாக உணவு பிரியர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.