நேபாள நாட்டில் உள்ள போகாரா என்னும் சுற்றுலா நகரில் இருந்து ஜோம்சம் நகருக்கு 22 பேருடன் தாரா ஏர் என்ற விமானம் நேற்றுமுன்தினம் காலை புறப்பட்டு சென்றது. இந்த விமானம் புறப்பட்ட 15ஆவது நிமிடத்தில் இருந்து விமான நிலைய அதிகாரிகளுடனான தொடர்பு நின்றுபோய் விமானம் மாயமானது. இந்த விமானத்தில் 4 இந்தியர்கள், 2 ஜெர்மனியர்கள், 13 நேபாள பயணிகளுடன் 3 விமான ஊழியர்களும் பயணித்தனர். இதனை தொடர்ந்து தேடுதல் பணியில் நேபாள ராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. அதில், முஸ்டங் மாகாணம் தசங்-2 என்ற பகுதியில் உள்ள சனோஸ்வெர் என்ற இடத்தில் உள்ள மலைப்பகுதியின் மீது மோதி விமானம் விபத்தில் சிக்கியது தெரியவந்துள்ளது. மேலும் விமானத்தில் பயணித்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் 15 பேர் அடங்கிய நேபாள ராணுவ வீரர்கள் குழு ஈடுபட்டு இருந்தது. அந்த இடத்தில் மீட்பு பணியில் ராணுவம் ஈடுபட்டனர். இந்த விபத்தில், விமானத்தில் பயணித்த 22 பேரின் உடலையும் முழுவதும் சிதைந்த நிலையில் கண்டுபிடித்துள்ள அந்த நாட்டு ராணுவத்தினர் உயிரிழந்தவர்களின் உடலை காத்மாண்டுவுக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றுள்ளனர். இதற்கிடையில் விமானத்தின் கருப்பு பெட்டியை மீட்பு படையினர் கண்டுபிடித்தனர். இனி கருப்பு பெட்டியை ஆய்வு செய்த பின்னரே விபத்துக்கான முழுமையான காரணங்கள் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.