திருப்பத்தூர் மாவட்டம், தமிழக ஆந்திர எல்லையான கனக நாச்சியம்மன் ஆலயத்தில் பாலாறு ரத யாத்திரை இன்று தொடங்கியது. பாதயாத்திரைக்காக நீர் கொண்டு வரப்பட்டு ஆலய வளாகத்தில் பாலாறு அம்மன் உற்சவர் சிலை வைத்து சாது சன்னியாசிகள் சங்கத்தினர் இன்று சிறப்பு பூஜைகளை செய்து மகாதீபாராதனைகள் காட்டினர். பின்னர், அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் மற்றும் பாலாறு மக்கள் இயக்கம் இணைந்து பாலாறு பாதுகாப்பு விழிப்புணர்வு பாதயாத்திரை மற்றும் ரத யாத்திரையை பாலாறு அம்மன் சிலையுடன் புறப்பட்டது. இந்த புனித ரத யாத்திரை பாத யாத்திரையாகவும் இன்று புல்லூர் கனகநாச்சியம்மன் ஆலயத்திலிருந்து தொடங்கியது. பாலாற்றை பாதுகாக்க வலியுறுத்தி சாதுக்கள் சன்னியாசிகள் சங்கம் மற்றும் பாலாறு மக்கள் இயக்கம் சார்பில் அதன் தலைவர் ஜெய்சங்கர் தலைமையில் விழிப்புணர்வு மாநாடும் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் வீரமணி மற்றும் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில், “மக்கள் பாலாற்றை மாசுப்படுத்தாமலும், ஆக்கிரமிப்பு செய்யாமல் பாதுகாக்க வேண்டியும், ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தவும், பாலாற்றின் பயன்களை மக்களிடம் எடுத்துச்செல்ல இந்த விழிப்புணர்வு யாத்திரை தொடங்கப்பட்டு உள்ளதாக” முன்னாள் அமைச்சர் வீரமணி பேசினார். இந்த ரத மற்றும் பாதயாத்திரை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களின் வழியாக சென்று பாலாறு வங்கக்கடலில் கலக்கும் இடமான கடலூர் சின்னகுப்பத்தில் ஜுன் 5ஆம் தேதி நிறைவு பெறவுள்ளது. இதில், சன்னியாசிகள் பேரவை மற்றும் பாலாறு இயக்கத்தினர் திரளானோர் கலந்துகொண்டு யாத்திரை சென்றனர்.