15ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 69ஆவது லீக் ஆட்டத்தில், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மோத உள்ளது. இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்தப்போட்டியில் மும்பை அணியும் டெல்லி அணியும் நேருக்குநேர் 32ஆவது முறையாக மோதிக்கொள்ள இருக்கிறது. இதில் முன்னதாக 16 முறை மும்பை அணியும் 15 முறை டெல்லி அணியும் வெற்றிப்பெற்றுள்ளது. இந்த தரவுகளை வைத்து பார்க்கும் போது இரு அணிகளும் கிட்டத்தட்ட சமமான வெற்றியைப்பெற்று இருந்தாலும், இந்தத்தொடரின் தரவுகளை வைத்துப்பார்க்கும் போது மும்பை அணி மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. இதனால், இந்த ஆட்டத்தில் டெல்லி அணியே வெற்றிப்பெற அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. மேலும் இந்த ஆட்டத்தில் வெற்றிப்பெற்றால் மட்டுமே டெல்லி அணி பிளே-ஆப் சுற்றுக்கு செல்ல முடியும் என்பதால் டெல்லி அணி நிச்சயம் தன் திறமையை வெளிப்படுத்தும் என ஐ.பி.எல்., ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஏற்கனவே மும்பை அணி இந்தத்தொடரில் நீடிப்பதற்கான வாய்ப்பை இழந்து இருந்தாலும், ஆறுதல் வெற்றியுடன் வெளியேற தனது பங்குக்கு ஆட்டதை சிறப்பாக ஆடி வெற்றியை தனதாக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதுவரை இந்தத்தொடரில், 13 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி 3 போட்டிகளில் வெற்றியும் 10 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடமான பத்தாவது இடத்தில் உள்ளது. அதேபோல், டெல்லி அணி விளையாடிய 13 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றியும் 6 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்து புள்ளி பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது.