பாரதியின் புதுமைப் பெண்
தமிழ் இலக்கிய வரலாற்றில் எட்டையபுரத்து எரிமலையாய் எழுந்து நின்றவன், பாட்டுக்கொரு புலவன் பாரதி.
‘சோதி விளக்கின் ஒளிச்சுடராய்
கவிதை உலகின் கலங்கரை விளக்காய்”
தமிழ் இலக்கிய வரலாற்றில் தோன்றியவன் பாரதி நம்மைக் கட்டிப் பிடித்திடும் அவனின் கவிதைச் சொற்கள். கற்பனைக்கெட்டாது அவனின் நடை அழகு. மாய்ந்து கிடக்கும் தமிழ்ச் சமுதாயத்திற்கு விடிவெள்ளி அவனின் படைப்புகள்
‘தமிழ் சுடரே‚ முத்தமிழ் வரமே‚
கவிதை மகளைக் காதலித்தவனே‚”
அடே பாரதி‚ உன்னில் பூத்த புதுமைப் பெண்ணின் நினைவுகளை மெல்லிய பூங்காற்றென வீசுவதற்காக நான் என் எழுதுகோல் பிடித்தேன்.
ஆடம்பரங்கள் அறியா வாழ்வு நின்வாழ்வு
ஆக்கம் தரும் கற்பனைகள் நிறைந்த வாழ்வு நின்வாழ்வு”
சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சமுதாயம் உடல் வலிமையையும், உடல் உழைப்பையும் வைத்தே ஆண் இனம் முதன்மையானது என்றும், பெண் இனம் இரண்டாம் தரமானது என்றும் கருதியது.
அன்றைய சமுதாயம் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டதாக அமைந்திருந்ததால் வயலில் சென்று நெற்றி வியர்வை நிலத்தில் சிந்திப் பாடுபட்ட ஆண்களின் வலிமை சிறப்பாகப் போற்றப்பட்டது. ஆண் குழந்தைகளின் நலன், வளம் அதிகமாகப் பேசப்பட்டது.
கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வந்த காலத்தில் பெண்களைப் பாதுகாப்பது என்பது ஆண்களின் கடமையாக இருந்தது. இயற்கையில் பெண்களுக்கு உடல் வலிமை குறைவு என்று எண்ணி, ஆண்கள் பெண்களை வீட்டிற்குள்ளேயே வைத்து, வீட்டு வேலைகள் செய்தால் போதும் என்று அவர்களுக்குச் சில கட்டுப்பாடுகளை விதித்து முடக்கி வைத்தனர். இதனைக் கண்டு கோபம் அடைந்தான் பாரதி முழங்கினான்‚ பெண்ணின் தன்ஆர்வ சக்தி அவளது மனவலிமையில் உள்ளது என்று குரல் கொடுத்தான். பெண் ஆணை இட்டாள் ஏ‚ ஆணினமே‚ அனலை விழுங்கவும் தயாராக இரு என்றான். தமிழ் கூறும் நல்லுலகில் பெண்ணுக்கு மனவலிமை அதிகம் என்பதை நிரூபித்தான் பாரதி.
பன்னெடுங்காலமாய்த் தமிழ்ச் சமூகம் ஆணின் உடல் வலிமையைப் பேசி வருவதைப் பாரதி சுட்டிக்காட்டுகிறான். ‘பெண்ணின் வலிமை போல் இப்பாரின் மிசை இல்லையடா” என்றான்.
‘பட்டங்கள் ஆள்வதும்
சட்டங்கள் செய்வதும் பாரின் பெண்கள் நடத்த வந்தோம்”
எனப் புதுமைப் பெண்ணை அறிமுகப்படுத்துகிறான் பாரதி.
‘பெண்மையைப் போற்றாத நாடு என்றுமே ஏற்றம் பெறாது என்பது பாரதியின் முடிவான முடிவு அதனால் தான்
‘பெண்ணுக்கு அறிவை வைத்தான் புவிபேணி வளர்த்திடும் ஈசன்”
மண்ணுக்குள்ளே சில மூடர் நல்ல மாதர் அறிவைக்கெடுத்தார்”
என்று சமூகத்தின் மீது அவன் கோபம் வீசப்படுகிறது. தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்களின் அமுதமொழி பாரதியின் சிந்தையில் மேலோங்கி நிற்கிறது.
‘பெண்கள் பிறப்பே பாசம்” என்று கருதும் காலத்தில்தான் பாரதி புதுமைப் பெண்ணுக்கு இலக்கணம் கண்டான். பாரதி எழுதிய ‘தமிழ்நாட்டு மாதருக்கு” எனும் கட்டுரையில் ‘அறிவின் வலிமையே வலிமை, அறிவினால் உயர்ந்த மாதர்களை மற்றோர் இழிவாக நினைப்பதும், அடிமைகளாக நடத்துவதும் சாத்தியப்படமாட்டா‚ ஆண்களுக்குச் சமமான கல்வித்திறமை பெண்களுக்குப் பொதுப்படையாக ஏற்படும் வரை, ஆண்மக்கள் பெண்களைத் தக்கபடி மதிக்க மாட்டார்கள்” தாழ்வாகவே நடத்துவார்கள் என்று 1910-களிலே எழுதினார்.
‘நிமிர்ந்த ஞானச்செருக்கு இருப்பதால் செம்மை மாதர் திரும்புவதில்லையாம்” என்று பெண்கள் மீது மிகப்பெரிய நம்பிக்கையை பாரதி வைத்திருந்தார். பெண்களின் வளர்ந்த ஞானமும் தங்கள் மாண்பின் அடிப்படையில் அமைந்த செருக்கும் அவரவர்களை ஒழுக்கத்தில் நிலை நிறுத்துகிறது. அறிவின் மேன்மையால் சிறந்த உலகைப் பெண்கள் ஆளும் காலம் வரும் எனப் பாரதி புதுமைப் பெண் பற்றிய கனவினைத் தம் பாடல்களில் உயர்த்திப் பிடிக்கிறார்.
‘தாய்க்கு மேல் இங்கே ஓர்
தெய்வம் உண்டோ?
தாய் பெண்ணே யல்லவோ?”
என்று பெண்மையைத் தூக்கிப் பிடித்தான் பாரதி‚ இத்தகைய உணர்வினை இனிவரும் காலம் மாந்தர்கள் பெறட்டும் எனக் கனவு கண்டான் பாரதி‚
வாழ்க பாரதியின் புதுமைப் பெண்.