15ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 66ஆவது லீக் ஆட்டத்தில், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதியது. நேற்று இரவு 7.30 மணிக்கு நவி மும்பையில் உள்ள டாக்டர் டி.ஒய்.பட்டீஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்து போட்டியைத் தொடங்கியது. 20 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் கூட இழக்காமல் லக்னோ அணி 210 ரன்கள் எடுத்தது. 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்து சுருண்டது. 2 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றிப்பெற்றது. இதனால், பிளே-ஆப் சுற்றுக்கு 2ஆவது அணியாக லக்னோ முன்னேறியது. இதுவரை இந்தத்தொடரில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள லக்னோ அணி 9 போட்டிகளில் வெற்றியும் 5 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்து புள்ளி பட்டியலில் 2ஆவது இடத்துக்கு முன்னேறி உள்ளது. அதேசமயம், கொல்கத்தா அணி விளையாடிய 14 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றியும் 8 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்து புள்ளி பட்டியலில் 6ஆவது இடத்தில் நீடிக்கிறது.