திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கலந்திரா கிராமத்தை சேர்ந்த சௌந்தர் என்பவர் அதே பகுதியில் உள்ள வேடியப்பன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் டிராக்டரில் உழுது கொண்டிருந்துள்ளார். அப்போது, அங்கு இருந்த பழுதடைந்த மின் கம்பம் டிராக்டர் மீது சாய்ந்துள்ளது. இதில் டிராக்டர் வழியாக மின்சாரம் விவசாயி சௌந்தர் மீது பாய்ந்து படுகாயமடைந்தார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சௌந்தரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே மின்கம்பம் மிகவும் பழுதடைந்து இருந்தது குறித்து மின்சார துறையினரிடம் புகார் அளித்தும் பராமரிப்பு நடவடிக்கை எடுக்க தவறியதே இந்த விபத்திற்கு காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.