பேய் என்று சொன்னாலே பயந்து நடுங்குகிறவர்கள் அதிகம். பலரும் சுடுகாடு இருக்கும் பக்கம் தலைவைத்துக் கூடப்படுக்க மாட்டார்கள். ஆனால், சேலம் அரிசிப்பாளையத்தில் டி.வி.எஸ். எதிரே உள்ள சுடுகாட்டில் சடலங்களை சர்வ சாதாரணமாக அடக்கம் செய்து வருகிறார் சீதா. சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த இவர், பாட்டியின் அரவணைப்பில்தான் வளந்தாராம். பாட்டியும் சுடுகாட்டில்தான் வேலை செய்திருக்கிறார். சிறு வயதில் இருந்தே அவருடன் சேர்ந்து சடலங்களை அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டுவந்த சீதா, 20 ஆண்டுகளாக இந்தச் சேவையை தொடர்ந்துவருகிறார்.
சீதா எட்டாம் வகுப்புவரை படித்துள்ளார். தன்னைப் படிக்கவைக்க பாட்டி ஆர்வம் காட்டியபோதும் தனக்குக் கல்விமீது நாட்டம் இல்லாததால் பாட்டியுடன் இதே பணியில் ஈடுபட்டதாகச் சொல்கிறார். இதுவரை ஆயிரக்கணக்கான சடலங்களை நல்லடக்கம் செய்துள்ளார். இந்தப் பணிக்கு நேரம் காலம் கிடையாது. எந்த நேரத்தில் அழைத்தாலும் முகம் கோணாமல் வந்து காரியத்தை முடித்துக் கொடுக்கிறார். இந்தத் தொழிலைச் செய்வதற்கு பயமோ தயக்கமோ இல்லையா என்று கேட்டால், “இந்த வேலை எனக்குச் சிறு வயதில் இருந்தே பழக்கப்பட்டுவிட்டது. இதுவே எனக்கு ஆத்ம திருப்தியைத் தருகிறது” என்கிறார்.
பொதுவாகப் பெண்கள் சுடு காட்டுக்கு வர அனுமதிக்கப்படுவதில்லை. ஆண்களிலும் பலர் இங்கே வர அஞ்சுவார்கள். ஆனால், தான் வேலைசெய்யும் சுடுகாட்டைத் தன் வீடாகப் பார்ப்பதாகச் சொல்கிறார் சீதா. “சுடுகாட்டில் பணிபுரிபவள் என்பதால் எத்தனையோ பேர் என்னை ஒதுக்கியபோதும் எனக்குக் கவலை இல்லை. இதுதான் எனக்குப் பிடித்த தொழில்” என்று பெருமிதத்துடன் சொல்கிறார். “திருடாமல், பொய் சொல்லாமல், அடுத்தவரை ஏமாற்றாமல் செய்யும் எந்தத் தொழிலும் தவறான தொழில் அல்ல. அந்த எண்ணம் மட்டும் மனதில் இருந்தால் தைரியத்துடனும் தன்னம்பிக்கையுடனும் எந்தத் தொழிலிலும் ஈடுபடலாம்” என்று கம்பீரமாகச் சொல்கிறார் சீதா.
இவர் இன்றுவரை தனக்கென்று எந்த எதிர்கால திட்டமோ திருமண ஆசையோ கொண்டிருக்கவில்லை. இங்கு வரும் அனாதை சடலங்களை அடக்கம் செய்வதே தனக்கு மன நிறைவு தருகிறது என்கிறார். இந்த வேலையில் கிடைக்கும் சொற்ப பணத்தில்தான் சீதாவின் வாழ்க்கை ஓடுகிறது. “எனக்கென்று தனியே எந்த உதவியும் தேவை இல்லை. ஆனால், சுடுகாட்டில் பணிபுரிவோரின் உழைப்பைக் கவனத்தில்கொண்டு அரசு ஊதியம் வழங்க வேண்டும்” என்று தன்போன்றவர்களுக்காகவும் சேர்த்துப் பேசுகிறார் சீதா