பரதநாட்டியக் கலைஞர் கரகாட்டக் கலைஞராக மாறிய விந்தைதான் துர்காவின் கதை. சேலத்தைச் சேர்ந்த இவர், நடனத்துறைக்கு வந்ததே எதிர்பாராத விபத்துதான்.
இவருக்கு அம்மா கிடையாது. அப்பா மட்டும்தான். இவரது வீட்டின் அருகில் பரதநாட்டிய மாஸ்டர் இருந்தார். அவர் யதார்த்தமாக இவரை அழைத்து இரண்டு ஸ்டெப் சொல்லிக்கொடுத்தார். முதலில் துர்காவும் இந்தக் கலையின் அருமை தெரியாமல் விளையாட்டுத்தனமாக ஆடினார்.
“அப்போது எனக்கு 10 வயது. குழந்தையாக இருந்து பரதநாட்டியம் கற்றுக்கொண்டதை எல்லோரும் ரசித்தார்கள். அப்பாவும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பரதநாட்டியத்தை நான் நன்றாக ஆடுவதாகவும் எனக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாகவும் என் மாஸ்டர் சொன்னார். அதன்பின் நாட்டியத்தின்மீது மிகுந்த ஆர்வம் ஏற்பட்டு கலைதான் உயிர் என்கிற நிலைக்கு மாறிவிட்டேன். அன்று தொடங்கி சுமார் 25 வருடங்கள் இந்தத் துறையில் பயணம் செய்தாகிவிட்டது” என்று சொல்லும் துர்கா, தற்போது நடனக் குழு ஒன்றை ஆரம்பித்து, குழந்தைகளுக்கு நடனம் கற்றுக்கொடுத்து வருகிறார்.
தன்னை மேடையில் ஏற்றி அழகுபார்த்த குருவுக்கு நன்றிக்கடன் செலுத்தும்விதமாகக் கரகத்தில் பல மாற்றங்களைப் புகுத்தி நடனமாடினார். சுழல் கரகம், அடுக்கு கரகம், நெருப்பு கரகம், 10 பானைகளை வைத்துக் கரகம் என்று பலவகையாக ஆடுகிறார்.
“கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துகொண்டு வரும் சுழல் கரகத்துக்குப் புத்துயிர் அளிக்க வேண்டும். கரகத்தின் மேல் கிளி சுழன்றுகொண்டே இருக்கும். அதைத்தான் சுழல் கரம் என்பார்கள். அந்தக் கரகத்தை இந்த வருடம் கையில் எடுத்து இருக்கிறேன். இந்தத் துறையில் இருந்து ஓய்வு பெறுவதற்குள் அடுத்த தலைமுறையினருக்கு இந்தக் கலையைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை” என்கிறார் துர்கா.
நிறைய மேடை நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தாலும் ‘வேர்ல்டு ரெக்கார்டு’ நிகழ்ச்சி மறக்க முடியாதது என்கிறார்.
“வேர்ல்டு ரெக்கார்டு செய்யும்போது,பயிற்சியே இல்லாமல் தலையில் கரகத்தை வைத்துக்கொண்டு 200 டியூப் லைட்களை காலால் உடைத்தேன். இந்த நிகழ்ச்சியைப் பல டிவி சேனல்களில் ஒளிபரப்பினார்கள். அது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது” என்கிறார் துர்கா.
பெங்களூருவில் தமிழர்கள் வாழும் சிவாஜி நகரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அம்மன் வேடமணிந்து நடனம் ஆடியவரைப் பாராட்டி விருது வழங்கினார்கள். மொழி தெரியாத ஊரில் கிடைத்த அங்கீகாரம் தன்னை மகிழ்வித்ததாகச் சொல்கிறார். கலை பண்பாட்டுத்துறை சார்பில் சமீபத்தில் சென்னை தீவுத்திடலில் முதலமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கரகமாடியதும் முக்கிய நிகழ்வு என்கிறார் அவர்.
வயதைக் காரணம் காட்டியோ அவர்களுடைய மூப்பைக் காரணம் காட்டியோ பெண்களின் திறமைக்கு முட்டுக்கட்டை போட முடியாது என்கிறார் துர்கா.
“பெண்களுக்குத் திறமை இருந்தால் திருமணத்துக்குப் பிறகும் தங்கள் கலைப் பயணத்தைத் தொடரலாம். அதற்கு யாரும் தடை போடாதீர்கள். என் குடும்பத்தில் யாரும் எனக்கு எந்தவிதத் தடையும் போடவில்லை. அதனால்தான் இவ்வளவு சாதனைகள், விருதுகள் எனக்குக் கிடைத்துள்ளன. அதனால், திறமைக்கு யாரும் தடை போடாதீர்கள். பெற்றோர்கள்தான் குழந்தைகளின் திறமைக்கு வழிவிட வேண்டும்” என்கிறார் துர்கா.
பொதுமக்கள் முன்னிலையில் நடனமாடுவதைப் பலரும் தரக் குறைவாக நினைக்கிறார்கள். ஆனால், துர்கா அதற்கும் பதில் வைத்திருக்கிறார்.
“நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகத் தமிழகம் முழுவதும் செல்கிறோம். அங்கே பார்த்தால் மேக்கப் போடுவதற்கோ பெண் கலைஞர்கள் இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்கோ பெரும்பாலான வீடுகளில் அனுமதிப்பதில்லை. ஆனால், நிகழ்ச்சியில் நம் கலைத்திறமையைப் பார்த்த பின்னர் எல்லோரும் வந்து பாராட்டுவார்கள். மக்களை மகிழ்விக்க நினைக்கும் கிராமியக் கலைஞர்களை இழிவுபடுத்தாமல், அவமரியாதை செய்யாமல் தங்களுடைய வீட்டுப் பெண்களைப் போல் நடத்தினாலே போதும்” என்கிறவரின் வார்த்தைகளில் வருத்தம் மேலிட்டது.
உலக சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக 26 நிமிடத்தில் 29 பொருட்களை வைத்து நடனம் ஆடி 2019இல் உலக சாதனை படைத்திருக்கிறார். விருதுகள் பல வாங்கியுள்ளார்.
“என் நடனக் குழுவினர் எனக்குக் கிடைத்த வரம். நிகழ்ச்சியின்போது யாராவது ஒருவர் சிறு தவறு செய்தால், மற்றவர் வந்து அதைச் சரி செய்துவிடுவார்கள். நடனம் என்பதே முழுக்க முழுக்க டீம் ஒர்க்தான். பல கிராமியக் கலைகள் மெல்ல மெல்ல அழிந்துகொண்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் அது ஆபாசம் என்ற வேறொரு பாதைக்குச் சென்றுவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. அதை மீட்டெடுக்க வேண்டும். பாரம்பரிய முறைப்படியே கிராமியக் கலையை மக்கள் ரசிக்க வேண்டும். கொக்கலிக்கட்டை, மயிலாட்டம், மாடாட்டம் போன்ற கிராமியக்கலைகளைப் பல இடங்களில் மக்கள் ரசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்தத் தலைமுறைக்கான புதிய முறையில் கிராமியக் கலைகளை மக்களுக்குக் கொடுத்துவருகிறோம். முடிந்த அளவுக்கு ஒரு பத்துக் கலைஞர்களையாவது உருவாக்க வேண்டும் என்பதும், கிராமியக் கலைக்கு என்று ஒரு அகாடமி ஆரம்பிக்க வேண்டும் என்பதும் என்னுடைய ஆசை” என்று நம்பிக்கையோடு சொல்கிறார் துர்கா.