நீலகிரி மாவட்டத்தில் நடுத்தர குடும்பத் தில் பிறந்து வளர்ந்த கவிப்பிரியா, இன்று இந்திய அளவில் இளம் பெண் தொழில்முனைவோரில் பிரதான இடத்தைப் பிடித்துள்ளார். சிறு வயதில் தந்தையின் மரணத்தைப் பார்த்த கவிப்பிரியாவின் மனதில் அது நீங்காத வடுவாக அமைந்தது. இருப்பினும் மனம் தளராமல் தொடர்ந்து தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு இன்று இளம் தொழில்முனைவோராக சென்னையில் வலம் வருகிறார்.
குளு குளு மலைப்பிரதேசமான ஊட்டியில் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்த கவிப்பிரியா அதுவரை சென்னைக்கே வந்ததில்லை. முதல்முறையாகக் கல்லூரியில் சேருவதற்காக சென்னை வந்த அவர் லயோலோவில் விஸ்காம் படித்தார். படிக்கும்போதே ஆடிங் ஸ்மைல்ஸ் என்ற பிராண்டிங் நிறுவனத்தை உருவாக்கிய அவர் படிப்படியாக அந்த நிறுவனத்தை வளர்த்தெடுத்துள்ளார்.
தனது தோழி உட்பட 3 பேருடன் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில் இன்று 63 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் தொழில்முனைவோருக்கான பிராண்டிங் செய்யும் பணிகளை அவரது நிறுவனம் கவனித்துக் கொள்கிறது. டாடா, இன்ஃபோசிஸ், தோஹா வங்கி உள்ளிட்ட பல முன்னணி தொழில் நிறுவனங்களுக்கு பிராண்டிங் செய்துக் கொடுத்திருக்கிறார் கவிப்பிரியா.
இது மட்டுமல்லாமல் தனது விஸ்காம் படிப்புக்கேற்றவாறு குறும்படம், விளம்பரப்படம், ஆவணப்படம் உள்ளிட்டவைகளைப் பல முன்னணி கம்பெனிகளுக்கு செய்து கொடுத்து வருகிறார். குடும்பத்திலோ, உறவினர்களிடம் இருந்தோ எந்தவொரு உதவியையும் எதிர்பார்க்காமல் முழுக்க முழுக்க தனது திறமை, படிப்பு, உழைப்பு ஆகிய மூன்றை மட்டும் மூலதனமாகக் கொண்டு இவர் இந்த வளர்ச்சியை அடைந்துள்ளார்.
தேசியளவில் ரத்தன் டாடா, இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி, கிரண் மஜும் தார் உள்ளிட்ட பல பிரபலமான தொழிலலதிபர்களை பேட்டி காணும் வாய்ப்பையும் இவர் பெற்றிருக்கிறார். இதனிடையே கடந்தாண்டு டைம்ஸ் நிறுவனம் சார்பில் “பிஸினஸ் பெர்சன் ஆஃப் தி இயர் 2019” என்ற விருதையும் பெற்றிருக்கிறார். எதிர்காலத்தில் இந்தியாவின் தலைசிறந்த பிராண்டிங் நிறுவனமாகத் தனது ஆடிங் ஸ்மைல்ஸ் மற்றும் ஆடிங் லீடர்ஸ் என்ற நிறுவனங்களைக் கொண்டு வருவதும், சிறந்த பெண் தொழில்முனைவோராகத் தாம் வரவேண்டும் என்பதும் கவிப்பிரியாவின் கனவாகவும், லட்சியமாகவும் இருக்கிறது.
லயோலாவில் படித்துமுடித்தவுடன் ஸ்காலர்ஷிப் மூலம் அமெரிக்காவின் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படிக்கும் வாய்ப்பும் கவிப்பிரியாவுக்குக் கிடைத்திருக்கிறது. கல்லூரியில் சேரும் வரை சென்னை எந்தப் பக்கம் இருக்கிறது என்று கூட தெரியாத இவர், அமெரிக்காவில் படிக்க கிடைத்த வாய்ப்பை முறையாகப் பயன்படுத்தி தனது திறமையை மேலும் வளர்த்துக் கொண்டார்.
பெண்கள் எந்த ஒரு காரியத்தில் இறங்கி னாலும் உறுதியுடனும் விடாமுயற்சியுடனும் போராடி அதில் வெல்ல வேண்டும் எனக் கூறுகிறார் கவிப்பிரியா. சிறு வயதில் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் மட்டும் வளர்ந்து இன்று தனது தந்தை இருந்திருந்தால்கூட செய்ய முடியாத பல சாதனைகளைத் தனித்தே செய்திருக் கிறார் கவிப்பிரியா.