இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்ட சர்தார் வல்லபபாய் படேலுக்கு, குஜராத்தின் நர்மதை நதிக்கரையோரம் 182 மீட்டர் (597 அடி) உயரத்தில் பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டது. இந்தச் சிலையை பிரதமர் மோடி 2018ம் நாட்டுக்கு அர்ப்பணித்தார். அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையைவிட இரண்டு மடங்கு உயரம் கொண்ட இந்த சிலை, உலகிலேயே உயரமானதாகும். இந்தச் சிலையை உருவாக்குவதற்காக சுமார் 3,000 கோடி ரூபாய் செலவிடப்பட்டது குறித்து அப்போது எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையாக விமர்சித்தன. ஆனாலும், ஆளுங்கட்சியினர் கொண்டாடவே செய்தனர். அரசியல்வாதி மூலம் ஆரம்பித்த பிரதமரின் மோடியின் சிலைப் பயணம் இன்று ஆன்மிகத்தில் வந்து நிற்கிறது. படேல் சிலைக்குப் பிறகு ஹைதராபாத்தில் ராமானுஜரின் சிலையை திறந்துவைத்தார். இது, ஐந்து உலோகங்களைக் கொண்டு 216 அடி உயரத்தில், சுமார் 1,000 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டது. இந்தச் சிலையில் 120 கிலோ தங்கம் இடம்பெற்றுள்ளது. தாமரை மலர் பீடத்தின்மீது அமர்ந்த நிலையில் நிறுவப்பட்டுள்ள இச்சிலையின் பீடத்தில் 54 தாமரைகள் நன்றாகவே மலர்ந்துள்ளன. இந்தச் சிலை, இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய சிலை என்ற இடத்தைப் பிடித்தது. இதற்கிடையே ராஜஸ்தானில் ஸ்ரீவிஜய் வல்லப் சுரீஷ்வர் ஜி மகாராஜின் உலோகச் சிலையும், டெல்லியில் லேசர் முறையிலான முப்பரிமாண நேதாஜி சிலையும் மகாராஷ்டிரத்தில் சத்ரபதியின் சிவாஜி சிலையும் திறக்கப்பட்டன. இந்த நிலையில், இன்று குஜராத்தில் 108 அடி அனுமன் சிலையை காணொலி காட்சி வாயிலாக திறந்துவைத்து சாதனை படைத்திருக்கிறார், மோடி. 10 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இந்தச் சிலைபோல் தெற்கில் ராமேஸ்வரத்திலும், கிழக்கில் மேற்குவங்கத்திலும் அனுமன் சிலை நிறுவப்படும் என்று கூறியுள்ளார்.