பெண்களுக்கு வீட்டிலும், பணியாற்றும் இடங்களிலும், பொது வெளியிலும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கின்றன.
பாலியல் துன்புறுத்தல் என்பதில் நிறைய மாறுபாடுகள் இருக்கின்றன.
நாம் ஒருவரைப் பார்த்து, ‘என்ன நீ உடல் எடை கூடிவிட்டாய்?’ ‘என்ன நீ இந்த உடையில் இப்படி இருக்கிறாய்?’ என்று கமெண்ட் அடிப்பது வாய்மொழி துஷ்பிரயோகமாக உள்ளது.
பல பெண்களுக்கு பெரிய ஆள் ஒருவர் தன்னிடம் ஏன் வந்து பேசினால், அவருடைய உள்நோக்கம் என்ன என்று தெரிவதில்லை. அவர்கள் தங்கள் உடல்வாகு பற்றி அவமானம் செய்கிறார்களா என்று தெரிவதில்லை. இதுவும் ஒரு பாலியல் துன்புறுத்தல் தான்.
ஒருவரை சீண்டிப் பார்ப்பது, தூண்டுவது, கெடுப்பது, தூண்டும் வகையில் பேசுவது, நம்பிக்கை கொடுப்பது உணர்ச்சித் துஷ்பிரயோகத்தில் அடங்கும்.
இந்தக் காலத்தில் காதல் ஏன் பெரும்பாலும் தோல்வியடைகிறது என்றால், ஆண்கள் அதீத நம்பிக்கையை கொண்டிருப்பார்கள். ஒரு கட்டத்தில் இது நமக்கு சரிப்படாது, அல்லது வேறொருவர் கிடைத்துவிட்டார் அல்லது வேறொரு நெருங்கிய உறவு கிடைத்துவிட்டது என்று முடிவு செய்து, வேறு பெண் பக்கம் செல்ல வேண்டும் என்றால், பெண்ணிடம் இருக்கும் உறவை அப்படியே துண்டித்து விடுவார்கள். இல்லையெனில், பெண்ணின் குணத்தைப் பற்றி தவறாகக் கூறுவார்கள். ‘நீ கெட்டவள், நீ அவனோடு செல்கிறாய், இவனுடன் செல்கிறாய்,’ என்று கூறிவிட்டு சென்றுகொண்டே இருப்பார்கள்.
இல்லையெனில், ‘எங்கள் வீட்டில் உன்னை ஏற்றுக் கொள்ளவில்லை, நான் யோசித்துப் பார்த்தேன், நீங்கள் மிகவும் வசதி குறைவாக இருக்கிறீர்கள், நான் பெரிய ஆள்,’ என்றெல்லாம் கூறும்போது, பெண்கள் உணர்ச்சிவசப்படுவார்கள்.
எனவே, பெண்களை அடிக்கவில்லை, எதுவும் செய்யவில்லை. இருந்தாலும் அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதுவும் ஒரு பாலியல் ரீதியான வார்த்தைகளால் பாதிக்கப்படுகின்றனர் எனும்போது அது உணர்ச்சி துஷ்பிரயோகம் ஆகிறது.
ஒருவரைத் தொடுவதில் இருந்து, முற்றிலுமாக பாலியல் வன்புணர்வு செய்வது எல்லாம் உடல் துஷ்பிரயோகத்தில் வருகிறது. உடல் துஷ்பிரயோகம் பற்றி ஒருவருக்குப் புரிய வைப்பது சற்றுச் சிரமமாக இருக்கிறது.
பெண்ணுக்கு உடல் துஷ்பிரயோகம் நடந்துவிட்டது என்றால், ‘என்ன துஷ்பிரயோகம்? ஓ பாலியல் வன்கொடுமையா (Rape)?’ என்பார்கள். துஷ்பிரயோகம் என்பதற்கு அவர்கள் அளிக்கும் முக்கியத்துவம் குறைவு. பாலியல் வன்கொடுமைக்கு அவர்கள் அளிக்கும் முக்கியத்துவம் அதிகம்.
மற்றொரு புறம், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஒருவரை இந்த சமூகம் எப்படிப் பார்க்கிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
நாம் என்னதான் வெளியில் இருந்து மிகவும் கருணையோடு பேசினாலும், இந்த சமூகத்தைப் பொறுத்தவரை பாதிக்கப்பட்ட பெண்ணை குற்றவாளி போலவோ, தீண்டத்தகாதவரைப் போலவோ, சபிக்கப்பட்டவர் மாதிரியோ தான் பார்க்கிறார்கள். இது ஒரு அநீதி, அநியாயம் என்று ஒரு பெண்ணுக்கு முழுமையாகப் புரியும் அளவுக்கு ஒரு ஆணுக்கு புரிகிறதா என்று தெரியவில்லை.
என்ன தான் எல்லாரும் ஒரு குடும்பத்தில் இருக்கிறார்கள், அவர்கள் வீட்டிலும் பெண்களெல்லாம் இருக்கிறார்கள் என்றாலும், அவர்களால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனென்றால் பாலியல் வன்கொடுமையால் வரும் அந்த மன வலி வித்தியாசமானது.
இங்கு உடல் மட்டுமல்ல, பெண்ணின் சுயமரியாதையும் கொல்லப்படுகிறது. அதிகாரத்தை செலுத்தியே வலுக்கட்டாயமாக ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறாள் எனும்போது, அவள் தன்னை தகுதியில்லாதவள் போல உணருவாள். வாழவே தகுதியில்லை, இந்த உலகமே இருண்டுவிட்டது என்று உணர்த்தி அவளுக்கு அழுத்தம் கொடுக்கப்படும்போது, அவளின் சுயமரியாதையும் கொல்லப்படுகிறது. இந்தக் கருத்துகளெல்லாம் ஆண்களுக்குப் புரியாது. ஆண்களைப் பொறுத்தவரை உடலைப் பற்றிய பார்வை தான் அவர்களுக்கு இருக்கும்.
ஒரு பெண் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவளாக இருக்கும்போது, அவளின் எண்ணம் எப்படி இருக்கும்? ஒரு துஷ்பிரயோகம் அல்லது ஒரு பாலியல் வன்கொடுமையே நடக்கிறது என்றால் அவளை நாம் எப்படி கண்டுபிடிப்பது என்று பார்க்க வேண்டும். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் மிகவும் குழப்பமான மனநிலையில் இருப்பார்கள். ‘நான் என்ன தவறு செய்தேன், எனக்கு ஏன் இப்படி ஒரு தண்டனை?’ என்று அவர்களுக்குள் கேள்விகள் வந்துகொண்டே இருக்கும். அப்போது அவர்களுக்கு சுய பரிதாபம் அதிகமாகிறது.
‘நான் ஏதோ செய்திருக்கிறேன், நான் யாருக்கோ தவறு செய்துவிட்டது போல இருக்கிறது. போன ஜென்மத்தில் செய்ததைத் தான் நான் இப்போது அனுபவிக்கிறேன்,’ என்றெல்லாம் அவர்கள் புழுங்கிக்கொண்டு இருப்பார்கள்.
இதுபோன்று அவர்கள் மீதே அவர்கள் பழிசுமத்திக் கொள்வார்கள். அதேபோல், அவர்கள் இந்த நிகழ்வுகள் பற்றி வெளியில் சொல்வதற்கான வாய்ப்புகளும் மிகக் குறைவு. ஏனென்றால், நமது சமூகத்தில் அப்பா, அம்மாவுக்கே தெரிந்தாலும், ‘நாளைக்கு உனக்குத் திருமணம் ஆக வேண்டும், சமூகம் உன்னை கீழ்த்தரமாகப் பார்க்கும். உள்ளேயே புழுங்க வேண்டியதுதான்,’ என்று தான் சொல்வார்கள். ‘நீ வா நாம் போய் அவனை என்னவென்று கேட்போம், வா நாம் சென்று புகார் கொடுப்போம்,’ என்று சொல்வோரின் எண்ணிக்கை மிகக் குறைவு. இந்த சமூகத்தின் பார்வை இப்படி உள்ளது.
அவர்களைப் பொறுத்தவரைக்கும், சமூகம் நம்மைப் பார்க்கும் விதம்தான் முக்கியம் என்று நினைக்கிறார்கள்.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் பேருந்து, அல்லது ஆட்டோவில் செல்லும்போது பொதுமக்கள் மனதில் என்ன கருத்து ஏற்படும்? ‘அய்யோ பாவம்’ என்று நினைப்பார்களா அல்லது ‘பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவளா? என்ன நடந்திருக்கும்?’ என்று நினைப்பார்களா?
இது பொதுமக்களின் பலவீனம். இது அவர்களின் மனதில் இருக்கும் ஒரு வக்கிரம். முதலில் இதை நாம் அழிக்க வேண்டும். அப்படி அழித்தால் தான் இதையெல்லாம் நாம் கையாளவே முடியும். ஏனென்றால், இது மிகவும் ஒரு உணர்ச்சிப்பூர்வமான விஷயம். மேலோட்டமாக பேசிவிட்டு போகிற விஷயம் கிடையாது. இதை உணர்ந்து, புரிந்து, அந்த வலியை தெரிந்து கொள்ள வேண்டும்.
பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் மனநிலை என்பது பரிதாபமாக இருக்கும். சில பேருக்கு கோபம் மிகவும் அதிகமாக வரும். ‘என்னை இப்படி செய்துவிட்டானே, அவன் சந்தோஷமாக இருக்கிறானே, அவனை எப்படி விடுவது? அவனைக் கொன்றுவிட வேண்டும்,’ என்ற அளவுக்கு அவர்களுக்குக் கோபம் வரும். ஆனால், அவளுக்கு அந்த அதிகாரம் இருப்பதில்லை. அவனை அவமானப்படுத்த வேண்டும் என்றால், தனது பெயரும் சேர்ந்து அவமானப்படும். அவனை என்ன தான் செய்வது? அவன் நிம்மதியாக அவன் குடும்பத்தோடு வாழ்கிறான் என்ற ஆதங்கம் இருக்கின்றதே, அது அவளை நிம்மதியாக இல்லாமல் செய்யும். எனவே, அவளுக்கு மன அமைதி இல்லாமல் போய்விடுகிறது.
பிறகு, நடந்த ஒரு சம்பவம், திரும்பத் திரும்ப அவளுக்கு நினைவில் வந்து போய்க்கொண்டே இருக்கும். ஒரு முறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண், லட்சம் முறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது போல அவளுக்குத் தோன்றிக் கொண்டே இருக்கும்போது, ஒவ்வொரு முறையும் பிளாஷ்பேக் வரும்போதும் அவள் வேதனையடைகிறாள்.
இது மட்டுமல்ல, அந்தப் பெண்ணுக்கு தூக்கம் வராது. ஏனென்றால் தூங்க பயப்படுவாள். தூக்கத்தில் அவள் பாதுகாப்பற்ற நிலையை உணருவாள். கண்ணை மூடி இருட்டைப் பார்த்தால், ‘நம்மை யாரோ பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப் போகிறார்களோ; யாரோ நம்மை நெருங்கப் போகிறார்களோ,’ என்ற பயம் வரும். பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஏற்கெனவே மிகவும் பயந்துவிட்டதால், கண்ணை மூடும் பயம்கூட வேண்டாம் என்றுதான் நினைப்பார்கள். அவர்கள் சாப்பிடவும் மாட்டார்கள். ‘சாப்பிடும் அளவுக்கு நான் தகுதியானவள் இல்லை?’ என்று அவர்கள் நினைப்பார்கள். ‘இந்த ஒரு வேளை சாப்பாட்டை சாப்பிடுவதற்கு நான் என்ன ஒரு ஜென்மமோ?’ என்று அவர்கள் நினைப்பார்கள். இந்த மாதிரி அவர்களின் சுயமரியாதை கீழ் நிலைக்குத் தள்ளப்படும்.
மேலும், எதிலுமே அவர்களுக்கு நாட்டம் இருக்காது. தொலைக்காட்சி பார்க்க முடியாது. ஏனென்றால், ஏதாவது ஒரு காட்சியில் ஒரு ஆண் வந்தாலோ, ஒரு காதல் காட்சி வந்தாலோ அவர்கள் பீதியடைந்து விடுவார்கள்.
நண்பர்களிடம் சகஜமாக அவர்களால் பேச முடியாது. ’நாம் ஏதேனும் உளறி விடுவோமோ, அவர்கள் கண்டுபிடித்து விடுவார்களோ, அவர்களுக்குத் தெரிந்துவிட்டால் நம்மிடம் இருந்து ஒதுங்கிக் கொள்வார்களோ, நம்மைவிட்டு பிரிந்து சென்றுவிடுவார்களோ,’ என்கின்ற பய உணர்ச்சி அவர்களுக்குள் இருக்கும்.
ஒட்டுமொத்தமாகவே அவர்களுக்குள் ஒரு படபடப்பு இருக்கும். ஓய்வின்மை இருக்கும். அவர்களால் நிற்கவே முடியாது. கால் தடுமாறும். எங்காவது சாய்ந்து உட்கார்ந்துவிடலாம் என்றெல்லாம் எண்ணுவார்கள். ஏனென்றால், அவர்களின் மனது அவ்வளவு பலவீனமாக இருக்கும். உடல் அல்ல, உடல் நல்ல நிலையில் தான் இருக்கும். ஆனால் உணர்ச்சிப்பூர்வமாக, உளவியல் ரீதியாக அவர்கள் மிகவும் சிதறிப்போய் கிடப்பார்கள். மீண்டும் பழைய நிலைக்கு வருவதற்கே அவர்களுக்கு நேரம் வேண்டும். ‘என்ன நடந்தது? என் மேல் என்ன தவறு உள்ளது? அவன் தானே தவறு செய்தான், அவனைத்தானே ஏதாவது செய்ய வேண்டும்? சமூகத்தைப் பார்த்து நான் ஏன் பயப்பட வேண்டும்? இந்த சமூகம் தான் என்னைப் பார்த்து பயப்பட வேண்டும், ஏனென்றால் சமூகம் இப்போது எனக்கு கடனாளியாக இருக்கிறது’ என்று யோசிப்பதை விட்டுவிட்டு, அவர்கள் எதிர்மறையாக எண்ணுவார்கள்.
எனவே, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்கள் வழக்கறிஞர்களிடமும் விஷயத்தை சொல்ல மாட்டார்கள், போலீசாரிடமும் கூறமாட்டார்கள், மருத்துவரிடம் கூட சொல்லமாட்டார்கள். ஏனென்றால், அவர்கள் மிகவும் கூச்சமுள்ளவர்களாக இருப்பார்கள். வழக்கு பதிவானால் மருத்துவ சோதனைக்கெல்லாம் செல்ல வேண்டும் எனும்போது, அவர்கள் மிகவும் சங்கடப்படுவார்கள். அவர்கள் வீட்டு ஆண்கள் உடன் வருகிறார்கள் என்றால், அவர்கள் மேலும் சங்கடப்படுவார்கள்.
அண்ணனோ, அப்பாவோ வீட்டில் இருக்கிறார்கள் என்றால், அவர்கள் முன்பு நாம் எப்படி இருந்தோம், இனிமேல் அவர்களிடம் பாலியல் விஷயங்களைப் பேச வேண்டுமே என்ற சங்கடம் நிச்சயம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இருக்கும்.
பணியாற்றக் கூடிய பெண்களை எடுத்துக் கொண்டால், நிறைய பேருக்கு வேலைக்குச் சென்றுதான் ஆக வேண்டும் என்ற ஒரு நிலை இருக்கும். நிறுவன மேலாளரின் தவறான நடவடிக்கைகளை வீட்டில் கூறினால், வேலையை விட்டு நிறுத்திவிடுவார்கள். மேலாளரிடமே கூறினால், அவர் வேலையை விட்டு அனுப்பி விடுவார். இந்த வேலை போய்விட்டால், வீட்டில் இருக்கும் அனைவரும் பாதிக்கப்படுவார்கள். அப்படியென்றால், அதை அவர்கள் தாங்கிக் கொள்ள வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
‘நான் பல்லைக் கடித்துக் கொண்டு இதை சகித்துக் கொள்ள வேண்டும்’ என்று இருக்கும் பெண்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்களுக்கும் ஒருவிதமான தாழ்வு மனப்பான்மையோ, ’என்ன வாழ்க்கை இது’ என்ற வெறுமையோ இருந்துகொண்டே இருக்கும்.
எனவே, இப்படிப்பட்டவர்களால் ஒரு சகஜமான வாழ்க்கையை வாழவே முடியாது. ஒருவேளை, குழந்தைகள் இருந்தால், அவர்களுக்கு எப்படி நம்பிக்கை ஊட்ட முடியும்? இவர்களே நம்பிக்கையற்ற நிலையில் இருக்கிறார்கள் எனும்போது, குழந்தையையும் அது பாதிக்கும். அவர்கள் வீட்டு ஆண்களிடமும் ஒரு சுமூகமான உறவில் இருக்க முடியாது. அவர்களுக்கு சட்டென்று கோபம் வந்துவிடும். சிறிய விஷயத்தையும் பெரிதாக எடுத்துக்கொண்டு இவர்கள் எரிச்சல் அடையும்போது, ‘நீ என்ன? எல்லாவற்றுக்கும் கோப்படுகிறாய்? கோபக்காரியாக இருக்கிறாய்,’ என்று வீட்டில் இருப்பவர்கள் கேட்கும் நிலை வந்துவிடும்.
இது தவிர, திருமண விஷயத்தில் கூட பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறார்கள். கணவனே கெட்டவனாக இருந்தால் என்ன செய்ய முடியும்?
ஒரு கணவன், மனைவியின் சம்மதமின்றி, குடித்துவிட்டு வந்து பாலியல் வன்கொடுமை செய்துவிடுகிறான். மிருகத்தனமாக நடந்து கொள்கிறான். ஏதாவது படம் பார்த்துவிட்டு, அதேபோல தான் அவளிடம் இருக்க வேண்டும் என்று சொல்லி, எதிர்பாராத, கற்பனையை நினைக்கின்றான். இது போன்றெல்லாம் இருக்கும்போது, அந்தப் பெண்ணால் வெளியில் சொல்லவே முடியாது. கணவன் இப்படி செய்கிறான் என்று சொன்னால், சமூகத்தில் எல்லாரும் சிரிப்பார்கள். ‘உன் கணவனுடன் தானே இருக்கிறாய், அதில் என்ன தவறு?’ என்பார்கள்.
ஆனால், பெண்ணுக்கென்று ஒரு உரிமை இருக்கிறது. பாலுறவை அவள் விரும்பி அனுமதிக்க வேண்டும். இந்த உரிமை கூட இல்லாதபோது, ‘நான் அதற்குக்கூட தகுதியில்லை’ என்று மீண்டும் அவள் தாழ்வு மனப்பான்மைக்கு வந்துவிடுவாள். வாழ்க்கை கேள்விக்குறியாகும்.
அடுத்ததாக, மாணவர்களும் பாலியல் ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள். தனது பேராசிரியர்களிடம் இருந்து பாலியல் தொல்லை வருகிறதென்றால், அவர்கள் பல்லைக் கடித்துக் கொண்டு இருப்பார்கள். பல்லைக் கடித்துக் கொண்டு இருப்பது, சகித்துக் கொள்வது என்பது மிகவும் சிரமம். அவர்கள் உறுதியாக இருப்பது போல் தெரியலாம். ஆனால் அந்த அளவுக்கு உள்ளுக்குள் அவர்கள் உருக்குலைந்து கிடப்பார்கள் என்பதே உண்மை. எனவே, அவர்கள் அனுபவிக்கும் வலி என்பது மிகவும் தீவிரமாக இருக்கும். இதை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும் முடியாது. அதை ஒரு அச்சுறுத்தலாகவே அவர்கள் பார்ப்பார்கள்.
சமூகத்திற்குத் தெரிந்தால், தன்னுடைய வாழ்க்கையே நாசமாகிவிடும் என்றெல்லாம் அவர்கள் பயப்படுவார்கள். இந்த மாதிரியான விஷயங்கள் எல்லாம் பாலியல் வன்கொடுமையில் இருக்கிறது என்று நிறைய பேருக்குத் தெரியாது.
எல்லாரும் மேலோட்டமாக, செய்தி, தலைப்புச் செய்தியைப் படித்துவிட்டு, இப்படி நடந்ததா? அந்தப் பெண் இப்போது மருத்துவமனையில் இருக்கிறாரா? என்றுதான் பார்ப்பார்கள். உடலில் ஏற்பட்ட வலி சரியாகிவிடும். ஆனால், மனரீதியான வலி என்பது பல ஆண்டுகளாக தொடரும். பாலியல் கொடுமை செய்தவன் ஏதேனும் விபத்திலோ அல்லது வேறு முறையிலோ இறந்துவிட்டான் என்று தெரிந்தாலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அந்தக் கோபம் அடங்காது. ஏனென்றால், ‘நான் ஒன்றும் செய்ய முடியவில்லையே, அவனாக இறந்துவிட்டான், நான் எதுவும் செய்யவில்லையே’ என்ற கோபம் அவர்களுக்குள் இருந்து கொண்டே தான் இருக்கும்.
எனவே, இந்த மாதிரியான மனநிலையில் இருக்கும் பெண்கள், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் நான்கு பேர் ஒன்று சேர்ந்தால், அவர்கள் ஒருவருக்கொருவர் மனம் திறந்து பேச முடியும். இதற்காக குரூப் தெரபி வைக்கப்பட வேண்டும். அதில் இந்த மாதிரி பாதிக்கப்பட்டவர்களே நான்கு பேர் வருவார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் அறியாதவர்களாக இருப்பார்கள். ஆனால் அவர்களால் தான் தன்னைப் போன்று இருப்பவர்களை உணர முடியும். வேறு யாரும் இருக்க மாட்டார்கள். அதனால், நான்கு பேரும் அவர்களைப் போன்றே பாதிக்கப்பட்டவர்களாக வரும்போது, மனம் திறந்து பேச அது உதவியாக இருக்கும்.
தங்களின் கோபத்தை அவர்களால் பகிர்ந்துகொள்ள முடியும். அவர்களால் ஆக்கப்பூர்வமாக யோசிக்க முடியும். சரி நாம் இப்போது என்ன செய்யலாம்? நடந்தது நடந்துவிட்டது. அடுத்ததாக நாம் என்ன செய்யலாம்? நம்மால் முடிந்த விழிப்புணர்வை ஏற்படுத்தலாமா? அல்லது நான்கு பேரிடம் சென்று இப்படி நடந்து கொள்ளுங்கள், இப்படி நடந்து கொள்ளாதீர்கள் என்று சொல்லலாமா? என்ற ஒரு எண்ணம் அப்போது அவர்களுக்கு ஏற்படும்.
ஆனால், அப்படி நடக்க வேண்டுமென்றால், கவுன்சிலிங் வரும்போது தான் முடியும். கவுன்சிலிங் என்பது பாதிக்கப்பட்டவர்களிடம் என்ன நடந்தது என்று திரும்பத் திரும்ப கேட்பது கிடையாது. அவர்களை மனம் திறந்து பேச வைப்பதற்கான ஒரு முயற்சி தான் அது.
பயம் மற்றும் மன அழுத்தத்துடன் இருப்பவர்களை ரிலாக்ஸ் செய்து மனம் திறந்து பேச வைத்தால் தான் அவர்களே முதலில் அதில் இருந்து விடுபடுவார்கள்.
உதாரணத்திற்கு, இருட்டில் என்னை ஏதோ ஒன்று அடித்துவிட்டது. அது சிங்கமா, புலியா, நாயா என்று தனக்குத் தெரியாது. எனவே, சிங்கம் தான் தன்னை அடித்துவிட்டது என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது, உண்மையில் தன்னை அடித்தது நாய் தான் என்று தெரியவந்தால், கொஞ்சம் அவர்களின் உணர்வு மேம்படும். ஓ, நம்மை அடித்தது நாய் தானே, சிங்கம் அல்ல என்கின்ற உணர்வு அவர்களுக்கு வரும்.
இப்படி மனம் திறந்து பேச வைக்க, கவுன்சிலிங் மிகவும் முக்கியமாக இருக்கிறது. அதுமட்டுமின்றி, கவுன்சிலிங் என்று பொத்தாம் பொதுவாக நம்மால் பேசக் கூடாது. ஏனென்றால், தற்போதெல்லாம் சமூகத்தில் ஒரு கேட்ட விஷயம் நடந்து கொண்டிருக்கிறது. கவுன்சிலிங் என்ற வார்த்தையை எல்லாரும் பயன்படுத்தி வருகின்றனர். கவுன்சிலிங் என்பது, ஒரு நபர் தன்னைத் தானே தற்காத்துக் கொள்வதற்காக, அவரிடம் தொழில்முறையாக உளவியல் ரீதியாகப் பேசுவது ஆகும். அது தான் சரியான ஒரு கவுன்சிலிங்காக இருக்கும்.
இப்போதெல்லாம், நீங்கள் இடதுபுறம் சென்று வலதுபுறம் செல்லுங்கள் என்று கூறுவதைக் கூட கவுன்சிலிங் என்கிறார்கள். சாலையில் அடையாளம் சொன்னால் கூட அதை கவுன்சிலிங் என்கிறார்கள். அது தவறு.
அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் அறுவை சிகிச்சை செய்வதற்கும், வழக்கறிஞர் ஒருவர் அறுவை சிகிச்சை செய்வதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. எனவே, அதைப் பற்றி படித்தவர்களோ, அதிலே நிபுணத்துவம் பெற்றவர்களோ தான் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.
இதை ஏன் இங்கு நாம் முக்கியமாக குறிப்பிடுகிறோம் என்றால், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கும் விஷயத்தில் நாம் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டால், மீண்டும் அதை சரிப்படுத்த முடியாது.
ஒருமுறை அவர்களுக்கு நம்பிக்கை போய்விட்டது என்றால், அவர்கள் இன்னும் ஆழமாக சென்றுவிடுவார்கள். இது எப்படியென்றால், ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தை போன்றது தான். இன்னும் உள்ளே சென்றுவிட்டால் மீட்பது கடினம்.
அதனால், கவுன்சிலிங் கொடுக்கக் கூடிய நபர் சரியாக இருக்க வேண்டும். சரியான உளவியல் ஆலோசனைகளை வழங்கி, முதலில் அவர்களை அமைதிப்படுத்தி, அவர்கள் மனதில் உள்ளது என்ன என்பதை வெளியே எடுத்து, பிறகு அவர்களுக்கு மன உறுதியைக் கொடுத்து, குரூப் தெரபி வைத்து அவர்களை மனம் திறக்க வைத்து, அவர்களின் ஆளுமையை நாம் வெளியே கொண்டு வர வேண்டும். இது தான் செயல்முறை.
மக்களைப் பொறுத்தவரை பாதிக்கப்பட்டவரை அடையாளம் காண வேண்டியது மிக அவசியம். வழக்கத்திற்கு மாறாக ஒரு பெண் வித்தியாசமாக இருக்கிறார் என்றால் ஒரு நாள் விட்டுவிடலாம். இரண்டாம் நாளும் அப்படி இருந்தால் அதைப் பற்றி யோசிக்க வேண்டும். வழக்கமாக காலை ஹலோ சொல்வது பழக்கம் என்றால், அது இல்லை என்று ஆகிவிட்டால் அதைக் கவனிக்க வேண்டும்.
நன்றாக படித்துக் கொண்டிருந்தவர்கள் திடீரென படிக்கவில்லையென்றால் நாம் யோசிக்க வேண்டும். குடும்பத்தில் இடைவெளியை கடைபிடிக்கிறார்கள் அல்லது கணவனிடமிருந்தே பாலியல் ரீதியாக தள்ளிப் போகிறார்கள் என்றால் நாம் யோசிக்க வேண்டும். ஒருவேளை, ஏதோ ஒரு ஆண் செய்த தவறினால், பாலியல் மேலேயே அவர்களுக்கு ஒரு வெறுப்பு வந்திருக்கலாம்.
இந்த மாதிரியான விஷயங்களையெல்லாம் வைத்து கண்டுபிடித்து விட்டு, அவர்களுக்கு உடனே உளவியல் ரீதியான ஆலோசனைகளை வழங்கினால் அவர்களின் மனதில் இருப்பதை நாம் அறிந்து கொள்ளலாம். இது போன்று செய்வது தவறு இல்லை நாம் கவுன்சிலிங் சென்றால் நம்மை பைத்தியம் என்று நினைத்துவிடுவார்களோ என்று பாதிக்கப்பட்டவர்கள் குழப்பம் அடைகிறார்கள். அதனால், நாம் மீள்வதற்கு நாமே முயற்சி செய்யலாமா, நமது தாத்தா, பாட்டியிடம் பேசலாமா என்று நினைக்கிறார்கள். அப்படி நெருக்கமானவர்களிடம் அவர்கள் பேசுவது நல்லது தான். ஆனால், இது குணப்படுத்தும் செயல்முறையை நிபுணர்கள் தான் மேற்கொள்ள வேண்டும்.
கவுன்சிலிங் என்பது ஒரு மிகவும் ரகசியமாக நடக்கக்கூடிய ஒரு விஷயம். முறையாக கவுன்சிலிங் அளிப்பவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தை தனித்தனியாக ஒதுக்க வேண்டும். அப்போதுதான் பாதிக்கப்பட்ட பெண் பேசுவதற்கு கொஞ்சம் துணிவு அடைவார். ‘நம் விஷயம் வெளியில் செல்லாது, நம்மை கேலி, கிண்டல் செய்ய மாட்டார்கள், நாளைக்கு நம்மைப் பற்றி சொல்லிக்காட்ட மாட்டார்கள்’ என்ற உத்தரவாதம் அவர்களுக்கு வேண்டும். இந்த உத்தரவாதம் இருந்தால் அவர்கள் நிச்சயம் மனம் திறந்து பேசுவார்கள். அப்படி பேச ஆரம்பித்தார்கள் என்றால், முதலில் அவர்களை நாம் ஆசுவாசப்படுத்திவிட்டு, அவர்களை மீட்டுக் கொண்டுவர உதவியாக இருக்கும்.
ஒரு விஷயத்தைப் பார்த்து பயந்து கொண்டே இருந்தால், அப்படியே இருக்க வேண்டியது தான். இருட்டைப் பார்த்து பயப்படுகிறவனுக்கு, ஒரு நாள், வா என்று கையைப் பிடித்து அழைத்துச் சென்று இருட்டுக்குள் கூட்டிச் சென்று அழைத்து வந்துவிட்டால் பயம் போய்விடும். அவர்களுக்கு தேவை என்னவென்றால், கையைப் பிடித்து அழைத்துச் செல்ல ஒருவர் தேவை என்பது தான். ஆனால், எல்லாம் என்ன சொல்வார்கள் என்றால், ஆம், இருட்டு பயம் தான், நீ செல்லாதே, நீ விளக்கை ஏற்றிக் கொள் என்று தான் சொல்வார்களேயொழிய, இருட்டு பயத்தைப் போக்க வேண்டும் என்ற முயற்சியை எடுக்க மாட்டார்கள். இருட்டு பற்றிய பயத்தை நீக்குவதுதான் கவுன்சிலிங்.
பாதிக்கப்பட்ட பெண், இன்னொரு ஆணிடம் சென்று பாதிக்கப்பட்டுவிடக் கூடாது. ஒரு ஆணிடம் சென்று தனக்கு நடந்ததைப் பற்றி பாதிக்கப்பட்ட பெண் பேசுகிறார் என்றால், அந்த ஆண், ‘அப்படியா மா? நீ கவலைப்படாதே, நான் இருக்கிறேன், உனக்கு வாழ்க்கை தருகிறேன்,’ என்று சொல்லலாம். அப்படி சொல்லும்போது, அவர்கள் அங்கேயும் தங்களை இழந்து விடுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. ஏனென்றால் அவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். யாராவது ஆறுதல் கூறினால் நன்றாக இருக்கும் என்று அவர்கள் எண்ணுவார்கள். அதனால் இது போன்ற அபாயங்கள் இருக்கின்றன.
நாம் உறுதியாக இருந்தால் தான் பலவீனமாக இருக்கும் அவர்களை மீட்க முடியும். பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் உடைந்து போய் இருப்பார்கள். அந்த கற்களை ஒன்றாக சேர்த்து கட்டமைத்து விட்டால் தான் அவர்களால் யோசிக்கவே முடியும். எனவே, உளவியல் ரீதியான கவுன்சிலிங் மிகவும் அவசியம்.
உளவியல் ரீதியான கவுன்சிலிங் இப்படித்தான் நடக்க முடியும். ஏனோ தானோவென்று உளவியல் ஆலோசனை இருக்க முடியாது. மிகச்சரியான தொழில்முறை கவுன்சிலிங் கொடுத்தால், பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது தனிப்பட்ட பிரச்சனைகள் என்பதால், தனிப்பட்ட முறையில் தான் அதை நாம் கையாள வேண்டும்.
குடும்பத்தைப் பொறுத்தவரைக்கும் விஷயம் தெரிந்த பிறகு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அவர்கள் மிகவும் ஆதரவாக இருக்க வேண்டும். அவர்கள், ‘நீ ஏன் அந்த நேரத்தில் அங்கு சென்றாய்? நீ இந்த மாதிரி உடையை அணிந்து சென்றாய். எனக்கு அப்போதே தெரியும், நீ நான்கு பேரிடம் போனில் பேசும்போதே எனக்குத் தெரியும்,’ என்றெல்லாம் சொல்லக் கூடாது. பாதிக்கப்பட்டவர்கள் மன ரீதியாக தடையை அடைந்திருப்பார்கள். அந்த நேரத்தில் அவர்களின் பக்கத்தில் உட்கார்ந்து அவர்களின் கையைப் பிடித்து ஒன்றும் இல்லை என்று சொல்வதே பெரிய விஷயம். அந்த ஆதரவை குடும்பம் அளித்தே ஆக வேண்டும். அப்படி அளித்தால் மட்டுமே அவர்களை சீக்கிரமாக மீட்டுக் கொண்டுவர முடியும்.
அப்படி இல்லையென்றால், பாதிக்கப்பட்டவர்கள் நிறைய தவறாக யோசிப்பார்கள். அவர்களுக்கு தற்கொலை எண்ணம் வந்துவிடும். நான் ஏன் வாழ வேண்டும் என்ற கேள்வி வந்தால், அப்போது நீ இறந்துவிடு என்ற பதிலைத் தரும். நிறைய பேர் தற்கொலை செய்துகொள்வதற்கு அதுவே காரணம். ஏனென்றால், அவர்கள் முட்டாளாக்கப்பட்டார்கள், ஏமாற்றப்பட்டார்கள், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்ற உண்மையை அவர்களால் எதிர்கொள்ள முடிவதில்லை.
அவர்களின் இந்த எண்ணத்தை உடைத்தெறிய வேண்டும். ’அதெல்லாம் ஒன்றும் கிடையாது. பாலியல் கொடுமை செய்தவன் முன்னால் நீ வாழ்ந்து காட்டு, அவன் முன்னால் போய் நில், என்ன செய்வான்? அவன் தான் தவறு செய்திருக்கிறான். நீ தவறு செய்யவில்லை,’ என்று ஆலோசனை வழங்க வேண்டும். ஒரு சம்பவம் நடந்துவிட்டால், வேறு வழி இல்லை. அப்படி கையைப் பிடித்து சமாதானப்படுத்தித் தான் ஆக வேண்டும். அவர்களை மீட்டுக் கொண்டு வர வேண்டும்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உடல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவ்வளவு தான். மனம் சுத்தமாகத் தான் இருக்கிறது. குற்றவாளிக்கு மனம் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. எனவே, அவன் தான் வெட்கப்பட வேண்டும், அவனது பெற்றோர் தான் வெட்கப்பட வேண்டும்.
‘நீ வெட்கப்பட என்ன இருக்கிறது, நாம் என்ன தவறு செய்தோம்?’ என்று உத்தரவாதம் கொடுக்கும்போது, பாதிக்கப்பட்டவர்கள் சிறப்பாக உணருவார்கள். அது அவர்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கும். மேலும், வாழ்க்கையில் அதை அவர்கள் மீண்டும் மீண்டும் யோசித்துப் பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று நினைப்பார்கள்.
அனைவருக்கும் வாழ்க்கையில் குடும்பம், வேலை, தனிப்பட்ட ஆசைகள் என நிறைய கனவுகள் உண்டு. அதில் ஒரு கனவுக்கு தான் இடையூறு ஏற்பட்டுள்ளது. இது மட்டுமே வாழ்க்கை கிடையாது. மற்றொரு கனவு உள்ளது, அது இல்லையெனில், வேறொரு கனவு உண்டு.
எனவே, குடும்பமும் ஆதரவு அளிக்கவில்லையா? பரவாயில்லை. அடுத்த கனவு. நண்பர்களும் ஆதரவு தரவில்லையா? அடுத்த கனவு இருக்கிறது. வேலையில் கவனத்தை செலுத்த வேண்டும். அடுத்த கனவு. அவர்களுக்கு என்ன விருப்பமோ அதைச் செய்ய வேண்டும்.
உடல் என்பது எளிமையாக பாதிப்படையக் கூடிய ஒன்று தான். அதை நாம் தவறாக பயன்படுத்தவில்லை. நாம் அதை தவறாக கையாளவில்லை. நாம் மற்றொருவர் மீது அதை திணிக்கவில்லை. யாரோ ஒருவன், அவனது மனம் சரியில்லாமல் பெண்ணை பாதிப்படையச் செய்திருக்கிறான் எனும்போது, அதை நீங்கள் மிகவும் மோசமாக உணர வேண்டியதில்லை. இதுதான் அடிப்படையான விஷயம். இதை பெண்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த விஷயத்தில், ஆண் நண்பர்களுடன் சுற்றும் பெண்கள் பாதிப்படைவதைப் பற்றி குறிப்பிடவில்லை.
உதாரணமாக, தெலங்கானாவில் கால்நடை பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தை எடுத்துக் கொள்ளலாம். பாவம். அந்தப் பெண்ணுக்கு சம்பந்தமே இல்லை. ஆனால், பாதிக்கப்பட்டுள்ளார்.
பெண் ஒருவர் ஆண் நண்பருடன் செல்கிறார் என்றால், பாலியல் வன்கொடுமை செய்யப்படலாம் என்று அவளுக்குத் தெரிந்திருக்க வேண்டும். இது தான் நமது உள்ளுணர்வு.
ஆண் நண்பருடன் செல்லும் பெண் ஒருவர், மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவனுடன் நீண்ட தூரம் செல்லக் கூடாது. நம்பிக்கை அடிப்படையில் தனியாக சென்றுவிடக் கூடாது. தலைக்கவசத்தை அவள் அணிந்து கொண்டு, துப்பட்டாவை அவனுக்கு கொடுத்துவிட்டு செல்லக் கூடாது.
நமது அளவுகோல் என்பது நம்முடைய மனசாட்சி. நம்முடைய அறிவு. அறிவைத் தாண்டி நடப்பதற்குப் பெயர் விபத்து அல்ல. அது ஒரு தவறு. தவறு என்பது வேறு, விபத்து என்பது வேறு.
நிறைய பெண்களுக்கு ஏற்படுவது விபத்துகள்தான். அவர்களுக்கும், இந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கும் சம்பந்தமே இல்லை. சாலையில் செல்லும் எவனோ ஒருவன் தவறு செய்கிறான் என்றால், அது வேறு மாதிரி தான் தெரியும்.
குற்றவாளிகள் மூன்று விஷயங்களுக்காக பாலியல் வன்கொடுமை செய்வார்கள்.
இறுதியில் பார்த்தோமென்றால், அனைத்தும் தவறு தான். எதையும் நியாயப்படுத்த முடியாது. ஆனால், பாலியல் கொடுமை செய்யும் ஆணுக்கு மனது சரியில்லை. அவன் மனநிலை பாதிக்கப்பட்டவனாக இருக்கிறான்.
இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் இருக்கிறது என்றால், அவனுக்கு பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம். மகிழ்ச்சியான ஆன்மா அவனிடம் இருக்காது. அதற்காக, பாதிக்கப்பட்ட பெண் வாழத் தகுதியில்லை என்று நினைப்பது தவறு.
இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இதையெல்லாம் அவர்கள் எப்படி உணருகிறார்கள்? இந்த சமூகம் அவர்களை எப்படிப் பார்க்கிறது? என்ன செய்ய வேண்டும்? இதெல்லாம் போக, பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு பெண் என்ன செய்ய வேண்டும் என்பது மிகவும் முக்கியம். உடல் வலிமையைவிட மன வலிமை மிக மிக முக்கியம். ஒரு சாதாரண எலியால்கூட, ஒரு மலையையே சுரண்டி ஓட்டை போட முடியும். ஆனால், ஒரு பொறிக்குள் அது மாட்டிக் கொண்டால், அது பயந்துவிடுகிறது. அந்தப் பொறியை உடைத்துக் கொண்டு வெளியே வருவது பெரிய விஷயமெல்லாம் கிடையாது. ஆனால், ஒரு இரவு முழுவதும் அந்தப் பொறிக்கு உள்ளேயே உட்கார்ந்து இருக்கும் அந்த எலி. அது நினைத்துக் கொண்டிருக்கும், அதனால் சுரண்ட முடியாது என்று. ஏனென்றால், அது சிக்கிக் கொண்டது. எனவே, பாலியல் வேதனையில் சிக்கிக் கொண்ட அந்தச் சூழலில் ஒரு பெண்ணின் மனம் முறையாக வேலை செய்யாது.
பெண்களைப் பொறுத்தவரைக்கும் மனம் சரியாக வேலை செய்யாத சூழல் வரும்போது, அவ்வளவு தான், மாட்டிக் கொண்டோம் என்ற ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்.
அப்படி கிடையாது.
பாலியல் பாதிப்பு செய்த ஒரு ஆணுக்கு இருக்கும் அதே வேகமும், பலமும் பெண்களுக்கும் இருக்கின்றது. இன்னும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. வேறுபாடு என்னவென்றால், அதை அவன் எப்போதும் காட்டுவான். இவர்கள் தேவை வரும்போது காட்டுவார்கள். அது தான் வேறுபாடு. ஒரு தேவையின்போது, அவனை அடித்துப் போட்டுவிட்டு வெளியே வரவும் அவர்களால் முடியும். நான்கு பேர் இருந்தாலும் கூட பெண்களால் தப்பிக்க முடியும்.
ஆனால், அந்த நேரத்தில் அவர்களின் யோசனை தான் மிகவும் முக்கியமானது. அப்போது, எதை தூக்கிப் போட்டு அடிக்கலாம், எப்படி கூச்சலிடலாம், எப்படி அந்த இடத்தைவிட்டு ஓடி விடலாம் என்ற விஷயங்களை சமயோஜிதமாக யோசிப்பது மிகவும் முக்கியம்.
மிகவும் முக்கியம் என்னவென்றால், ‘உணர்வுப்பூர்வமாக நான் யாருக்கும் தாழ்ந்தவள் அல்ல’ என்று ஒரு பெண் நினைக்க வேண்டும்.
ஒரு நான்கு ஆண்கள் வந்து நின்றால், அவர்களெல்லாம் ஆண்கள், நாம் வெறும் ஒரு பெண் என்று எண்ணக் கூடாது. உணர்வுப்பூர்வமான சக்தி இருக்கிறது என்பதை அறிந்துகொள்வது மிகவும் முக்கியம்.
இவையெல்லாம் இருந்தால், தான் சிக்கிக் கொண்ட இடத்தில் இருந்து எளிமையாக ஒரு பெண் வெளியேறி வந்துவிட முடியும்.
ஒருவேளை எந்த வழியும் இல்லை, தப்பிக்கவே இயலாத அளவுக்கு சிக்கிக் கொண்டார்கள் என்ற நிலைமை இருந்தாலும், அவர்கள் உணர்வுப்பூர்வமாக உறுதியாக இருந்தால், அதற்குப் பிறகும் பெண்களால் வெளியே வர முடியும்.
சினிமாவில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் பெண் சத்தமிடுவாள். ஒரு கதாநாயகன் வந்து அவளைக் காப்பாற்றுவார். உண்மை வாழ்க்கையில் பாலியல் வன்கொடுமை என்றால் பெண்கள் உதவியற்றவர்களாகி விடுவார்கள். உடை இல்லை என்றாலே பெண்கள் மாட்டிக் கொண்டார்கள் என்று அர்த்தம். அப்படியெல்லாம் கிடையாது. பெண்கள், தங்களைத் தாங்களே மீட்டுக் கொள்ள வேண்டும். யாரும் குதித்து வந்து காப்பாற்ற மாட்டார்கள். கடவுள் வரமாட்டார். வந்து உடையெல்லாம் தரமாட்டார். அந்த இடத்தில் நீங்கள் தான் கடவுள். கடவுள் உங்களுக்குள் தான் இருக்கின்றார் என்று உணர வேண்டும்.
எனவே, ஒரு வேளை ஒரு ஆணிடம் சிக்கிக்கொண்டால், நீங்களே உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள். அங்கிருந்து எப்படி தப்பிக்கலாம் என்று பாருங்கள். அந்த மனநிலை நமக்கு வரவேண்டும். யாரையாவது கூப்பிடலாம், யாருக்காவது போன் செய்யலாம் என்று இருக்கக் கூடாது.
எப்போதும் முன்னெச்செரிக்கையுடன் இருங்கள். எப்போதும் கையில் பெப்பர் ஸ்பிரே வைத்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் ஒரு பேனா கத்தி வைத்துக் கொள்ளுங்கள். இப்போது, சட்டம் மிகக் கடுமையாக இருக்கிறது. பாலியல் தாக்குதல் தொடுக்க வரும் ஒரு ஆணின் உயிர் பிரிந்தால்கூட பெண்ணுக்கு எதுவும் பிரச்சினை வராது. ஆனால், அதை அவள் நிரூபிக்க வேண்டும். ’ஒரு நான்கு பேர் வந்தார்கள், என்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார்கள், அதனால் தான் நான் அவர்களைக் கொன்றேன்,’ என்று சொன்னால்கூட பெண்ணுக்கு எந்தத் தண்டனையும் கிடைக்காது.
ஏனென்றால், பாலியல் தாக்குதல் செய்ய வந்தவர்கள் குற்றவாளிகள். பாதிப்பில் இருந்து தப்பிய பெண் நிரபராதி. அப்படியென்றால், பெண்கள் பக்கம் தான் சட்டம் நிற்கும். எனவே, இதையெல்லாம் பெண்கள் மனதில் வைத்துக் கொள்ளுதல் அவசியம்.
நான் ஏன் ஒரு ஆணுக்காக அடிபணிந்து செல்ல வேண்டும் என்ற எண்ணம் பெண்களுக்கு மிகவும் முக்கியம். உளவியல் ரீதியாக ஒரு பாதிக்கப்பட்ட பெண்ணின் மனநிலைக்கு அப்பாற்பட்டு, பாதிப்புக்கு ஆளாகிவிடக் கூடாது என்ற வகையில் தங்கள் மனநிலையை எவ்வாறு வைத்துக் கொள்ள வேண்டும் என்பது பெண்களுக்கு மிகவும் முக்கியமானது.
அப்படி வைத்துக் கொள்ளும்போது, நீங்கள் தான் உங்களுக்கு முன்னுதாரணம். உங்களுக்கும் உங்களைப் பற்றி பெருமையாக இருக்கும். உங்களைக் காண்பித்து நான்கு பேர் சொல்லுவார்கள். இப்போது எப்படி நிர்பயாவைக் காண்பித்து உதாரணம் சொல்லுகிறார்களோ, அதேபோல், இந்த சம்பவத்தை, அந்தப் பெண் எவ்வளவு அழகாக எதிர்கொண்டு, அவர்களை அடித்துவிட்டு சென்றிருக்கிறாள், அந்தப் பெண் சமயோஜிதமாக யோசித்திருக்கிறாள் என்பது நான்கு பேரிடம் சென்றடையும்போது, அதைக் கேட்கும் பெண்களுக்கு ஒரு பெரிய உத்வேகமாக இருக்கும். அவர்களுக்கு அது தைரியத்தையும் தரும்.
ஏனென்றால், ஆண்கள் மட்டும் தான் என்னவோ பலமானவர்கள் மாதிரியும், அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டால், பெண்ணின் வாழ்க்கையே போய்விடும் என்றும் மீடியாவில் அடிக்கடி காண்பித்து பழகிவிட்டார்கள். ஆனால், அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது. பெண்களால் எதையும் வெல்ல முடியும்.
ஆணிடம் இல்லாத ஒரு விஷயம் பெண்களிடம் இருப்பதால் தான் அவன் பெண்களைத் தேடி வருகிறான். எனவே, அவனே மறைமுகமாக என்ன உணர்த்துகிறான் என்றால், அவள் அவனைவிட மதிப்பு வாய்ந்தவள் என்று உணர்த்துகிறான். நாம் யாரும் தகரத்தை போய் திருடப் போவதில்லை. வைரத்தை தான் திருடுவோம். எனவே, அவனே அதை உணர்த்துகிறபோது, அது தான் உண்மை.
உண்மையில், ஆணைவிட நாம் தான் மிகவும் மதிப்பு வாய்ந்தவர்கள் என்பதை பெண்கள் உணர வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும். அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். நான் மிகவும் மதிப்புக்குரியவள், என்னை நான் எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எனக்குத் தெரியும் என்பதை உணருங்கள்.
வயது குறைந்த பெண் குழந்தைகள் என்றால், தற்காப்புக் கலைகள், சுய பாதுகாப்பு குறித்த உத்திகள் தெரிந்து கொள்வது நல்லது. ஆனால், எல்லாவற்றையும் விட மிக மிக முக்கியமானது என்னவென்றால், யாரிடமும் ஏமாறாமல் இருக்க வேண்டும்.
சூழ்நிலை ஏமாற்றும். ஒரு இடத்திற்கு இரவு எட்டு மணிக்கு மேல் செல்ல வேண்டும் என்றால், அதற்கு நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும். ஒரு போருக்கு வீரன் ஒருவன் செல்கிறான் என்றால், அவன் அங்கு சென்று சாதாரணமாக நிற்பான் என்று சொல்ல முடியாது அல்லவா? தன் மீது எவ்வளவு நம்பிக்கை இருந்தாலும் கத்தியை கூர் ஆக்கிக்கொண்டுதான் செல்ல வேண்டும்.
’என்னிடம் அதற்கான கருவிகள் இருக்கின்றனவா? கூப்பிட்டால் உடனே வரும் அளவு தூரத்தில் தான் இருக்கிறோமா? இல்லையென்றால், ஒருவரை துணைக்கு அழைத்துச் செல்லலாமா? இல்லையெனில், வெளிச்சம் இல்லாத இடத்திற்கு நான் ஏன் செல்ல வேண்டும்? ஏன் தவறான சூழ்நிலை ஏற்படுவதற்கு நாம் இடம் கொடுக்க வேண்டும்? வேறு ஏதாவது வழியில், அதாவது முக்கிய சாலை வழியாகவே நான் செல்லலாமே? என்றெல்லாம் நாம் யோசிக்க வேண்டுமேயொழிய, ஒரு குருட்டு தைரியத்தில், ‘நான் இதையெல்லாம் பார்த்து பயப்படக் கூடிய ஆள் கிடையாது’ என்று இருக்கக் கூடாது. அதீத நம்பிக்கையும் வேண்டாம். சாதாரணமாகவே இருப்போம். இது பெண்களுக்கான ஒரு முக்கிய விஷயம்.
பெண்கள் முதலில், தங்களது ஆண் நண்பரையும், காதலரையும் மிகவும் நம்பிவிடக் கூடாது. ஏனென்றால், அவர்கள் வெறும் ஆண் நண்பரும், காதலரும் தான். நிச்சயமாக கணவனுக்கு இருக்கும் பொறுப்பும், கவனமும் அவர்களுக்கு இருக்க வாய்ப்பே இல்லை. ஒருவேளை அவர்கள் கணவனாக மாறிவிட்டால் வரும். அதுவரைக்கும் காதலர் தான், ஆண் நண்பர் தான்.
அவர்கள், ’நமக்கு அடுத்த மாதம் திருமணம் தானே ஆகப் போகிறது, நான் என்ன உன்னை விட்டுவிடுவேனா? என் மீது நம்பிக்கை இல்லையா?’ என்றெல்லாம் கூறுவார்கள். அதற்காக நீங்களே சென்று மாட்டிக் கொண்டால் அது உங்களின் தவறு தான். பெண்கள் தான் உஷாராக இருக்க வேண்டும். ஆயிரம் தான் இருந்தாலும், ’நீங்கள் இன்னும் திருமண வாழ்க்கைக்கு வரவில்லை. அதனால், நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்,’ என்று சொல்லி, அந்த இடைவெளியை கடைபிடியுங்கள்.
ஒருவனுடன் கூடவே சென்றுவிட்டு, அங்கு வரமாட்டேன் என்று சொன்னால் அவனுக்குக் கோபம் வரும். ஆரம்பத்தில் இருந்தே அவனுக்கு அந்த யோசனையைக் கொடுக்காதீர்கள். பெண்கள் யாரும் இதை வேண்டுமென்றே செய்வதில்லை. உண்மை என்னவென்றால், அவர்களுக்கு எதுவும் தெரிவதில்லை.
ஆண் நண்பன் அல்லது காதலனிடம் இணங்கிப் போனால்தான் அவன் தன்னை ஏற்றுக் கொள்வான், இல்லாவிட்டால் அவன் கைவிட்டுவிடுவான் என்றெல்லாம் யோசித்து, பெண்கள் தங்கள் சுய மதிப்பை கீழே தள்ளிக் கொண்டே இருக்கிறார்கள். அவன் காதலித்தால் தான் தனக்கு மதிப்பு என்று நினைப்பதே தவறு. உன்னை வேண்டும் என்று நினைப்பவன் எப்படி இருந்தாலும் காதலிப்பான். நீ அவனுடன் சென்றால் தான் அவன் காதலிப்பான் என்றால், அதிலேயே அவன் அடிபட்டு விடுகிறான். முக்கியமாக, மாணவிகள், வேலைக்குச் செல்லும் பெண்கள் சாதாரணமாக ஆண் நண்பன் அல்லது காதலனிடம் ஏமாற்றமடைந்து விடுவார்கள். ஏன் நம்பி செல்ல வேண்டும்? நம்பக் கூடாது.
இதை கேட்பதற்கு கொஞ்சம் கடினமாகத் தான் இருக்கும். கொஞ்சம் எதிர்மறையாகத் தான் இருக்கும். அப்படியென்றால் நம்பிக்கையின்றி இருக்க வேண்டுமா என்று கேட்பீர்கள். அப்படியில்லை. சூழ்நிலையை கொஞ்சம் கவனிக்க வேண்டும். அந்தச் சூழ்நிலை பெண்களுக்கு சாதகமாக இல்லாத பட்சத்தில், நமது நம்பிக்கையையும் நாம் கொஞ்சம் குறைத்து தான் வைத்துக் கொள்ள வேண்டும்.
அதனால், கண்மூடித்தனமாக நம்பிக் கொண்டு வெளியில் சென்று, மாட்டிக் கொள்ளக் கூடாது. அதை வெளியில் சொல்லவும் முடியாது. அது, திருடனுக்கு தேள் கொட்டியது போல் ஆகிவிடும். என் காதலன் என்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டான் என்று வெளியில் கூட சொல்ல முடியாது. வீட்டில் சொல்ல முடியாது. திருமணத்திற்கு ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அவன் என்ன இவ்வளவு கேவலமாக இருக்கின்றானே என்று சொல்வார்கள். அதனால், பாதிக்கப்பட்ட பெண்களால் சொல்லவும் முடியாது.
எனவே, இடைவெளியை கடைபிடியுங்கள். சுய கண்ணியத்தை கடைபிடித்தாலே, ஆண்கள் யாராக இருந்தாலும் ஒரு பயம் இருக்கும். தவறு நடக்காமல் இருப்பதற்கு இடைவெளி என்பது மிகவும் அவசியம்.
ஏனென்றால், பெண்ணின் அனுமதியுடன் உறவு வைத்துக் கொண்டு, பின்னர் அந்த ஆண் ஏமாற்றினால், அதுவும் பாலியல் வன்கொடுமை தான். அதனால் முடிந்த வரைக்கும் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். சுய மரியாதையை நாம் விடாமல் இருந்தோமென்றால், யாரும் நம்மைத் தொட முடியாது.
எதிர்பாராதவிதமாக நடக்கும் நிகழ்வுகளின்போது, பெண்கள் வீரனைப் போல் இருக்க வேண்டும். நான் உன்னைவிட மிகவும் சக்தி வாய்ந்தவள், உறுதியானவள் என்ற அந்த எண்ணம் பெண்களுக்கு இருக்க வேண்டும். இந்த ஒரு எண்ணம் இருந்தால், அந்த நேரத்தில் எதுவேண்டுமானாலும் யோசிக்கத் தோன்றும். கல்லை எடுத்து அடிக்கலாம் என்று கூடத் தோன்றும். அப்போது அதை செய்வதற்குக் கூட, நான் பலசாலி என்று அவள் தன்னை நம்ப வேண்டும். அதை அவர்கள் விட்டுவிடக் கூடாது.
கடவுளை வேண்டலாம். காவல்துறையை அழைக்கலாம். காவலர்களை எத்தனை இடங்களில் போட முடியும்? பெண்கள் ஆண் நண்பருடன் செல்லும்போது அங்கு ஒரு காவலரை போட முடியாது. ஏதோ ஒரு நாள் ஒரு வீட்டுக்கு பெண் ஒருவர் வரும்போது, அங்கு காவலர் நிற்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. ஆகவே, நம்மை நாம் கவனமாக பார்த்துக் கொள்கிறோம் என்பது தான் அடிப்படையான விஷயம்.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களை பார்ப்போருக்கான அறிவுரைகள் தர வேண்டும். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களைக் கண்டால், அவர்களை வேறு ஏதோ வித்தியாசமான ஜந்து என்பது போன்று பார்க்க வேண்டாம். அவர்கள் உங்களில் ஒருவர். கடனில் ஒருவர் பணத்தை இழந்திருப்பார். ஒருவர் குடும்பத்தில் தோல்வியுற்றிருப்பார். ஒருவர் சொத்தில் ஏமாற்றம் அடைந்திருப்பார். அந்த மாதிரிதான் பெண்களும் பாலியல் ரீதியில் ஏமாற்றமடைந்துவிட்டார்கள். அவ்வளவு தான். அப்படித்தான் பார்க்க வேண்டுமேயொழிய, அவர்களை ஏதோ தீண்டத்தகாதவர்கள், வாழவே தகுதியற்றவர்கள் என்பது போன்று நமது பார்வையாலேயே, அவர்கள் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் எண்ணத்தை உருவாக்கிவிடக் கூடாது.
இது மிகவும் முக்கியம். இது நமது சமூகத்தின் பிரச்சனை. நம் வீட்டும் பெண்ணாக இருந்தால் நாம் எப்படி பார்ப்போமோ, அதே மாதிரி கரிசனத்துடன், அவளுக்குரிய மரியாதையோடு பார்த்தோமென்றால், அவளே மீண்டு வந்துவிடுவாள். அவளுக்கு அது தான் வேண்டும்.
விபத்துக்கள் வாழ்க்கையை முடக்கிவிடுவதில்லை. மீண்டு வருவதற்குதான துணிவும் ஆற்றலும் பெண்களிடம் இருக்கின்றன. இருக்க வேண்டும்.