தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதமும், அதனைத் தொடர்ந்து கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் பால்வளத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதமும் நடைபெறுகிறது. முன்னதாக சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது, மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழ்நாட்டில் 509 பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளதாகவும், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் கூட மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளதாகவும் கூறினார். மேலும், இதை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இதற்காகவே 5 புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்படுவதாகவும், தொழில்துறை, தொழிலாளர் நலத்துறையுடன் இணைந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். ஒரு பாலிடெக்னிக் கல்லூரி தொடங்குவதற்கு ரூ.44.28 கோடி தேவைப்படுவதாகவும் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் வகையில் கட்டண குறைப்பு தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் பொன்முடி தெரிவித்தார். அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, பாலிடெக்னிக் படித்து முடிக்கும் மாணவர்கள், வரும் கல்வியாண்டு முதல் Lateral Entry மூலம் அண்ணா பல்கலைக்கழகத்திலும் B.E., B.Tech., படிப்புகளில் நேரடியாக 2-ம் ஆண்டில் சேரலாம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.