கரூர் மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள கடைகள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்டவற்றில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது, உழவர் சந்தை பகுதியில் செயல்பட்டுவரும் பிரபல பிரியாணி கடை ஒன்று சட்டவிரோதமாக சாலையை 10 அடி வரை ஆக்கிரமிப்பு செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, சாலை ஆக்கிரமிப்பு, சுகாதாரம் இன்றி உணவு தயாரித்தல், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி வருதல், உள்ளிட்ட காரணங்களுக்காக மாநகராட்சி அதிகாரிகளால் பிரியாணி கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. மேலும், மாநகராட்சி ஆய்வு குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களிடமும் பிரியாணி கடை ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த கடைகளை கண்டறிந்து அந்த கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர். பிளாஸ்டிக் மொத்த விற்பனை கடை, மளிகை கடை, உணவகம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கடைகளுக்கு தலா ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டது