இன்று பெண்கள் எல்லாத் துறைகளிலும் கால்பதித்திருந்தாலும், அவர்கள் பணி செய்யும் இடத்தில் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. அந்தச் சமயத்தில் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு எங்கே சென்று எப்படித் தீர்வு காண்பது என்பதுகுறித்து விளக்கமளிக்கிறார் CecureUs அமைப்பின் நிறுவனர் விஜி ஹரி.
பெண்கள் மீது ஆண்கள் நிகழ்த்தும் பாலியல்ரீதியான பிரச்சினைகளுக்கு என்னதான் தீர்வு?
பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான சட்டங்கள் பல இருக்கின்றன. ஆனால், இதற்கான முடிவு என்றால் நாம்தான்; நமக்கு நாமேதான் தீர்வு. பெண்களுக்குப் பெண்கள்தான் பக்கத்துணையாக இருக்கவேண்டும் . பணிபுரியும் இடத்தில் ஒரு பெண்ணிற்குப் பாலியல் துன்புறுத்தல் நடந்தால் கண்டிப்பாக, அவர்களுடன் பணிபுரியும் நபர்களுக்கும் நடக்கும். அதனால், அவர்கள் அமைதியாகச் சென்றால் அது அவர்களுக்கு மட்டுமல்ல, சுற்றி இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஆகையால், எல்லோரும் கலந்து பேசவேண்டும். தனியாக இருக்கும்போது பலவீனமாக உணர்வோம். ஒன்றுசேர்ந்தால் பலம் பிறக்கும். ஆகையால் ஒன்றுசேர்ந்து புகாரளிக்க வேண்டும். அப்படியும் தீர்வு கிடைக்காவிட்டால், ஆதாரங்களுடன் மேல்முறையீடு செய்யலாம்.
அலுவலகத்தில் யாராவது உங்களிடம் அத்துமீறினாலோ உங்களைப் பற்றி அவதூறு பரப்பினாலோ நீங்கள் 3 விஷயங்களைச் செய்யலாம். ஒன்று Delicate. நீங்கள் நேரடியாக அவரை/அவர்களை எதிர்த்துப் பேச முடியாத, கேள்வி கேட்க முடியாத நிலையில் உங்கள் மேலதிகாரிகளிடம் முறையிட்டுத் தீர்வு காண்பது. அடுத்தது Direct. நேரடியாகவே அந்தச் சூழலை அல்லது நபரை எதிர்கொள்வது. மூன்றாவது Distract. இதுபோன்று தவறான விஷயங்களைப் பேசும்போதோ அல்லது நடந்துகொள்ளும்போதோ இந்த முகவரி எங்கே இருக்கிறது என்று தெரியுமா, என் சாவியைக் காணவில்லை என்று ஏதேனும் கூறி அதில் இருந்து தப்புவது. இந்த மூன்று வழிமுறைகளைப் பயன்படுத்தி பல பிரச்சினைகளில் இருந்து தப்பலாம்.
பணிபுரியும் இடத்தில் பெண்ணுக்கு நிகழும் கேலி கிண்டல்களை எப்படித் தவிர்ப்பது?
பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு ஏற்படும் கேலி கிண்டல்களைத் தவிர்க்க, நிறுவனம் பணிபுரியும் நபர்களுக்குப் போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதோடு, தவறு செய்யும் நபர்களுக்குச் சரியான தண்டனை வழங்க வேண்டும். குறிப்பாக, நடவடிக்கை எடுத்தாலே பயம் உருவாகும். இப்படிச் செய்வதன்மூலம் இதுபோன்ற செயல்களைத் தடுக்கலாம். அது எச்சரிக்கை கடிதம், வேலையை விட்டு நீக்குதல், பணியிடைநீக்கம் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் அல்லது பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஒரு தொகையை இழப்பீடாக அளிக்கவேண்டும் என்று சொல்லலாம். இப்படி நடவடிக்கை பலமாக இருந்தால்தான் கண்டிப்பாகக் குற்றங்கள் குறையும். அதற்குக் கட்டாயம் புகார் கொடுக்க வேண்டும். புகார் இல்லாமல் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.
புகார் கொடுப்பதற்கு எந்த மாதிரியான ஆதாரங்கள் தேவை?
பாலியல் நோக்கத்துடன் ஏதேனும் குறுஞ்செய்தியோ அல்லது மின்னஞ்சலோ வந்தால் அதனை நாம் சேமித்து வைக்க வேண்டும். அவற்றை அழித்துவிடக் கூடாது. பணிபுரியும் இடத்தில் பாலியல் சீண்டல்கள் நடைபெற்றிருந்தால், அங்கு யார் யார் இருந்தார்கள், சீண்டல் நடைபெற்ற நாள், நேரத்தைக் குறித்து வைப்பது மிகவும் நல்லது. சிசிடிவி கேமராக்கள் இருந்தால் அவற்றின்மூலம் வீடியோ பதிவை எடுக்கலாம். தொலைபேசி அழைப்பாக வந்தால் கட்டாயம் பதிவு செய்வது அவசியம். இதுபோன்ற ஆதாரங்கள் இருந்தால்தான் சரியான தண்டனை வாங்கித்தர முடியும்.
நிர்வாகம் பெண்களுக்கு எத்தகைய பாதுகாப்பான சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்?
ஒவ்வொரு நிறுவனத்திலும் அவர்களுடைய வரவேற்பறையில், ‘இந்த நிறுவனம் பெண்களுக்குப் பாதுகாப்பான இடம். உங்களுக்குப் பாலியல் சீண்டல் ஏற்பட்டால் புகார் அளிக்கவேண்டிய எண்’ என்று குறிப்பிட்ட அதிகாரியின் பெயர் மற்றும் கைப்பேசி எண்ணோடு ஒரு போஸ்டரை ஒட்டியிருக்க வேண்டும். அது பள்ளிக்கூடங்கள், ஐ.டி. நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என எந்த நிறுவனமாக இருந்தாலும் கட்டாயம் இந்த போஸ்டர் இருக்க வேண்டும். அதேபோல் பாலியல் சீண்டல் தடுப்புக் குழு ஒன்றை அமைக்க வேண்டியதும் அவசியம். அதில் அவசியம் 4 பேராவது இருக்க வேண்டும். அவர்களுடைய எண் அந்த போஸ்டரில் இருக்க வேண்டும். எல்லா நிறுவனங்களும் கண்டிப்பாக வருடம் ஒருமுறை பணிபுரியும் நபர்களுக்கு இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். எது துன்புறுத்தல் கொடுக்கக்கூடிய செயல் என கற்றுக்கொடுக்க வேண்டும். பலர் பாலியல் துன்புறுத்தல் என்றால் உடல்ரீதியானது மட்டும்தான் என்று நினைக்கின்றனர். ஆனால் தவறாகப் பேசுவது, உற்றுப் பார்ப்பது, இரட்டை அர்த்தம் உள்ள நகைச்சுவை வசனங்களைப் பேசுவது என அனைத்தும் பாலியல் துன்புறுத்தல்தான். இவை குறித்த விழிப்புணர்வை உருவாக்கினால் பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை நிச்சயம் உருவாக்கலாம்.
வேறு எந்தெந்த வகைகளில் எல்லாம் புகார் தெரிவிக்கலாம்?
தேசிய மகளிர் ஆணையத்தில் ShE box (Sexual Harrasement Electronic Box) என்று ஆன்லைன் புகார்ப் பெட்டி உள்ளது. இதில் நீங்கள் நேரடியாகப் புகார் அளிக்கலாம். நீங்கள் வேறு இடத்தில் புகார் அளித்ததற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால் இங்கு புகார் அளிக்கலாம். தவிர, நீங்கள் நேரடியாகவும் Local complaint comittee மூலமாகவும் புகாரளிக்கலாம். பணியிடத்தில் நடைபெறும் பாலியல் குற்றங்களைத் தடுக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதைப் பெண்கள் புரிந்துகொண்டு கண்டிப்பாகப் புகார் அளிக்க வேண்டும். அப்படிப் புகார் அளித்தால்தான், அது அந்தப் பெண்ணை மட்டுமல்லாது மற்ற பெண்களையும் சேர்த்துப் பாதுகாக்கும். அலுவலகம் என்று இல்லாமல் பொது இடங்களான வங்கி, தபால் நிலையம் இப்படி எந்த அரசு நிறுவனத்தில் பாலியல் துன்புறுத்தல்கள் நடந்தாலும் அந்த நிறுவனத்தில் இருக்கும் பாலியல் துன்புறுத்தல் தடுப்புக் குழுவிலோ மேற்கண்ட இடங்களிலோ புகாரளிக்கலாம்.