மேற்கு வங்கம் அசன்சோல் தொகுதியில் 2014 மற்றும் 2019 ஆகிய இரண்டு மக்களவைத் தேர்தலிலும் பாஜக சார்பில் பாபுல் சுப்ரியோ வெற்றி பெற்றார். இவர், தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அக்கட்சியிலிருந்து விலகி மீண்டும் திரிணமூல் காங்கிரஸில் இணைந்தார். இதையடுத்து அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில், பிஜேபியில் நல்ல செல்வாக்குடன் வலம்வந்த முன்னாள் மத்திய அமைச்சரான சத்ருகன் சின்கா, மோடி பிரதமராகப் பதவியேற்றபின் அந்தக் கட்சியிலிருந்து கொஞ்சம் விலகியே இருந்தார். தவிர பிரதமரையும் கட்சி தலைமையையும் தொடர்ந்து விமர்சித்தார். இதைப் பொறுத்துக்கொள்ளாத பி.ஜே.பி. அவரைக் கழற்றிவிட்டு, அவருடைய பாட்னா தொகுதியில் 2019ம் ஆண்டு தேர்தலில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை வேட்பாளராக நிறுத்தி வெற்றிபெற வைத்தது. இதனால் வெறுப்புற்ற சின்கா, காங்கிரஸில் இணைந்தார். அங்கு பெரிய அளவில் பதவி எதுவும் கிடைக்காத சூழலில் அண்மையில் அவர் திரிணாமூல் காங்கிரஸில் இணைந்தார். அவருக்கு துணைத் தலைவர் பதவியும் வழங்கப்பட்டது. இந்த நிலையில், அசன்சோல் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் களமிறங்கிய சத்ருகன் சின்கா 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் 6,52,586 வாக்குகள் பெற்றார். பாஜகவின் அக்னிமித்ரா 3,52,043 வாக்குகள் பெற்றார். இதையடுத்து, தொடர்ந்து இரண்டு முறை வென்ற தொகுதியை பாஜக தற்போது பறிகொடுத்துள்ளது. அதுபோல், மேற்குவங்க பாலிகஞ்ச் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலிலும் திரிணாமூல் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றுள்ளது.