பாம்பை விட்டு மனைவியை கடிக்க வைத்து கொலை செய்தவனுக்கு கேரள நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது
கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர்கள் உத்ரா -சூரஜ் தம்பதியினர். இவர்களுக்கு 2018 ஆம் ஆண்டு திருமணமான நிலையில்,இவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்துள்ளது. இவர்கள் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு உத்தராவை பாம்பு கடித்தது. அதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துக் கொண்டார். பின்னர் கடந்த மே மாதம் மீண்டும் உத்ராவை கருநாகம் கடித்ததில் அவர் உயிரிழந்துவிட்டார். ‘இரண்டு முறை பாம்பு கடித்தது மற்றும் மாடியில் இருந்த பெண்ணை பாம்பு எவ்வாறு கடிக்க முடியும்?’ என்று உத்ராவின் உறவினர்களுக்கு சந்தேகம் வலுத்த நிலையில்,காவல்துறையில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார் உத்ராவின் கணவர் சூரஜை பிடித்து விசாரித்தனர். அதில் ‘வரதட்சணைக் கேட்டு மனைவியை துன்புறுத்தியதாகவும் அதில் அவருக்கு தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைத்து பாம்பாட்டியிடம் பாம்பை வாங்கி கடிக்க வைத்து கொலை செய்ததாக’ குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் சூரஜ் குற்றவாளி என்றும் தண்டனை விவரம் வரும் 13 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதையடுத்து குற்றவாளிக்கு கேரள நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது