குண்டு என்று பரிகாசம் செய்தார்கள். எடை தூக்கிப் பயின்றேன். தங்கம் வென்றேன்” என்று பெருமிதம் காட்டுகிறார் டாக்டர் ஆரத்தி அருண்.
2019 ஆசிய பளுதூக்கும் போட்டியில் தங்கம். 2019 காமன்வெல்த் பளுதூக்கும் போட்டிகளில் நான்கு தங்கம், பெஞ்ச் ப்ரெஸ் போட்டியில் ஒன்று.
இந்தச் சாதனைகளை நிகழ்த்தியபோது ஆரத்தி அருணுக்கு வயது 41. ‘மனம் இருந்தால் மார்க்கம் உண்டு’ என்று சிரிக்கிறார் அவர்.
தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஆரத்தி அருண் ஹைதராபாதில் பிறந்து வளர்ந்தார். வழக்கறிஞர் ஆக வேண்டும் என்று கனவு கண்டவரை மருத்துவர் ஆக்கினார் அவருடைய தந்தை. சென்னையில் பல் மருத்துவம் பயின்ற டாக்டர் ஆரத்தி, பல் மருத்துவரான கணவருடன் இணைந்து பல் மருத்துவம் பார்த்துவந்தார்.
பள்ளிக் காலங்களில் மாநில அளவில் பாட்மின்டன் ஆடினாராம் அவர்.
“தேசிய அளவுக்குப் போனால் குட்டைப் பாவாடை போட வேண்டும் என்ற விதி உண்டு. அதனால், எங்கள் வீட்டில் அனுமதிக்கவில்லை” என்று கூறுகிறார் அவர்.
“திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் பிறந்த பின்னால் என் எடை கூடியது. ஜிம்மிற்குச் சென்று பயிற்சிகள் செய்தேன். பளுதூக்கும் பயிற்சிகளும் செய்தேன். இதுவும் ஒரு விளையாட்டுதான் என்று அப்போதுதான் எனக்குத் தெரியும். அதைப் பயின்று சாதனை புரிய நினைத்தேன்” என்று கூறுகிறார் டாக்டர் ஆரத்தி அருண்.
அப்போது அவருக்கு வயது என்ன தெரியுமா? 38.
“நிறையப் பேர், உன்னால் பளு தூக்க முடியாது. இந்த வயதில் உனக்கு இது எதற்கு என்று உற்சாகம் இழக்க வைத்தார்கள்” என்று கூறுகிறார் அவர்.
தன் கடுமையான பயிற்சிக் காலத்தில் குடும்பத்தினரின் ஆதரவுதான் மிகுந்த உற்சாகம் தந்தது என்கிறார் ஆரத்தி அருண்.
பளுதூக்குவதில் மாநில அளவில் அவருக்குத் தங்கம் கிடைத்தது. தேசிய அளவில் பளு தூக்கும் போட்டிகளில் பங்கு கொண்டு தங்கம் வென்றார்.
“நம்மிடமும் ஒரு திறமை இருக்கிறது என்று நினைத்து மேலும் பயின்றேன்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ஆரத்தி.
2019இல் ஹாங்காங்கில் நடந்த ஆசிய பளு தூக்கும் போட்டியில் தமிழகத்தில் இருந்து பங்குகொண்ட ஒரே பெண்ணாக இருந்தார் ஆரத்தி. அதில் அவருக்குத் தங்கம் கிடைத்தது.
அதே ஆண்டு செப்டம்பரில் கனடாவில் நடந்த காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் ஆரத்திக்கு நான்கு தங்கப் பதக்கங்கள் கிடைத்தன. பெஞ்ச் பிரஸ் போட்டியில் ஒரு பதக்கம் கிடைத்தது.
இந்தோனேஷியாவில் இந்த ஆண்டு மே மாதம் நடக்கவிருக்கும் ஆசிய பளுதூக்கும் போட்டிகளில் கலந்துகொண்டு வெல்ல வேண்டும் என்பது ஆரத்தியின் இப்போதைய இலக்காம்.
ஆரத்தியின் மகன் தனிஷ்க் இப்போது கணினி தொழில்நுட்பம் பயின்று வருகிறார். மகள் அகான்ஷா ஏழாம் வகுப்புப் படிக்கிறார்.
தனிஷ்க், கிக் பாக்சிங் போட்டிகளில் தேசிய அளவில் தங்கம் வென்றிருக்கிறார். உலக அளவில் வெண்கலப் பதக்கம் வென்றிருக்கிறார். உலக அளவுக்கான தங்கம் வெல்ல தனிஷ்க் முயன்று வருகிறார்.
“நான் எப்போதாவது மனம் சோர்ந்து போய் அமர்ந்துவிட்டால், கவலை வேண்டாம் அம்மா. உங்களால் முடியும் என்று அவன்தான் எனக்கு ஊக்கம் கொடுப்பான்” என்று பெருமையுடன் கூறுகிறார் தனிஷ்க்கின் தாய் ஆரத்தி அருண்.
தினமும் காலை எழுந்து குழந்தைகளைக் கல்வி நிலையங்களுக்கு அனுப்பிவிட்டு, தன் க்ளினிக் செல்லும் ஆரத்தி நோயாளிகளைப் பார்க்கிறார். மதியம் வீடு வந்து குழந்தைகளுக்குத் தேவையானதைச் செய்துவிட்டு, அவர்களை மாலைநேரப் பயிற்சி வகுப்புகளில் விட்டுவிட்டு ஜிம்மிற்குச் சென்றுவிடுகிறார். பயிற்சி முடித்து குழந்தைகளை பிக் அப் செய்துகொண்டு வீட்டுக்கு வருகிறார்.
“குழந்தைகளின் பள்ளி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்தது குழந்தைகளுக்குக் கொஞ்சம் மன வருத்த மாக இருந்தது. திருமண விழாக்களில் என்னால் கலந்துகொள்ள முடியாமல் இருந்தது. அதுவும் மனச் சுமையைத் தந்தது. இருந்தாலும், குடும்பத்தில் எல்லோரும் என் கடும் உழைப்பைப் புரிந்துகொண்டார்கள்” என்று புன்னகைக்கிறார் ஆரத்தி அருண்.
கணவன், மனைவி இருவருமே பல் மருத்துவர்கள் என்பதால், தன்னால் நோயாளிகளைப் பார்க்க முடியாதபோது கணவர் உதவிக்கு வந்துவிடுவார் என்று கூறுகிறார் ஆரத்தி.
அரசாங்கத்திடம் நிறைய உதவிகளை எதிர்பார்க்கும் ஆரத்தி அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
நிறையப் பெண்கள் இந்தப் பளுதூக்கும் போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார் ஆரத்தி. அதற்காக ஒரு பயிற்சி நிலையத்தைத் தொடங்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
“இது ஒரு பலத்தைக் காட்டும் போட்டி. கொஞ்சம் கொஞ்சமாகப் பளு தூக்கிப் பயின்றால் பலன் தரும்” என்று ரகசியம் உடைக்கிறார் ஆரத்தி.
“உலக அளவிலான பளுதூக்கும் போட்டிகளில் கலந்துகொண்டு இந்தியாவுக்காகத் தங்கம் வெல்ல வேண்டும். ஆசியப் போட்டிகளில் ரெக்கார்டுகளைத் தகர்க்க வேண்டும். உலக அளவில் ரெக்கார்ட் ப்ரேக் செய்ய வேண்டும். அதுதான் என் இலக்கு” என்று கர்வமுடன் சிரிக்கிறார் டாக்டர் ஆரத்தி அருண்.