வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதிக்குட்பட்ட ஜமால்புரம் கிராமத்தில் பால் குளிரூட்டும் நிலையத்தை பால் வளத்துறை அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார். இந்த விழாவில், பால் உற்பத்தி மற்றும் பால் மேம்பாட்டுத்துறை ஆணையர் பிரகாஷ், மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மற்றும் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் மற்றும் மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் பால் வளத்துறை அமைச்சர் நாசர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டுமென தமிழகம் முழுவதும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். முதலமைச்சர் இதுகுறித்து நல்ல முடிவு கூறுவார். தமிழகத்தில் உற்பத்தியாகும் பால் வெளிமாநிலங்களுக்கு செல்கிறது. ஏறக்குறைய பால் உற்பத்தி 36 லட்சமாக உயர்ந்துள்ளது. ஆகையால்தான் பால் வெளிமாநிலங்களுக்கு கொண்டுசெல்லப்படுகிறது. தரமில்லா தனியார் பால் நிறுவனம் மீது மத்திய அரசு தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்னதாக பனி காலம் என்பதால் பால் உற்பத்தி குறைந்து ஒருசில ஆவின் பொருட்கள் தயாரிப்பு குறைந்தது உண்மைதான். கொரோனா காலத்தில் உற்பத்தி குறைவு மற்றும் குறைந்த விலையில் விவசாயிகளிடமிருந்து பால் பெறப்பட்டதால் விவசாயிகளும் பாதிக்கப்பட்டனர். ஆனால், தற்போது பால் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால், தமிழகத்தின் பல இடங்களில் பால் பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. அதேபோல, வேலூரிலும் பால் பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலைகள் கொண்டுவரப்படும். கூட்டுறவு சங்க முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் தவறுகள் நிரூபிக்கப்பட்டால் மீண்டும் பதவிகள் வழங்கப்படாது. கடந்த ஆட்சியில், ராஜேந்திரபாலாஜி அமைச்சராக இருந்தபோது அவர் செய்த தவறால் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. அதனை தமிழ்நாடு பணியாளர் தேர்வாணைய தேர்வு மூலம் பால் வளத்துறை பணியிடங்கள் ஏறக்குறைய 850 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று கூறினார்.