கால்களைப் பராமரிப்பது எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு முக்கியம் கால்களின் முக்கிய பாகமான பாதங்களைப் பராமரிப்பதும்.
பொதுவாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பாத அமைப்பு இருக்கும். சிலருக்குத் தட்டையான பாதங்கள் இருக்கும்; சிலருக்குக் குழிவான பாத அமைப்பு இருக்கும். எப்படிப்பட்ட அமைப்பு என்றாலும் அவற்றைச் சரியான விதத்தில் பார்த்துக்கொண்டால் சிக்கல் இல்லை.
பாத வலி
பொதுவாக நம் உடலின் மொத்த எடையையும் தாங்கி, நடக்க உதவிபுரியும் பாதங்கள் சில சமயம் வலியால் அவதிப்படும். சிலர் நின்றுகொண்டே வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கும். எடுத்துக்காட்டாக இல்லத்தரசிகள், காவல்காரர்கள், போக்குவரத்து ஊழியர்கள், மேற்பார்வையாளர் என வேலை நிமித்தமாக நீண்டநேரம் நின்றுகொண்டே இருப்பவர்கள் பாத வலியால் அவதிப்படுவார்கள். எனவே, தினமும் சிறிது நேரம் வெதுவெதுப்பான நீரில் கால் பாதங்களை வைத்து எடுத்தால் பலன் காணலாம். இல்லத்தரசிகள், அழகு நிலையங்களில் செய்யப்படும் பெடிக்யூர் எனப்படும் பாதப் பராமரிப்பு சிகிச்சையையும் செய்துகொள்ளலாம். உடனே, நல்ல பலனைக் காணலாம்.
வீட்டிலேயே என்ன செய்யலாம்?
சுடு நீரில் சிறிது கல் உப்பு, நொச்சி இலைகள், சிறிது மருதாணி இலைகள் ஆகியவற்றைக் கலந்து அந்த நீரில் பாதங்களை அரை மணி நேரம் ஊறவைத்து, நன்றாகத் துடைத்துவிட்டால் வலி பறந்து போய்விடும். பாத வலியை இப்படிப் போக்கிவிடலாம். ஆனால், வெடிப்பு வந்தால் என்ன செய்வது? அதற்கும் தீர்வு உண்டு.
பாத வெடிப்பு
அதிக நேரம் நிற்பது, சருமப் பிரச்சினை, ஈரத்தில் இருப்பது, பராமரிப்பு இல்லாமை, அதிக எடை ஆகிய காரணங்களால் பாதங்களில் வெடிப்பு ஏற்படும். அதை அப்படியே விட்டுவிட்டால் வெடிப்புகள் அதிகமாகி, குதிகால் வலி ஏற்படும். அதுமட்டுமல்லாமல், கிருமித்தொற்று ஏற்பட்டு, அது பிரச்சினையில்கூட முடியலாம். எனவே, பாத வெடிப்பு ஏற்பட்ட உடனே அதைச் சரிசெய்ய வேண்டும்.
குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் எப்படியாவது பாத வெடிப்பு வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், அவர்களுக்கு வெடிப்பு ஏற்பட்டால் விரைவில் ஆறாது. ரணம் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே, அவர்கள் கை வைத்தியம் ஏதும் செய்யாமல் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது நலம்.
மற்றவர்கள் வாரத்தில் இரண்டு முறை மரு தாணி இலைகளைச் சிறிது விளக்கெண்ணெய், மஞ்சள் சம அளவு எடுத்துக் குழைத்து பாத வெடிப்புகளில் பூசினால் நல்ல பலனைக் காணலாம். மேலும், ஏற்கனவே சொன்னதைப்போல அழகு நிலையங்களில் செய்யப்படும் பாத வெடிப்பு சிகிச்சை அதாவது பெடிக்யூர் செய்தால் உடனே நல்ல பலன் கிடைக்கும். பின்னர் தினமும் வெடிப்புகளில் தேங்காய் எண்ணெய் தடவ வேண்டும். குளிக்கும்போது நார் கொண்டு நன்றாகத் தேய்க்க வேண்டும்.
தொற்று ஏற் படாமல் இருக்க தினமும் தூங்கும் போது தேங்காய் எண்ணெய், மஞ்சள் கலந்து தேய்த்துக்கொண்டு படுத்தால் தொற்றால் வரும் பிரச்சி னைகளைத் தவிர்க்கலாம்.
வாரத்தில் இரண்டு முறை மருதாணி இலைகளை நன்றாக அரைத்துப் பாத வெடிப்புகளில் தடவிவர வெடிப்பு சரியாகும்.
குப்பைமேனி இலைகள் மற்றும் மஞ்சள் சேர்த்துக் குழைத்து வெடிப்புகளில் போடலாம்.
நகப் பராமரிப்பு
வாரத்தில் ஒரு நாள் நகங்களை நன்றாக வெட்டி சுத்தப்படுத்த வேண்டும். நகங்களில் அழுக்கு சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
அடிக்கடி உடையும் நகங்கள் உங்களைச் சங்கடப்படுத்துகிறதா? கவலையை விடுங்கள். இரண்டு சொட்டு ஆலிவ் எண்ணெய் எடுத்து தினமும் தூங்கச் செல்லும்முன் நகங்களில் பூசலாம். சுடுநீரில் சிறிது கிளிசரின் கலந்து நகங்களை ஊறவைக்கலாம்.
நகங்களைக் கடிக்கும் பழக்கம் இருந்தால் அதை விட்டுவிடுங்கள். பெரிய நகங்களை வளர்க்க நினைக்காமல் ஓர் அளவோடு வைத்துக்கொண்டாலும் உடையாது. கால்சியம் நிறைந்த உணவுகளைச் சாப்பிட்டாலும் நகங்கள் ஆரோக்கியமாக இருக்கும். இவ்வளவையும் செய்யத்தான் வேண்டுமா என்று அலுப்பாக இருக்கிறதா? பாதங்கள் கீழேதானே இருக்கிறது; யார் பார்க்கப் போகிறார்கள் என அலட்சியப்படுத்த வேண்டாம். ஏனெனில் பாதங்களை நன்றாகப் பராமரித்தால் முகப்பொலிவு ஏற்படும். நம் உடம்பில் உள்ள அனைத்து முக்கிய நரம்பு முடிச்சுகள் நம் பாதத்தில்தான் உள்ளன. எனவே அவற்றைச் சரியாகப் பராமரித்தால் நம் உடலும் அழகாகவும் ஆரோக்கியமாகவும் மாறும்.
………..